விகடன் பிரசுரமாக வெளியான ‘நீரதிகாரம்’ தமிழ் நாவல் வெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நீரதிகாரம் தொடராக விகடனில் வெளிவந்த போதே அதன் முக்கியத்துவம் கவனம் பெற்றது. பென்னி குயிக் கட்டிய அணையின் பெருமையைப் பேசுவது மட்டுமல்ல அவரது தியாகத்தையும், அதன் சிறப்பையும் முன்வைக்கிறது. நேற்று நீரதிகாரம் நாவலை நடிகர் சூர்யாவிடம் கையளித்துவிட்டு அவரிடம் 50 நிமிடங்களுக்கு மேலாக உரையாடியிருக்கிறார் ‘நீரதிகாரம்’ நாவலின் ஆசிரியர் அ.வெண்ணிலா. அந்த சந்திப்பைப் பற்றி அவரிடம் பேசினோம்.
இது குறித்து பேசிய அவர், ” ‘நீரதிகாரம்’ சூர்யா அவர்கள் மூலம் இன்னும் பேசப்பட வேண்டும் என்று விரும்பினேன். இந்நூல் பேசுகிற முழுமையான சித்திரத்தை முடிந்தவரை சுருக்கமாகப் பேசினேன். ரொம்பவும் கருத்தோடு நான் பேசியதைக் கேட்டார். பென்னிகுயிக் அந்த அணையைக் கட்டுவதற்குப் பட்ட கஷ்டங்கள், ஏற்பாடுகளின் தன்மை, நான் அந்த அணைக்கட்டு பகுதிகளுக்கும் அது சார்ந்த செங்கோட்டை, கம்பம் என ஆரம்பித்து பல இடங்களுக்குப் பயணப்பட்டதையும் அதன் பயண விபரங்களையும் சொன்னேன்.
மதுரையின் தாது வருடப் பஞ்சத்தில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் மடிந்த துயரை இந்த நாவல் பேசுவதையும், அந்த வறட்சிக்குத் தீர்வாகவே அணை கட்டி முடிக்கப்பட்டதையும் அவரிடம் சொல்லிக் கொண்டே வந்தேன்.
இறுதியாக லண்டன் வரைக்கும் சென்று முக்கியத் தரவுகளைக் கண்டறிந்தது பற்றியும் பேசினேன். நாவலின் சுவாரஸ்யங்களை வரிசைப்படுத்திக் கூறிய போது ஆச்சர்யத்தோடும் அவர் கேட்டார். பிரிட்டிஷார் நாடு முழுவதும் இப்படி கட்டிய அணைகளைப் பற்றியும் இந்த அணையின் சிறப்பு பற்றியும் கேட்டுத் தெரிந்துக் கொண்டார். `என்னென்ன தரவுகள் இது சம்பந்தமாக உங்களுக்குக் கிடைத்தது’ என்று மேலும் கேட்டு அறிந்தார்.
இந்தப் புத்தகத்தைக் கண்டிப்பாகப் படிக்கிறேன். இந்த மாதிரி அலைந்து திரிந்து தகவல்கள் திரட்டி நாவல் எழுதுவது வெளிநாடுகளில் பெரிய கவனம் பெறுகிற ஒன்றாக இருக்கிறது. இங்கே அவ்வாறு இல்லை என்று வருத்தப்பட்டார். இவ்வளவு தகவல்களையும் தரவுகளையும் எப்படி ஒழுங்கு செய்து நாவலாக எழுத முடிந்தது.
நாவல் எழுதுவதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள், இந்தக் கருப்பொருளைச் சரிவர கட்டுக்குள் எழுதுவது ரொம்பவும் கடினமாக இருந்திருக்குமே என்று சொன்னார். நாவல் எழுதின இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அதிலிருந்து மீண்டு வர முடிந்தது எனச் சொன்னேன்” என்றார்.
பஞ்சத்திலும் வறட்சியிலும் வளமை இழந்த மதுரைக்குப் பெரியாற்றைக் கொண்டு வருவதற்காக பிரிட்டிஷார் 100 ஆண்டுகள் எடுத்த முயற்சியைப் பேசுகிறது நீரதிகாரம்.
மேற்கே செல்லும் பெரியாறு நதியைக் கிழக்கில் இருக்கும் மதுரைக்குக் கொண்டு வர இடைவிடாத முயற்சியை எடுத்தார்கள் பிரிட்டிஷார்.
19ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் ஆட்சி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிலை, மேற்குத் தொடர்ச்சி மலையின் அதிசய அமைவிடம், மலைவாழ் காணிகள், அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் அணையின் அமைவிடம், கூலிகளாய் சென்றவர்கள் சந்தித்த தொல்லைகள், நோய்கள், விலங்குகள் தாக்குதல், இயற்கையின் சீற்றம் என ஒன்பதாண்டுகள் நடந்த பெரியாறு அணை கட்டும் வேலையின் போராட்டங்களைப் பேசுகிறது அ.வெண்ணிலாவின் நீரதிகாரம்.
+ There are no comments
Add yours