சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்துக்கு ‘ராயன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
முதல் தோற்றம் எப்படி? – ‘ராயன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முறுக்கிக்கொண்டு நிற்கும் தனுஷின் கையில் ரத்தம் படிந்திருக்கிறது. அவருக்குப் பின்னால், சந்தீப் கிஷணும், காளிதாஸ் ஜெயராமும் கையில் கத்தியுடன் எட்டிப் பார்க்கின்றனர். வன்முறைக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்பதை போஸ்டர் உறுதி செய்கிறது.
மேலும், இந்த காம்பினேஷன் புதிதாக இருப்பது ரசிகர்களுக்கு விருந்து. கிட்டத்தட்ட 3 பேரும் இறைச்சிக் கடையில் வேலை பார்ப்பவர்கள் அல்லது ஃபாஸ்ட் ஃபுட் கடையை நடத்துபவர்கள் போல காட்சியளிக்கின்றனர். கடந்த முறை ‘பவர் பாண்டி’யில் காதலை மையமாகக் கொண்டு படத்தை இயக்கிய தனுஷ், இம்முறை அதிரடியில் இறங்கியிருப்பதை உணர முடிகிறது. இதற்கு அப்படியே மறுபுறம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ காதல் படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
+ There are no comments
Add yours