Cheran's Journey: கம்பேக் கொடுக்கும் இயக்குநர் சேரனின் இந்தப் புதிய பரிமாணம் எப்படியிருக்கிறது?

Estimated read time 1 min read

உங்களிடம் ஒரு கேள்வி… பத்து நொடிகளுக்குள் பதில் சொல்லுங்கள்!

`சேரன் கடைசியாக இயக்கிய படத்தின் பெயர் என்ன?’

இதற்கான பதிலை விக்கிப்பீடியா பார்க்காமல் பத்து நொடிகளுக்குள் சரியாகச் சொல்லியிருந்தால் நீங்கள் நிச்சயமாக 90ஸ் கிட்ஸ்தான். மாறாக விக்கிப்பீடியாவில் பார்த்து, 2019-ல் வெளிவந்த ‘திருமணம்’ என்று ‘அறிந்து கொண்டீர்கள்’ என்றால் நீங்கள் 2கே கிட் என்பதாக அர்த்தம். உங்களுக்கு, அதாவது 2கே கிட்ஸை மனதில் வைத்து சேரன் எடுத்திருக்கும் இந்த வெப்சீரிஸ் க்ளிக் ஆகிறதா?

Cheran’s Journey

நிற்க.

த்ரில்லர், ப்ளாக் காமெடி சீரீஸ்கள் ஓடிடி தளங்களில் வகைதொகை இல்லாமல் ஹிட்டடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது இயக்குநர் சேரனின் ‘Cheran’s Journey’. 2019-க்குப் பிறகு இயக்குநராகக் களமிறங்கியிருக்கிற சேரனின் இந்தப் புதிய பரிமாணம்… புதிய பரிணாமப் பயணம் ‘Cheran’s Journey’ உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய பயணமா… இல்லை கடந்துவிட வேண்டிய ஒன்றா?

வாங்கப் பார்க்கலாம்!

தலைப்பே இது பயணம் பற்றிய கதை என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறது. ஆனால், இது ரோடு மூவி போலப் பயணம் பற்றிய சீரீஸ் இல்லை. லட்சியக் கனவோடு வாழும் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஐந்து பேரின் Slice of life என்ற `வாழ்க்கைப் பயணக்’ கதை…

இந்தியாவின் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனத்தின் அதிபர் சரத்குமார், புதிய மாடல் எஸ்யூவி கார் ஒன்றை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த முடிவெடுக்கிறார். அந்தப் பணியைத் தலைமையேற்றுச் செய்ய ஒரு பதவி உருவாக்கப்படுகிறது. மிகப் பொருத்தமான ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க, பல கட்ட தேர்வுகளைக் கடந்து இறுதிக்கட்டத்தில் இந்த 5 பேர் நிற்கிறார்கள்.

Cheran’s Journey

வெவ்வேறு விதமான வாழ்க்கைச் சூழலும், போராட்டங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அவர்களை அந்த வேலையை நோக்கி நெட்டித் தள்ளுகிறது. வேலை கிடைத்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது என ஒவ்வொருவரின் கதையும் டீட்டெய்லாக விவரிக்கப்படுகிறது. அந்த வேலை அவர்களுக்குக் கிடைத்தால் பிரச்னை தீர்ந்துவிடும்தான். ஆனால், ஐந்து பேரில் யார் அந்த ஒரு அதிர்ஷ்டசாலி?

வெப்சீரீஸ் முழுக்க ஐந்து பேரின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாக மாறிமாறி வருகிறது. தேர்வுமுறையில் ஓர் அங்கமாக அவர்களின் பின்னணி ஒருவரால் தொகுக்கப்பட்டு, சரத்குமாரிடம் சொல்லப்படுகிறது. இறுதியில் யார்தான் வென்றார்கள் என்பதைப் பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள அஜித் குமாரின் சமீபத்திய படங்களின் ‘டைட்டில்கள்’ நமக்குத் தேவைப்படுகின்றன.

யார் அந்த ஐந்து பேர்?

அமீர் சுல்தான் (கலையரசன்)… எம்.டெக்கில் முதலிடம் பெற்றவர். அவர் இஸ்லாமியராக இருப்பது அவரின் ஒரே பிரச்னை (என்பதாகக் காட்டப்படுகிறது). அவரது மத அடையாளத்தை வைத்தே அவருக்குக் கிடைக்கும் இயல்பான விஷயங்களும், உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. அவரின் இழப்புகள் அவரை ஒரு பெரிய வேலையை நோக்கிச் செல்ல வைக்கின்றன.

ராகவ் (பிரசன்னா)… நிறைய கனவுகளோடு அமெரிக்காவுக்கு வந்த இந்திய இளைஞன். வசதிகளோடும், உதவும் மனப்பான்மையோடும் இருக்கும் பிரணவுக்கு ட்ரெம்ப் கொண்டு வந்த புதிய விசாக் கொள்கையினால் அமெரிக்க வேலை பறிபோகிறது. தன்னுடைய கனவுகளை அடைகாத்துக் கொள்ள அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு… மிகப்பெரிய வேலை!

Cheran’s Journey

நித்திஷ் (காஷ்யப்)… ஒரு நாள் போதையில் தான் செய்த ஒரு செயலால் வட இந்தியா முழுக்க சோஷியல் மீடியாவில் வெறுக்கப்படும் வைரல் நபராக மாறிவிடுகிறார். தான் மிகவும் நேசிக்கும் தன் குடும்பம், காதலி எல்லோராலும் வெறுக்கப்படுகிறார். இதனால் அவர் எடுக்கும் கடைசி முடிவு… ஒரு கௌரவமான வேலையில் அமர்வது!

