‘End war’ என்கிற காமிக் புத்தகத்தை தமிழில் பாடலாசிரியர் மதன் கார்க்கி மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். இந்த வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “எனக்கு காமிக் புத்தகங்கள் பிடிக்கும்னு பல பேட்டிகள்ல சொல்லியிருக்கேன். ஆங்கிலத்துல கிராபிக் நாவல்கள் இருக்கு. தமிழ்ல இப்படியொரு தெளிவான காமிக் இப்போ வரத் தொடங்கியிருக்கு. ஒரு திரைப்படத்தோட முதற்கட்டப் பணிகள்ல ஸ்டோரி போர்ட் பண்ணுவாங்க. அது காமிக் வடிவம் மாதிரிதான். அந்த வேலைகள் பார்த்தப் பிறகுதான் கிராபிக் நாவலோட முக்கியம் புரியவந்தது. நான் சின்ன வயசுல படிச்ச காமிக்தான் ‘இரும்புக் கை மாயாவி’.
அந்த வடிவிலான சூப்பர் ஹீரோ நம்ம ஊர்ல இருந்தா எப்படி இருக்கும்ங்கிற யோசனைலதான் ‘இரும்புக் கை மாயாவி’ கதை யோசிச்சேன். ஆனா அதோட பொருட்செலவு அதிகமாக இருந்தது. முதல் படம் பண்ணின பிறகு அதைப் பண்ண வேண்டாம்னு நான் முடிவு பண்ணேன். எனக்கு ‘DC’ காமிக் கதாபாத்திரம் அதிகளவுல பிடிக்கும். அதுல எனக்கு ஃபேவரைட் கதாபாத்திரம் ‘பேட்மேன்’.” என்றவர், “தலைவர் -171 படத்தோட எழுத்து வேலைகள் நடந்துட்டு இருக்கு. இப்போ வரைக்கும் எழுதிட்டிருக்கேன். இன்னும் நிறையவே எழுதவேண்டியது இருக்கு. முதற்கட்ட பணிகளுக்கு (Pre Production) இன்னும் 2-3 மாசம் நேரம் இருக்கு. முழுசா எழுதுறதுல கவனம் செலுத்துறோம். என்னை நிறையப் பேர் தொடர்பு கொள்ள முயற்சி பண்ணாங்க. நான் இப்போ போன்கூட சரியா யூஸ் பண்றது இல்ல. ‘லியோ – 2 சாத்தியம்தான். அதுக்கான நேரம், காலம் அமையணும். விஜய் அண்ணாவோட குறிக்கோள் வேறு ஒரு இடத்துல இருக்கு. அதுக்கு முதல்ல வாழ்த்துகள்.” என்றார்.
+ There are no comments
Add yours