ஒரு சில படங்களே இயக்கி மிகக் குறுகிய காலத்தில் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் அஞ்சலி மேனன்.
மலையாளத்தில் ‘Manjadikuru’, ‘Koode’ போன்ற படங்கள் மூலம் மலையாள ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர், ‘Bangalore Days’ படம் மூலம் இந்திய அளவிலும் கவனம் பெற்றார். இப்படம் தமிழில், ‘பெங்களூர் நாட்கள்’ என ரீமேக் செய்யப்பட்டது. இவர் இயக்கிய ‘Wonder Women’ பெண்களின் பிரச்னைகளைப் பேசி பாராட்டுகளைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அஞ்சலி, தனது அடுத்த படம் தமிழ்ப் படமாக இருக்கும் என்றும் இதை ‘KRG’ தயாரிப்பு நிறுவனத்துடன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசியுள்ள அவர், “நமது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த படத்தை எடுக்கவுள்ளேன். இப்படத்தை ‘KRG’ தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்தியாவில் பல்வேறு நிலப்பரப்புகளின் கதைகள் இருக்கின்றன. அக்கதைகள் திரையில் வரும்போது பார்வையாளர்கள் அதை மொழிகளைக் கடந்து ரசிக்கிறார்கள். அப்படியோரு நல்ல திரை அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும் நினைக்கிறேன்” என்று கூறினார்.
இது குறித்துப் பேசியுள்ள KRG-இன் இணை நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா, “அஞ்சலி மேனனுடன் இணைந்து பணியாற்றுவது எங்களது ‘KRG’ நிறுவனத்தின் புதியதொரு அத்தியாயமாக இருக்கும்.
சினிமா மீதும், நல்ல கதைகள் மீதும் எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது. எங்களது இந்தக் கூட்டணி மொழிகளைக் கடந்து பல்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்த கதைகளைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும்” என்று கூறியிருக்கிறார்.
+ There are no comments
Add yours