இந்தச் சூழலில் ராதாரவியுடன் நீண்ட காலமாக டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருந்தவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். ராஜேந்திரனுக்கு யூனியன் உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதால் அவர் நின்றால் ஜெயித்து விடலாமென எண்ணிய கதிரவன் பின்வாங்க, மீண்டும் ராதாரவியே தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதென முடிவெடுத்திருக்கிறாராம். நாற்பதாண்டு காலம் உடன் பயணித்தவரை எதிர்த்துப் போட்டியிடுவது மற்றும் டப்பிங் யூனியன் கட்டிட விவகாரத்தில் நடந்ததென்ன, சின்மயிக்கும் யூனியனுக்குமான பிரச்னை என பல்வேறு விஷயங்கள் குறித்து ராஜேந்திரனிடம் பேசினோம்.
ராதாரவி தலைவரா இருந்தப்ப துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளிலிருந்த நீங்க திடீர்னு அவரை எதிர்த்துப் போட்டியிடக் காரணம்?
”நான் அண்ணன் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிடலை. அவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடாததைப் பயன்படுத்தி சங்க உறுப்பினர்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத சிலர் பொறுப்புக்கு வர முயற்சி செய்தாங்க. அது பத்தி அவர்கிட்டப் பேசினேன். ‘நீ வேணும்னா தலைவர் பதவிக்குப் போட்டியிடு’னு அவர்தான் சொன்னார். சரின்னு நான் இறங்கிட்டேன். நான் சொன்ன அந்த சிலருக்கு இப்ப தோல்வி பயம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். அதனால திரும்ப அவர்கிட்டப் போய் பேசியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை இனி நான் என் முடிவுல இருந்து பின்வாங்குறதா இல்லை. ஏன்னா, தேவையில்லாத எவ்வளவோ பிரச்னைகளை சங்கம் சந்திச்சிட்டிருக்கு. அதுக்கெல்லாமே நான் குறிப்பிடுகிற அந்த ஒரு கும்பல்தான் காரணம். அண்ணன் ராதாரவி அவங்க பேச்சை மட்டுமே கேட்கறதால முன்ன இருந்த ஆளுமை அவர்கிட்ட இப்ப இல்லை. அதனாலதான் இந்தப் போட்டி தவிர்க்க முடியாததாகிடுச்சு”
டப்பிங் யூனியன் அனுமதி வாங்காம கட்டிடம் கட்டி, அதுக்கு மாநகராட்சி சீல் வச்சதெல்லாம் நடந்துச்சே..?
”கட்டிட விவகாரத்துல நிர்வாகத்துக்குள் இருந்துகிட்டே நான் நியாயமாகத்தான் குரல் கொடுத்தேன். யாரும் அதுக்குக் காது கொடுக்கல. கட்டிடம் கட்டி வாடகைக்கு விடலாம்னு சொன்னாங்க. பார்க்கிங் வசதி இல்லாம யார் வாடகைக்கு வருவாங்க? அதனால வாடகைக்கு யாரும் வரலை. மாநகராட்சி நடவடிக்கையைப் பொறுத்தவரை நிர்வாகத்தின் அலட்சியப் போக்குக்குக் கிடைச்ச தண்டனை. இப்ப நிலைமையை சரி பண்ணிட்டு வர்றோம். அடுத்த நிர்வாகம் வரும் போது கட்டிட விவகாரத்துல நல்லதொரு முடிவு எட்டப்பட்டிருக்கும்”
+ There are no comments
Add yours