‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முதல் பாடல் ‘மறுபடி நீ’ காதலர் தினமான நேற்று கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வெளியிடப்பட்டது.
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்நிலையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முதல் பாடல் “மறுபடி நீ” கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 14 காதலர் தினத்தனமான நேற்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அஞ்சலி, பாடலாசிரியர் மதன் கார்க்கி மற்றும் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஆகியோர் படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர்.
இயக்குநர் ராம் பேசியபோது, “காதலர் தினத்தன்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. காதலர் தினம் என்று சொல்லும்போது காதலைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. வரலாறு எழுதப்படுவதற்கு முன்பு, உலகில் பல மொழிகள் தோன்றுவதற்கு முன்பு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, 3000 – 4000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் உள்ளது காதல். காதல் என்பது நாம் உருவாவதற்கு முன்பிருந்தே இந்த உலகத்தில் இருக்கிறது. காதல் பாலினம் தாண்டியது. காதல் சாதியைத் தாண்டியது. காதல் அந்தஸ்தைத் தாண்டியது. காதல் மொழியைத் தாண்டியது. காதல் நிற வேறுபாட்டைத் தாண்டியது. காதல் என்ற பிரபஞ்ச சக்திதான் இந்த உலகத்தைக் கையில் வைத்திருக்கிறது.
இந்தப் படத்தை நான் இயக்குவதற்கு முக்கிய காரணம் 2019 லாக்டவுனில் நான் படித்த ‘Humankind: A hopeful history’ என்ற பிரெக்மனின் புத்தகம்தான். இரண்டாம் உலகப்போர் காலத்தில், ‘சுடுங்கள்’ என்ற மேலதிகாரியின் கட்டளையில் குறிப்பிட்ட சிலரே சுடுவார்கள். மற்ற அனைவரும் சுடுவது போன்று நடிப்பார்களாம். ஏனென்றால் இயல்பிலேயே ஒரு மனிதனை இன்னொரு மனிதனால் சுட முடியாது. மனிதனால் இன்னொரு மனிதனைத் துன்புறுத்த முடியாது. பேரிடர் காலத்தில் வேற்றுமை மறந்து இன்னொரு மனிதனோடு கரம் கோர்த்து நிற்பான் என்பதை விஞ்ஞானப் பூர்வமாக எழுதிய புத்தகம் இது.
இந்தப் புத்தகத்தை நீங்க படித்தால், உங்களுக்குள் எவ்வளவு அன்பு, காதல் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். உங்களை உற்சாகம் மிக்கவர்களாக மாற்றும். கவிதை ரசிப்பவர்களாக, நடனமாடுபவர்களாக, இசையை ரசிப்பவர்களாக, காதலிக்கக் கூடியவர்களாக மாற்றும். இந்தப் புத்தகத்தின் தத்துவத்தில் உருவானதுதான் ‘ஏழு கடல் ஏழு மலை’. என்னுடைய மற்ற நான்கு படங்கள் உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். ஏனென்றால் இந்தப் படம் பேசுவது, இந்த மானுடத்தின் காதல். இப்படத்தின் முதல் பாடல் ‘மறுபடி நீ’ வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தப் பாடலை இன்று ஹிந்துஸ்தான் கல்லூரியில் ஹிலாரிகஸ் நிகழ்வில் வெளியிடுவதற்கு அனுமதியளித்த கல்லூரி நிர்வாகத்திற்கும் நன்றி” என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய நடிகை அஞ்சலி ” கண்டிப்பாக இந்தப் படம் உங்கள் எல்லாருக்கும் நிச்சயம் பிடிக்கும். இந்தப் படத்தோட முதல் பாடல் ‘மறுபடி நீ’ எனக்கு மிகவும் பிடித்த பாடல். மொத்த ஆல்பத்திலும் எனக்கு இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
மேலும் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, “
‘பேரலையாய் எந்தன் வானத்தின்
நாணம் தீண்டவந்தாயா?
கார்முகிலாய் எந்தன் நெஞ்சத்தின்
ஆழம் தாண்ட வந்தாயா?
காற்று என என்னை நீ
தாய்மை செய்து ஓடிப் போவாயா?
காயமென எப்போதும் நீ
என் தோழி ஆவாயா ?
மறுபடி நீ மறுபடி நீ’
யுவனோட இசையில் சித்தார்த் பாடியிருக்கிறார். உங்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பாடல் பாடுவது அழியாக் காதல். இதுபோன்ற காதல், அழியாக் காதல் உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் நிகழ வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.
‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகி இருந்த தமிழ்ப்படம். படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உலக சினிமா ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. இவை இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.
+ There are no comments
Add yours