பூந்தமல்லியில் 500 கோடியில் திரைப்பட நகரம்: அரசுக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி
20 பிப், 2024 – 13:40 IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு ஏதுவான படபிடிப்பு தளங்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் தொழில்நுட்பம் ஆகியவை போதுமான அளவிற்கு தமிழகத்தில் இல்லாத காரணத்தினால் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது. அதனால் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விடுகிறது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் செலவீனங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனை கட்டுபடுத்த பல தயாரிப்பாளர்கள் கேட்டுகொண்டதின் பேரில், அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள், தமிழக முதல்வரிடம் சென்னையில் ஒரு சினிமா நகரம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த கோரிக்கையை ஏற்று சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே 150 ஏக்கரில் புதிய சினிமா நகரம் அமைக்கவும், அதில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கூடிய படப்பிடிப்பு தளங்கள், படத்தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கான கட்டமைப்புகளுக்காகவும் 500 கோடி பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ் திரையுலகம் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours