தன் வீட்டின் அருகிலிருக்கும் சலூனில் முடிதிருத்தம் செய்யும் சாச்சாவின் (லால்) அபாரத் திறமையைப் பார்த்து சிறுவயதிலேயே பெரிய ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் எனக் கனவு காண்கிறான் கதிர் (ஆர்.ஜே.பாலாஜி). `முடிதிருத்துவது வெறும் தொழில் அல்ல கலை’ என அதன்மீது தீராக்காதல் கொள்கிறான். வழக்கமான தடைகளைக் கடந்து ஹீரோ எப்படி வெல்கிறான் என்பதே `சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ஒன்லைன்.
டைமிங் ஒன்லைனர்களில் கலக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கு இந்தப் படத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் கிட்டியிருக்கின்றன. அவற்றில் டிஸ்டிங்க்ஷன் பெறவில்லையென்றாலும் கதிர் என்ற கதாபாத்திரமாகப் பொருந்திப்போகிறார். ஆனால், அவருடன் நம்மை முழுவதுமாக ஒன்றவிடாமல் செய்துவிடுகிறது மிகவும் சாதாரணமாக எழுதப்பட்டிருக்கும் அவரது கதாபாத்திர வரைவு. நாயகியாக வரும் மீனாக்ஷி சௌத்ரிக்கு அழுவதைத் தவிரப் பெரிதாக வேலை இல்லை. குறையொன்றுமில்லாமல் அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.
கிஷன் தாஸ், தலைவாசல் விஜய், லால் எனக் குணச்சித்திர வேடங்களில் வருபவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ஆனால், இவர்களையெல்லாம் தாண்டி படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்வது சத்யராஜ்தான். கஞ்சத்தனம் மிகுந்த மாமனாராக அவர் செய்யும் அலப்பறைகள் காமெடி பட்டாசு. அதிலும் இடைவெளிக்கு முந்தைய பத்து நிமிடங்கள் செம லூட்டி! அவர் என்ட்ரி லேட்டாக இருந்தாலும் அவரது நகைச்சுவைதான் முதல் பாதியின் ஹைலைட். கதை அவ்வப்போது ஒரே இடத்தில் தேங்கி நின்றாலும், சிறுவயது காட்சிகளிலிருந்தே நகைச்சுவையைச் சரியான அளவில் சேர்த்து ஜாலியான வைபில் நம்மை வைத்திருப்பதில் வெற்றிகாண்கிறார் இயக்குநர் கோகுல்.
ஆனால், எப்போது படம் சீரியஸ் மோடில் பயணிக்க ஆரம்பிக்கிறதோ அப்போதிலிருந்தே தொடர் சறுக்கல்தான். மழை, வெள்ளம், டிவி ரியாலிட்டி ஷோ, வாழும் இடத்தை விட்டு வேறு இடத்தில் குடியமர்த்தப்படும் மக்களின் வாழ்க்கை, அழியும் பறவைகளின் வாழ்விடங்கள், சமூக வலைதளப் புரட்சி எனக் கருத்துச்சொல்லும் தமிழ்ப்படங்களின் க்ளீஷேக்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக டிக் அடித்துச் சேர்த்திருக்கிறார்கள். ‘விவசாயத்தைக் காப்போம்’ என்ற கருத்தை மட்டும் எப்படி மிஸ் செய்தார்கள் எனத் தெரியவில்லை.
இவற்றுள் ஏதேனும் ஒரு விஷயத்தை மட்டும் சிரத்தையுடன் எடுத்து பார்வையாளர்களுக்குக் கடத்த முயன்றிருந்தால் கூட அது போதிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே, நாயகனுக்கு இருக்கும் பிரச்னைகளுக்கு நடுவில் இத்தனை பிரச்னைகளைப் படத்தில் பேச வேண்டிய கட்டாயம் என்ன என்பது புரியவில்லை. முதல் பாதியிலிருந்த கலகலப்பும் இதனால் காணாமல் போய்விடுகிறது.
இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகள் யதார்த்தத்திலிருந்து மிகவும் விலகியே நிற்கின்றன. எமோஷனலாக எதனுடனும் நம்மால் தொடர்புப்படுத்திக்கொள்ள முடியாமல் போவதால் இரண்டாம் பாதி முழுவதுமே நம்மைச் சோதித்து விடுகிறது. டான்ஸ் ரியாலிட்டி ஷோ, அந்தப் பகுதி இளைஞர்களின் பிரச்னை போன்றவற்றை மேம்போக்காக, கதையின் சுவாரஸ்யத்துக்கு மட்டும் பயன்படுத்த நினைத்திருப்பது ஏமாற்றமே!
விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை என்றாலும் வேகத்தடையாக இல்லாமல் கதையின் போக்குடனே வருவது ஆறுதல். ஜாவேத் ரியாஸின் பின்னணி இசையும் படத்திற்குச் சேதாரம் எதுவும் ஏற்படுத்தாமல் தேவையானதைச் செய்திருக்கிறது. சாச்சாவின் கத்திரி போல எடிட்டர் செல்வகுமாரின் கத்தரியும் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகள் நடக்கும் அந்த சிங்கப்பூர் சலூன் கடை செட்டப்பை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். கலை இயக்குநர் ஜெயச்சந்திரனுக்கு வாழ்த்துகள். கிளிகள் கூட்டமாக வரும் CG காட்சிகள் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம்.
யதார்த்துக்கு மிக நெருக்கமாக, அக்கட தேசத்து ஃபீல்குட் படம் போலத் தொடங்கி காமெடி படமாக உருமாறி கடைசியில் கருத்தூசி போட்டு நம்மை வெளியில் அனுப்பிவைக்கிறார்கள். நன்றாக முடி வெட்டிய பிறகு சலூன்களில் `அந்த சர்வீஸ் வேணுமா இந்த சர்வீஸ் வேணுமா?’ எனக் கேட்கும்போது தேவையில்லாத ஒரு சர்வீஸைத் தேர்வுசெய்துவிட்ட உணர்வைத் தருகிறது `சிங்கப்பூர் சலூன்’!
+ There are no comments
Add yours