`அடிப்படை அறிவுகூட இல்லாதவங்க தான் இப்படி கமென்ட் பண்ணுவாங்க!' – ராஜலட்சுமி செந்தில்கணேஷ்

Estimated read time 1 min read

மக்களிசைப் பாடகராக நமக்கு பரிச்சயமானவர் ராஜலட்சுமி செந்தில் கணேஷ். இவரும் சரி இவருடைய கணவரும் சரி பாடகர்களாக சினிமாவில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.

தவிர, கச்சேரிகளிலும் இருவரும் பிஸியாக இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான `லைசென்ஸ்’ படத்தின் மூலம் மக்கள் மனதில் நடிகையாகவும் இடம் பிடித்திருக்கிறார் ராஜலட்சுமி. அந்தப் படத்தில் அவருடைய நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜலட்சுமி வெளிநாட்டில் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன. அது சார்ந்தும், அவரது பயணம் குறித்தும் விரிவாகப் பேச அவரைத் தொடர்பு கொண்டோம்.

ராஜலட்சுமி செந்தில்கணேஷ்

” ‘Coke Studio Tamil’ல் சமீபத்தில் நானும், வித்யா வோக்ஸ் மேம், ஜி.வி பிரகாஷ் சார் கூட்டணியில் ஒரு பாடல் பாடியிருந்தேன். கோவிட் சமயத்துல நிறைய வெளிநாட்டு நிகழ்ச்சிகள் பண்ண முடியாம இருந்தது. அதற்கெல்லாம் சேர்த்து வைச்சு இப்ப நிகழ்ச்சிக்காக வெளிநாட்டுக்கு பயணிச்சிட்டு இருக்கோம். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 6,7 நாடுகளுக்குப் போயிட்டு வந்துட்டோம்!’ என்றதும் அவர் பதிவிற்கு வந்த கமென்ட்ஸ் குறித்துக் கேட்டோம்.

`ஆங்கிலம் சார்ந்த தேவை எனக்கு பர்சனலாகவே இருந்தது. அதன் மீது எனக்கு ஒரு மிகப்பெரிய கனவு இருந்துச்சு. எப்படியாச்சும் அந்த மொழியை நாம கத்துக்கணுங்கிற விருப்பத்துல தான் அதை கத்துக்க ஆரம்பிச்சேன். இப்ப தான் கொஞ்ச, கொஞ்சமா கத்துட்டும் இருக்கேன். நமக்குள்ளவே பேசிட்டு இருக்காம பொது வெளியில் பேசும்போதுதான் நாம எந்த அளவுக்குப் பேசுறோம், எந்த இடத்துல தவறு செய்றோங்கிறது புரியுங்கிறதால எடுத்த முயற்சி தான் அன்னைக்கு அவரோட ஆங்கிலத்தில் பேசினது. அதுக்கு அவ்ளோ நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்திருந்தது. அடிப்படையான அறிவு கூட இல்லாதவங்க மட்டும்தான் இப்படியெல்லாம் விமர்சனம் பண்ண முடியும். அதுல நான் போட்டிருந்த உடையையும் விமர்சனம் பண்ணியிருந்தாங்க. அந்த வீடியோவுக்கும் அர்ப்பணுக்கு வாழ்வு வந்தா என்கிற சொலவடைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?

ராஜலட்சுமி செந்தில்கணேஷ்

உடைங்கிறது என்னுடைய சுதந்திரம். எனக்கு கம்பர்டபுளான உடையை நான் எங்க வேணும்னாலும் போட்டுப்பேன். எனக்குன்னு ஒரு சுய ஒழுக்கம் இருக்கு. அதை நான் பின்பற்றுவேன். பொதுவா பாடி ஷேமிங் அப்படிங்கிறதை நான் பிற்போக்கான எண்ணமாகத்தான் பார்க்கிறேன். அந்த வீடியோவுக்கு அவ்வளவு நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்ததைப் பார்த்துட்டு அதே உடையிலேயே 5,6 வீடியோ எடுத்தேன். அந்த கமென்ட்ஸ் எல்லாம் என்னை பாதிச்சிருந்தா நான் இன்னமும் பக்குவப்படலைன்னு தான் அர்த்தம். அத்தனை நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்திருந்தாலும் அதுக்கு பாசிட்டிவ் ஆன நிறைய மெசேஜ்களும் வந்துச்சு!” எனப் புன்னகைத்தவரிடம் ஜிவி பிரகாஷூடன் இணைந்து ஒரு பாடல் எதிர்பார்க்கலாமா? எனக் கேட்டோம்.

