2018-ல் பீகார் மாநிலத்தின் முஸாஃபர்நகர் சிறார் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு `பக்ஷக்’ (Bhakshak) படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. பூமி பெட்னேகர், சஞ்சய் மிஸ்ரா நடிப்பில் அண்மையில் நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸாகி இருக்கும் இந்த பாலிவுட் படம் எப்படியிருக்கிறது?
முதலில் ஒரு பின்னணி கதை…
உங்களுக்கு முஸாஃபர்பூர் பற்றித் தெரியுமா? பீகார் மாநிலத்தில் மக்கள் தொகையில் நான்காவது இடத்தைக் கொண்ட நகரம். லிச்சி பழங்கள் உற்பத்திக்குப் பேர் போன ஊர். வடக்கு பீகாரின் முக்கியமான தொழில் நகரம். ஆனால், இப்போது அந்தப் புகழ் எதுவும் அந்நகரத்தின் அடையாளங்களாக இல்லை. கூகுளில் தேடினால் ‘Muzaffarpur Shelter Case’ என்றுதான் முதலில் வருகிறது. அந்த அளவுக்கு நெகட்டிவாக, சிலரின் மாபாதக செயலால் தேசிய அளவில் அவமானத்தை இந்நகரம் பெற்றுவிட்டது. ஆம், வேலியே பயிரை மேய்ந்த கதை இது. பாலியல் வன்கொடுமை வழக்குக்காக இந்த ஊர் இன்று தேசிய அளவில் பரவலாக அறியப்படுகிறது.
2018-ல் இந்நகரத்திலிருந்த அரசு குழந்தைகள் காப்பகத்தில் 7 வயதிலிருந்து 17 வயதுவரை உள்ள 34 குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதோடு ஒரு பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். 2017-ல் நடந்த மும்பையைச் சேர்ந்த கல்வி நிறுவனத்தின் மாநிலம் தழுவிய கள ஆய்வில்தான் இந்த வன்கொடுமை மற்றும் கொலை விவகாரம் அறிக்கையாக வெளி வந்திருக்கிறது. இந்தக் காப்பகத்தை அரசின் உதவியோடு என்.ஜி.ஓ-வாக நடத்தி வந்த பிரிஜேஷ் தாகூர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இருவரும்தான் இத்தனை வன்கொடுமைகளையும் அங்கு மாதக் கணக்கில் நிகழ்த்தியிருக்கிறார்கள்.
ஏகப்பட்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு எக்கச்சக்க தடைக்கற்களைத் தாண்டி உச்சநீதிமன்றமே தலையிட்டதன் பேரில் சிபிஐ விசாரணை நடந்து 11 பேர் சட்டத்தின் முன் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட்டார்கள். முக்கியக் குற்றவாளியான பிரிஜேஷ் தாகூர் ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறான். இன்றுவரை பல மர்மங்களைக் கொண்டுள்ளது இந்த ‘Muzaffarpur Shelter Case’ வழக்கு.
`பக்ஷக்’ படத்திற்கு வருவோம்… பக்ஷக் என்றால் வேட்டை மிருகம் என்று அர்த்தம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிய வேட்டை மிருகங்களைப் பற்றி நேர்மையாகப் பேசியிருக்கிறது இப்படம். அதோடு மீடியாக்கள் பற்றியும் மிக முக்கியமான ஒரு விஷயத்தை அறத்தோடு பேசியிருக்கிறது. சமூக விழிப்புணர்வுக்கான இந்தப் படத்தை ஷாரூக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் சார்பாக கௌரி கான் தயாரித்திருக்கிறார்.
கதை பற்றிச் சொல்வதென்றால்… பாட்னா நகரில் வசிக்கும் வைஷாலி சிங் (பூமி பெட்னேகர்) என்ற உள்ளூர் பெண் நிருபர், லோக்கல் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவருடன் பாஸ்கர் (சஞ்சய் மிஸ்ரா) என்ற வயதான கேமரா மேன் மட்டும் வேலை செய்கிறார். பாலியல் வன்கொடுமை பற்றிய அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் ஒன்று வைஷாலிக்குக் கிடைக்கிறது. அரசுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருப்பதும், வேலியே பயிரை மேய்ந்த கதையும் தெரிய வருகிறது. ஆரம்பத்தில் அத்தனை ஆர்வம் காட்டாத வைஷாலிக்கு மனசாட்சியின் உறுத்தலால் குற்றம் நடக்கும் முன்னாவர்பூர் (முஸாஃபர்பூர் பெயரை இப்படி மாற்றி இருக்கிறார்கள்) காப்பகத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இவரைவிட இவர் தேடும் கிரிமினல்கள் வைஷாலியைவிட வேகமாகச் செயல்படுகிறார்கள். உள்ளூர் பத்திரிகை அதிபர் பன்சி சாகு (ஆதித்யா ஶ்ரீவத்சவா) தான் அத்தனை குற்றங்களையும் ஒரு கேங்காக செய்து வருகிறான் என்பதைக் கண்டுபிடிக்கிறார். ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பாளரும் பன்சி சாகுவும் சேர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வருகிறது. ஆனால், பன்சி சாகுவை நெருங்க முடியாத அளவுக்கு அவனுக்கு மாநில அளவில் அரசியல் செல்வாக்கு இருக்கிறது. வைஷாலிக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் அவன், ஒருகட்டத்தில் வைஷாலியின் குடும்பத்தினர் மீதும் கொலைவெறி தாக்குதலை நடத்துகிறான். உள்ளூர் போலீஸும் நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்ப்பதோடு வைஷாலிக்கே குடைச்சலையும் கொடுக்கிறார்கள்.
குற்றவாளி பன்சி சாகுவின் காலில் போலீஸே விழும் அளவுக்கு அவன் செல்வாக்கோடு இருக்கும்போது எப்படி வைஷாலி அந்தக் காப்பகத்தில் மாட்டிக்கொண்ட பெண் குழந்தைகளைத் தனியாளாக மீட்கிறார், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருகிறார் என்பதே படத்தின் கதை. ஒரிஜினல் வழக்கிலிருந்து சின்ன சின்ன மாறுதல்களோடு வெளிவந்திருக்கும் இப்படம் பார்ப்பவர்களைக் கொஞ்சம் பதறவே வைக்கிறது.
முதல் பாதியில் உண்மைக்கு அருகில் காட்சிகள் இருப்பதால் அதிர்ச்சியோடு பார்க்க முடிந்த நம்மால், இரண்டாம் பாதியில் சின்ன சின்ன சினிமாத்தனமான காட்சிகளால் படத்திலிருந்து விலகி விடவும் நேர்வது மைனஸ். ஆனாலும், அந்தக் குறை தெரியாத அளவுக்குப் பிரதான பாத்திரங்களில் வரும் பூமி பெட்னேகரும் சஞ்சய் மிஸ்ராவும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குற்றவாளிகளைக் கைது செய்யச் சாட்சியம் தேடி விரக்தியோடு அலையும் போதும், தன் கணவரிடம் கோபமாக வெடிக்கும்போதும், தேடிக் கிடைத்த ஒரு சாட்சியும் பேச மறுத்த போது உடைந்து அழும் காட்சியிலும் பூமி பெட்னேகர் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
படத்தில் காமெடி இல்லாத குறையைப் போக்க, தன் யதார்த்தமான பீகாரி முதியவர் பாத்திரத்தில் சஞ்சய் மிஸ்ரா பிரமாதமாக நடித்திருக்கிறார். அவ்வப்போது உத்வேகமாகப் பேசி நாயகியைத் துடிப்போடு இயங்கவைக்கும் மோட்டிவேஷனல் ரோலையும் அழகாகச் செய்திருக்கிறார். CID தொடரின் மூலம் கவனம் பெற்ற ஆதித்யா ஶ்ரீவத்சவா இதில் கொடூரமான வில்லனாகத் தத்ரூபமாக நடித்திருக்கிறார்.
படத்தின் முதல் காட்சியில் காட்டப்படும் கொடூரம் பற்றி `இது போன்ற காட்சி படத்துக்குத் தேவைதானா?’ என்று கேட்போருக்கு…
அது உண்டு பண்ணும் அதிர்ச்சி நாம் மட்டுமே பார்த்தது… நாயகி பார்க்காதது! வெறும் கேள்விப்பட்ட ஒன்றுக்காக நாயகி அத்தனை பிடிவாதமாக உத்வேகத்தோடு போராடும்போது மௌனசாட்சியாக நாம் பார்த்த ஒரு குற்றத்தைக் கண்டு கொள்ளாமல் கடக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. ஒரு வகையில் அவளைவிட நாம் அந்தக் காட்சியைப் பார்த்ததாலேயே மனரீதியாகக் குற்றவாளிகளைத் தண்டிக்கத் தயாராகி விடுகிறோம். அதுவே திரைக்கதையின் வெற்றி. அந்த வகையில் படத்தின் இயக்குநர் புல்கித் தன் திரைக்கதையால் நம்மையும் படத்திற்குள் அழைத்துச் செல்கிறார். க்ளைமாக்ஸில் நம்மையும் சாட்சியாக வைத்து, ‘நமக்கு நடந்தால்தான் வலியும் வேதனையுமா… இன்று யாருக்கோ நடந்தது நாளை நமக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்?’ என்ற நாயகியின் கேள்வி நம்மை உலுக்கவே செய்கிறது.
அதனால்தான் படத்தின் நாயகி பூமி பெட்னேகரே, ”இந்தப் படத்துக்கான என் ஆராய்ச்சிகள் எல்லாமே என் நடிப்புக்கு நெருக்கமாக அமைந்தது. ஆனால், அது எல்லாமே நிஜத்தில் யாருக்கோ நிகழ்ந்தது என்பதுதான் என்னைத் தூங்கவிடாமல் செய்தது!” என்று சொல்லியிருக்கிறார்.
`அநீதி கண்டு பயந்து ஓடாமல் எதிர்த்துக் குரல் கொடுக்க பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை… சக மனிதனாக இருந்தால் போதும்!’ என்ற கருத்தை அழுத்தமாகச் சொன்ன விதத்தில் இந்த `வேட்டை மிருகம்’ கவனம் பெறுகிறது.
+ There are no comments
Add yours