பிரணவ் (ஆரி)… சமூக உணர்வுள்ள இளைஞன். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முழு நேர அரசியல்வாதியாக மாற நினைக்கும் அவனுக்கு தன் சகோதரனின் மரணத்துக்குப் பின் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் நிர்ப்பந்தம். அதனால் ஒரு வேலையைத் தேடிச் செல்கிறார்.

லதா (திவ்ய பாரதி)… சுயமாக முன்னேற நினைக்கும் பட்டதாரி. விவசாயமே இந்தியாவின் அடையாளம்! விவசாயத்தின் மூலம் இங்குப் பெரிய சமூக மாற்றத்தை உண்டு பண்ணலாம் என்பதை உணர்ந்து அதற்கான உதவிகளுக்காக ஒரு வேலையைத் தேடிச் செல்கிறாள்.

இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இருக்கும் தேவைகள் சம்பளத்தை வாரிக்கொடுக்கும் ஆட்டோமொபைல் கம்பெனியின் முக்கியமான வேலையை நோக்கி அழைத்து வருகிறது. போதும் போதும் என்கிற அளவில் நெகிழ்ச்சித் தருணங்களைக் கொண்ட நேர்முகத் தேர்வின் இறுதிக்கட்டம் சற்றே நாடகத் தனத்தோடு வடிவமைக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த பின்னணிக் கதைகளையும் கேலிக்கு உள்ளாக்குகிறது. வித்தியாசமான ‘ஜனநாயகத்’ தேர்வுமுறையை சரத்குமார் கொடுப்பதில் நம்பகத்தன்மையே இல்லை.

9-வது எபிசோடில் யார் தேர்வாகிறார்கள் என்பதைக் காட்டியிருக்கிறார் சேரன். ஆனால், முதல் எபிசோடில் இருந்து ஒவ்வொரு எபிசோடாகக் மாறிமாறி டீட்டெய்லாகக் காட்டப்பட்டதையே, சற்றே பெரிய அந்த இறுதி எபிசோடிலும் மீண்டும் ஜெயப்பிரகாஷ் விளக்குவதாகக் காட்சிப்படுத்தியது ஏன்?

Cheran’s Journey

டெக்னிக்கலாக சத்யாவின் பின்னணி இசையும் ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் நேர்த்தியாக இருப்பது இந்த வெப்சீரீஸின் பலம். ஆனால், எடிட்டிங் ஏரியாவில் சறுக்கல்.

ஒட்டுமொத்த வெப் சீரீஸிலும் கலையரசனும் பிரசன்னாவும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால் கலையரசனின் அமீர் பாத்திரம் இன்னும்கூட காத்திரமாக வடிவமைத்திருக்கலாம். பல இடங்கள் யதார்த்தத்தைத் தாண்டி பரிதாபத்தைக் கோருகிறது. அமீர் சுல்தானின் தந்தையாக வரும் மறைந்த மலையாள நடிகர் மம்முகோயா கொஞ்சநேரமே வந்தாலும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ராகவ்வின் பிரச்னையின் வீரியம் காட்சிகளில் இல்லை. திவ்யபாரதியின் பிரச்னைகளில் அழுத்தம் குறைவு. தவிர ஒட்டுமொத்தமாக சீரீஸ் முழுக்க வசனங்களாக நிரப்பப்பட்டிருப்பதும் மைனஸ். இதில் அந்த டெல்லி இளைஞர் காஷ்யப்பின் வசனங்களும் பிரச்னையும் ‘அதுக்கு என்ன இப்போ?’ என்றே நம்மைக் கேட்க வைக்கின்றன. அந்த அமெரிக்கப் பெண் பாத்திரம் மட்டும் கியூட்!

இவர்களைத் தவிர சரத்குமார், ஜெயப்பிரகாஷ், அனுபமா, ஆடுகளம் நரேன், பரணி, வேல.ராமமூர்த்தி என்று நிறைய பேர் கதை மாந்தர்களாக வந்து போகிறார்கள்.

சிறுபான்மையினர் மீது இருக்கும் வெறுப்பரசியல், விவசாயம் பற்றிய அடிப்படை புரிதல், அமெரிக்க வேலையில் இருக்கும் சிக்கல்கள், இளைஞர்கள் அரசியலுக்குள் வருவதற்கு இருக்கும் தடைகள், சமூக வலைதளங்களால் உண்டாகும் பாதிப்பு உள்ளிட்ட பல சமூகப் பிரச்னைகளையும் மூச்சு முட்ட ஒரே கதையில் பேச முயன்றிருக்கிறார் சேரன். ஆனால், நீண்ட நீண்ட வசனங்களாக அவை பேசப்பட்டிருப்பது கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது. காட்சிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பல விஷயங்களை வெறும் வசனங்களால் நிரப்பி இருப்பதுதான் இந்த வெப்சீரிஸின் பலவீனம்.

Cheran’s Journey

மருந்து உடலுக்கு நல்லதுதான் என்பதற்காக மருந்தை மட்டுமே 9 எபிசோடிலும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சேரன். ஒவ்வொரு எபிசோடும் சராசரியாக 45 நிமிடங்கள் என்பதால் நிறையவே பொறுமை தேவைப்படுகிறது.

ஆனாலும் பாசிட்டிவிட்டியை விதைத்ததற்காகவும், ஆபாசம், வன்முறைக் காட்சிகளின்றி தன் ஸ்டைலில் இளைஞர்களுக்கான வெப்சீரீஸைக் கொடுத்ததற்காகவும் சேரனைப் பாராட்டலாம்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours