கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 2008 ஆம் ஆண்டு நடந்த 12 ஆம் வகுப்புத் தேர்வில் முறைக்கேடு நடந்ததாக 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
மேலும், அத்தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, அத்தேர்வை எழுதிய மாணவர்கள் மீண்டும் அப்பள்ளிக்குச் சென்று, மூன்று மாதம் படித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற விசித்திரமான உத்தரவையும் வழங்குகிறது. அந்த விசித்திர தீர்ப்பினால், மீண்டும் தன் பள்ளிக் காதலி பிரியதர்ஷினியைப் (மலினா) பார்க்கலாம் என்ற ஆசையோடு இருக்கும் கார்த்திக்கும் (ரக்சன்), மூன்று மாதம் வேலையும் சம்பளமும் போகிறதே என்ற கவலையோடு இருக்கும் சலீமும் (தீனா), இன்ன பிற முன்னாள் மாணவர்களும் மீண்டும் அதே பள்ளிக்குப் படிக்க வருகிறார்கள். அந்த மூன்று மாதம் அவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைச் செய்கிறது, கார்த்திக் தன் காதலியுடன் சேர்ந்தாரா, அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றனரா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ரா.கோ.யோகேந்திரனின் ‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படம்.
கலகலப்பாகவே படம் முழுவதும் வந்தாலும், மறுபுறம் காதல் குதூகலம், காதல் தோல்வி தரும் வேதனை, பல ஆண்டுகளுக்குப் பின் வரும் குற்றவுணர்வு என நகரும் அழுத்தமான ‘கார்த்திக்’ கதாபாத்திரத்தைத் தாங்க முடியாமல் திணறுகிறார் ரக்சன். கலாய்களில் மட்டும் ஸ்கோர் செய்யும் ரக்சன், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் நடிப்பைக் கொண்டுவரப் போராடுகிறார்.
கதாநாயகனுக்கு இணையாகவும், சில காட்சிகளில் கதாநாயகனையும் ஓவர் டேக் செய்து திரையையும் நம் காதுகளையும் ஆக்கிரமித்திருக்கிறார் தீனா. ஒரு மூட்டை ஒன்லைன் காமெடிகளுடன் படப்பிடிப்பிற்கு வந்திருப்பவர், ஆங்காங்கே சிரிக்க வைத்து நமக்கு ஆறுதல் தருகிறார். கதாநாயகி மலினாவிற்கு பெரிய வேலை இல்லை. நடிப்பிலும் குறையில்லை. முனீஸ்காந்த் சில உணர்வுபூர்வமான காட்சிகளில் வந்து, பலம் சேர்த்திருக்கிறார்.
கோபி துரைசாமியின் ஒளிப்பதிவு கன்னியாகுமரியின் பசுமையை படத்திற்கு கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறது. சச்சின் வாரியரின் இசையில், தாமரை வரிகளில் ‘வானிலை சுகம்’ பாடல் மட்டும் இதமாக இருக்கிறது. முடிந்தவரை பின்னணி இசையால் பல காட்சிகளைக் காப்பாற்றியிருக்கிறார் சச்சின். பால முரளி மற்றும் ஷாஷங்க் மாலியின் படத்தொகுப்பில் பல ஷாட்டுகள் ரிப்பீட் அடிக்கின்றன. இரண்டாம் பாதியில் அடைத்துக்கொண்டு நிற்கும் பாடல்களை நீக்கியிருக்கலாம்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை நம்பவைக்கும்படியான காட்சிகள் எதுவும் இல்லாமல், தொடக்கத்திலேயே பார்வையாளர்களை லாஜிக் ஓட்டையில் சிக்க வைக்கிறது படம். 10 ஆண்டுகளாக பள்ளிக் காதலியை நினைத்துக்கொண்டு வாழும் கார்த்திக்கிடமிருந்து தொடங்கி, பின்கதை வரும் காதல் , நிகழ்காலத்தில் வரும் அதே காதல் என மாறி மாறி பயணிக்கிறது முதற்பாதி திரைக்கதை.
நடிகர்களின் ஓவர் டோஸ் நடிப்பும், நீள நீளமான வசனங்களாலேயே காட்சிகளை நகர்த்தும் திரைக்கதையும் தொடக்கத்திலேயே படத்தோடு ஒன்றவிடாமல் செய்கிறது. கிரிக்கெட் கார்ட், மிட்டாய்கள், லாஸ்ட் பெஞ்ச் அடிதடி, மாலைநேர ட்யூஷன் போன்ற 90ஸ் கிட்ஸுகளின் ‘மலரும் நினைவுகளும்’, சில ஒன்லைன் காமெடிகளும் மட்டும் முதற்பாதியில் ஆறுதல் தருகின்றன.
அக்காலத்திற்கும் இக்காலத்திற்குமான காதலின் வித்தியாசங்கள், ஒற்றுமைகள், காதலின் மகத்துவம், உருவக்கேலிகளுக்கு எதிரான குரல், இயந்திரமயமான வாழ்க்கை என பல உணர்வுபூர்வமான அடுக்குகளைக் கொண்டிருக்கிறது இரண்டாம்பாதி. இவற்றில் எதையுமே ஆழமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லவில்லை. ஆனால், இவற்றை ஓரளவிற்கு தொட்டுச் சென்றிருக்கிறது சில வசனங்கள். பாட்டில்களைச் சுற்றி விளையாடும் கேம், ஆண்டு விழா ட்ராமா என சுவாரஸ்யமாக்க பல வாய்ப்புகள் கிடைத்தும், அவற்றைத் தவறவிட்டு அவற்றை திரைக்கதையின் ‘இழுவைக்கும்’ மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
யூகிக்கக் கூடிய திருப்பங்கள், நீண்டுக்கொண்டே இருக்கும் காட்சிகள், ரசிக்க வைக்காத பாடல்கள் என சொதப்பும் இரண்டாம்பாதியில் மீண்டும் தீனாவின் ஒருசில காமெடிகள் மட்டுமே ஆறுதல் தருகிறது.
ரகளைகளும் உணர்வுபூர்வமான தருணங்களும் நிறைந்த ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற ஒன்லைனை, மேம்போக்கான திரைக்கதையாலும், மூச்சு முட்டும் அளவிற்கான வசனங்களாலும் சோதித்து, திரையரங்கில் இருந்து வெளியே வந்தவுடனேயே படத்தை மறக்க வைக்கிறது இந்த ‘மறக்குமா நெஞ்சம்’.
+ There are no comments
Add yours