சின்னத்திரை நடிகராக நமக்கு பரிச்சயமானவர் நடிகர் சாய்ராம். அண்மையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான `நீ தானே எந்தன் பொன்வசந்தம்’ தொடரில் நடித்திருந்தார். பாடகர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.
அவரிடம் பேசியதிலிருந்து, “பாடகர் ஆகத்தான் என் கெரியர் ஆரம்பிச்சது. கச்சேரிகளில் ரொம்பவே பிஸியா இருந்த நாட்கள் அது. எனக்கு டிவியில் நடிக்கணுங்கிற ஆர்வம் எல்லாம் அப்ப கிடையாது. நடிகர் பாஸ்கி என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட். அவர் மூலமா ஆக்சிடென்ட் ஆக எனக்கு அமைஞ்சது தான் சீரியல் வாய்ப்பு. ஆரம்பத்தில் எனக்காக ஷூட்டிங் ஞாயிற்றுக்கிழமைகளில் வைப்பாங்க. ஏன்னா அன்னைக்கு ஒரு நாள் தான் எனக்கு லீவு இருந்தது. தொடர்ந்து சீரியல், கச்சேரின்னு பிஸியாகவும் தான் வேலையை விட்டேன். அதுவரைக்கும் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணி தான் பண்ணிட்டு இருந்தேன்.
விடாது சிரிப்புல தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடிச்சிட்டு இருந்தேன். அப்ப தான் மெயின் காமெடி ரோலில் `திரு திரு மாயாண்டி’னு ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்தத் தொடர் எனக்கு நல்லதொரு அடையாளத்தைக் கொடுத்துச்சு. அதைப் பார்த்துட்டு ஏவிஎம்ல நடிக்க கூப்பிட்டாங்க. அப்படித்தான் ஏவிஎம் தொடர்களில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. ஏவிஎம்ல தொடர்ந்து சீரியல்கள் பண்ணினேன்.
கே.பாலச்சந்தர் சார் எனக்கு தெய்வம் மாதிரி. அவருடைய இயக்கத்தில எல்லாம் நான் நடிப்பேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல. ஆனால், அதுவும் நடந்துச்சு. தவிர, `நினைத்தாலே இனிக்கும்’னு அவரை வச்சு தனியா நான் ஒரு ஷோ பண்ணினேன். அவருடைய சீரியலில் நடிச்சதும் சரி, அவரை வச்சு ஷோ டைரக்ட் பண்ணினதும் சரி என் வாழ்க்கையில் ஆஸ்கார் வாங்கினதுக்கு நிகராகத்தான் அத நினைக்கிறேன்!” என்று அவருடைய கடந்த காலம் குறித்த விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
“2012 இல் என் வாழ்க்கையில் ரொம்ப மோசமான காலம். அப்ப தான் எனக்கு கணையப் புற்றுநோய் (pancreatic cancer) இருக்கிற விஷயம் தெரிஞ்சது. என் குடும்பம், என் நண்பர்கள், மருத்துவர்கள் எல்லாரும் கொடுத்த ஊக்கம் இன்னைக்கு நல்லா இருக்கேன். அந்த சமயம் கிரியா யோகா ரெகுலராகப் பண்ணிட்டு இருந்தேன். அதுவும் எனக்கு கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்துச்சு. நான் இப்ப கேன்சர் சர்வைவர் தான். சில வியாதி பெயர் சொன்னாலே மக்கள் பயப்படுற அளவுக்கு ஆக்கிட்டாங்க. உண்மையில் அப்படியெல்லாம் இல்ல. சீக்கிரம் பிரச்னை என்னன்னு தெரிஞ்சிகிட்டாலே போதும்.
அந்த சமயம் என் மெடிக்கல் இன்ஸூரன்ஸையும் தாண்டி அதிகம் செலவாச்சு. 80 கிலோ இருந்த நான் 40 கிலோ ஆகிட்டேன். நடிகை நித்யா என்னுடைய ஃப்ரெண்ட். அவங்க என்னை தினமும் மோடிவேட் பண்ணிட்டே தான் இருப்பாங்க. என் தங்கையும், அவங்க கணவரும் சேர்ந்து விளம்பரப் படங்கள் எடுக்கும் கம்பெனி நடத்திட்டு இருந்தாங்க. சில சீரியல்களையும் அவங்க புரொடியூஸ் பண்ணினாங்க.
அவங்களுடைய கார்ப்பரேட் படங்களை அபிஷேக் தான் டைரக்ட் பண்ணினார். அவர்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்ந்தேன். அங்க தான் ஆவணப்படம் எப்படி இயக்கணும், விளம்பரப்படங்கள் எப்படி பண்ணணுங்கிற வித்தியாசம் தெரிஞ்சிகிட்டேன். அந்த சமயம் பணம் தேவைப்பட்டுச்சு. கடன் அடைக்கணும், பசங்களும் அப்ப செட்டில் ஆகல. ஆனா, எல்லாத்திலிருந்தும் நண்பர்கள், ஃபேமிலி மூலமா மீண்டு வந்துட்டேன்!” எனப் புன்னகைத்தவர் இன்னும் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
நடிகர் சாய் ராமின் முழுப் பேட்டியைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours