சென்னை: “சக திரைத்துறை நடிகையை மோசமாக பேசியிருப்பது என் மனதை காயப்படுத்தியுள்ளது. உரியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நடிகர் மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “நெய்வேலி அருகே ஒரு படப்பிடிப்பில் உள்ளேன். காலையிலிருந்து என்னை தொலைபேசியில் நூற்றுக்கணக்கானோர் தொடர்பு கொண்டனர். அரசியல்வாதி ஒருவர், கேவலமான, அருவருக்கத்தக்க வகையில் என் திரைத்துறையில் உள்ள சக நடிகையை அவதூறாக பேசியுள்ளதாக சொன்னார்கள். சம்பந்தப்பட்ட நபர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
சமத்துவம் படைத்த தமிழகத்தில் இப்படியான கீழ்த்தரமான பேச்சு கண்டிக்கத்தக்கது. சுயலாபத்துக்காகவா? எதற்காக இப்படி பேசினார் என்று தெரியவில்லை. சக திரைத்துறை நடிகர் குறித்து மோசமான முறையில் பேசியிருப்பது என் மனதை காயப்படுத்தியுள்ளது. இதுபோன்ற பேச்சுகள் ஆபத்தானவை, அருவருக்கத்தக்கவை. உரியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
த்ரிஷா கண்டனம்: சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூவின் அவதூறு கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, “கவனம் பெற எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும் கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது. இது தொடர்பாக உரிய, கடுமையான நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும். இனிமேல் சட்டரீதியாகத்தான் எல்லாவற்றையும் சொல்லபோகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.