” ‘Coke Studio Tamil’க்காக பாடும்போது வித்யா வோக்ஸ் மேம் ஆக இருக்கட்டும், ஜிவி சார் ஆக இருக்கட்டும் என்னை ரொம்பவே கம்பர்டபுளாக வச்சிருந்தாங்க. சார் என் வாய்ஸ் ரொம்ப தனித்துவமா இருக்குன்னு சொன்னாங்க. நான் அமெரிக்கா கிளம்புற அன்னைக்கு சார் ஸ்டுடியோவில் இருந்து ஃபோன் வந்தது. நான் ஊருக்கு கிளம்புறேன்னு சொன்னதும் போயிட்டு வாங்கனு சொன்னாங்க. நிச்சயம் சாருடைய இசையில் ஒரு பாடல் எதிர்பார்க்கலாம்!” என்றவர் இந்த ஆண்டுக்கான சில திட்டங்களை வைத்திருக்கிறார். அது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

ராஜலட்சுமி செந்தில்கணேஷ்

“நாட்டுப்புற கலை சார்ந்து பிஹெச்டி பண்ணனுங்கிறது என் ரொம்ப நாள் ஆசை. இந்த ஆண்டு கண்டிப்பா அதுக்கான அட்மிஷனாச்சும் போட்றணுங்கிறதுல ரொம்ப உறுதியா இருக்கேன். இப்பவே அதுக்காக படிக்கவும் ஆரம்பிச்சிட்டேன். இன்னொன்னு, மக்கள் இசை கலைஞர்களுக்குன்னு அரசாங்கத்துல இருந்து சில சலுகைகள், ஊக்கத்தொகைகள் எல்லாம் கொடுக்குறாங்க. இப்ப என்னென்ன சலுகைகள் இருக்கு. அதுக்கு எப்படி அப்ளை பண்ணனுங்கிறதெல்லாம் தெரியாம பல கலைஞர்கள் அதுக்கான முயற்சிகளிலேயே ஈடுபடாம இருக்காங்க. அவங்க எல்லாரையும் ஒருங்கிணைச்சு பேசிக் ஆன விஷயத்துல இருந்து அவங்க இந்த சலுகைகள் பெற என்னென்ன செய்யணும்னு அவங்களுக்கு உதவி பண்ற ஒரு குழுவை அமைக்கணும்னு திட்டமிட்டிருக்கேன். அடிப்படையா சிலர் அடையாள அட்டையே வாங்கி வச்சிருக்க மாட்டாங்க. புயல், வெள்ளம்னு இயற்கை பேரிடர் வரும்போது அது இல்லைன்னு தவிச்சிட்டு இருப்பாங்க. அப்படியான மக்கள் இசை கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய நாம நிச்சயம் ஒரு குழு அமைக்கணும்னு இருக்கேன். இது ரெண்டும் தான் இப்ப என்னுடைய திட்டம்!” என்றதும் நடிப்புல அடுத்ததாக எதிர்பார்க்கலாமானு கேட்டோம்.

“எதிர்பாராம எனக்கு வந்த வாய்ப்பு தான் `லைசென்ஸ்’. எனக்கு இந்தப் படம் மனதிருப்தியைக் கொடுத்துச்சு. நிறைய பேர் இந்தப் படம் எங்களை அழுக வைச்சிடுச்சுன்னு சொன்னாங்க. `அம்மா கிரியேஷன்ஸ்’ புரொடியூசர் டி.சிவா சார் ப்ரிவ்யூ பார்த்துட்டு. `என்னம்மோ நினைச்சிட்டு இருந்தேன். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. ரொம்ப நல்லா பண்ணியிருக்க’னு சொன்னாங்க. அவ்ளோ பெரிய தயாரிப்பாளர்கிட்ட இருந்து அப்படியொரு பாராட்டு வாங்குறதெல்லாம் மிகப்பெரிய விஷயம். அதே மாதிரி எங்க ஊருல எங்க வீட்டுக்கு பக்கத்துல உள்ள தியேட்டரில் படம் வெளியாச்சு.

ராஜலட்சுமி செந்தில்கணேஷ்

எங்க அம்மா, கணவர், குழந்தைங்க, உறவினர்கள்னு எல்லாருடனும் போய் படம் பார்த்தேன். அம்மா ரொம்ப நெகிழ்ந்து போய் பார்த்தாங்க. அந்தத் தியேட்டரில் நாங்க நிறையப் படங்கள் பார்த்திருக்கோம். அந்த தியேட்டரில் நான் நடிச்சப் படம் பார்க்கிறது எல்லாருக்கும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. முழு கமர்ஷியலா இல்லாம நல்லதொரு கதைக்களம் கொண்ட கதையாக இருந்தா நிச்சயம் நடிப்பேன்!” என்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours