சென்னை: “சென்சார் போர்டு ‘மெட்ராஸ்’ படம் பார்த்துவிட்டு இதற்கு A+ தருகிறோம் என்றனர். ஏன் என கேட்டதற்கு, ‘ஸ்லம் மக்களைப்பற்றி தானே படம் எடுத்துள்ளீர்கள். இது ரவுடிகளுக்கான படம்’ என்றனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஸ்லம் பகுதிகளிலிருந்து வந்தால் ரவுடிகளா?” என இயக்குநர் பா.ரஞ்சித் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். புகைப்படங்களைப் பார்த்து மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், “நான் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவன் தான். அரசுப் பள்ளியில் படிப்பது என்பதையே தாழ்வு மனப்பான்மையாக கருதும் சூழல் சமூகத்தில் உள்ளது. நான் படித்த பள்ளியில் ஒருவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே பெரிய விஷயம்.
12-ம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் நான் பெயில் ஆகியிருந்தேன். படிக்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் படிக்கும் சூழல் இல்லை. நான் பள்ளியில் படிக்கும்போது படிப்பதைக் காட்டிலும், வரைவது தான் அதிகம். கணக்கு கூட எழுதமாட்டேன். வரைந்துகொண்டேயிருந்தேன். அரசு பள்ளியில் ஆசிரியர்கள் நன்றாக பழகுவார்கள். ஊக்குவிப்பார்கள். அரசு பள்ளிக்கூடங்களில் படித்தது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. நான் என்னவாக ஆகவேண்டும் என்பதையும் அரசு பள்ளி, கல்லூரி நிறுவனங்களே முடிவு செய்தன.
என்னுடைய ‘மெட்ராஸ்’ படத்தின் கதையை பலரிடம் சொல்லும்போது அவர்கள் என்னிடம் ‘டார்க்’ ஆக உள்ளது என்றனர். சேரிப்பகுதி கதைகள் என்றாலே டார்க் கதைகள் என்ற மனநிலை அவர்களிடம் உண்டு. நானும் அங்கே தான் வாழ்ந்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்கிறது. கொண்டாட்டமான வண்ணமயமாக இருந்திருக்கிறது. ஆனால், அந்தப் பகுதி தொடர்பான கதைகளை சொல்லப்போகும்போது, இது சோகமான கதைகள் என்ற ஸ்டீரியோ டைப் எண்ணங்கள் இருக்கின்றன.
அந்த எண்ணங்களை உடைப்பதை பெரிய விஷயமாக பார்க்கிறேன். அதனால் தான் ‘மெட்ராஸ்’ படத்தில் மக்களின் வாழ்வியலை கலர்ஃபுல்லாக காட்ட விரும்பினேன். படத்தில் எந்த வண்ணங்களும் இருக்காது. சொல்லப்போனால் அந்தச் சுவரில் கூடுதலாக எந்த பெயின்ட் கூட இருக்காது. அங்கிருக்கும் மனிதர்களை வைத்து, கூடுதலாக எந்த பூச்சும் இல்லாமல், கூடுதல் லைட்டை கூட பயன்படுத்தாமல் இயல்பைக் காட்டினேன். ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பிறகு அதைப் பார்க்கும் கோணம் மாறியது.
‘அட்டக்கத்தி’ படத்தை பார்த்த ஒருவர் ‘ஆரண்ய காண்டம்’ படம் போல இருக்கிறது என்றார். இரண்டும் வெவ்வேறு எல்லை. வெவ்வேறு கதைகளைச் சொன்னாலும், களத்தை வைத்து ஒரேமாதிரி என புரிந்துகொள்கின்றனர். அந்த கோணத்தை மாற்றுவது முக்கியம் என கருதுகிறேன். சென்சார் போர்டு ‘மெட்ராஸ்’ படம் பார்த்துவிட்டு இதற்கு A+ தருகிறோம் என்றனர். ஏன் என கேட்டதற்கு, “ஸ்லம் மக்களைப் பற்றி தானே படம் எடுத்துள்ளீர்கள். அந்த மக்களுக்கு மட்டும் போட்டுக் காட்டுங்கள் அதற்கான சான்றிதழை தருகிறோம். காரணம் இது ரவுடிகளுக்கான படம்” என்றனர்.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. “நீங்கள் எப்படி ஸ்லம் பகுதியில் வாழும் மக்களை ரவுடிகளாக சித்தரிப்பீர்கள். நானும் அங்கிருந்துதான் வந்தேன். நான் ரவுடியா” என கேட்டு சண்டையிட்டு பின் படம் வெளியானது. இந்திய சினிமாவில், தமிழ் சினிமாவில் ‘மெட்ராஸ்’ புதிய கோணத்தை உருவாக்கியது.
மக்களுக்கு படம் பிடித்திருந்தது. இந்த கோணத்தை உடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், இன்று அதன் பாதை இலகுவாகியிருக்கிறது என நினைக்கிறேன். ‘ப்ளூ ஸ்டார்’ படத்தை மக்கள் ஏற்று கொண்டாடியுள்ளனர். இந்த கோணத்தை இங்கிருக்கும் புகைப்படங்கள் மாற்றியிருக்கின்றன. இந்த புகைப்படங்கள் அழகாக உள்ளன. இந்த குழந்தைகள் பொதுபுத்தியின் கோணங்களை உடைக்கும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். பள்ளிக்கல்வி துறையின் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது” என்றார்.
+ There are no comments
Add yours