ஒரு கலைத் திரைப்படத்தில் அறிமுகமாகி, முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ பெற்றவர், பாலிவுட்டின் உச்ச வணிக நட்சத்திரமாக பிறகு டிராக் மாறியதை காலத்தின் விநோதம் என்றுதான் சொல்ல வேண்டும். 1976-ல் வெளியான ‘மிருகயா’ என்கிற இந்தித் திரைப்படத்தில் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) அறிமுகமானார். பிரபல வங்க சினிமா இயக்குநரான மிருணாள் சென் இயக்கிய இந்தப் படைப்பிற்கு ‘சிறந்த திரைப்படம்’, ‘சிறந்த நடிகர்’ என்று இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. அறிமுக திரைப்படத்திலேயே தேசிய விருது பெற்ற முதல் நடிகர் மிதுன் சக்கரவர்த்திதான். பழங்குடி இனத்தைச் சேர்ந்த கலகக்கார இளைஞன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தப் பயணம் அதே திசையில் தொடர்ந்திருந்தால் கலைத் திரைப்படங்கள் தொடர்பான ஒரு மகத்தானக் கலைஞராக மிதுன் சக்ரவர்த்தி பிரகாசித்திருக்கலாம். ஏனெனில் மேற்கு வங்கமும் கேரளமும்தான் ஒரு காலகட்டத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்தன. ஆனால் காலத்தின் கணக்கு வேறாக இருந்தது.
உச்சத்திற்குக் கொண்டு சென்ற ‘டிஸ்கோ நடனம்’
அறிமுக திரைப்படத்திற்குப் பிறகு சில இந்தி மற்றும் வங்க மொழித் திரைப்படங்களில் நடித்து வெற்றிகளைத் தந்தாலும் 1982-ல் வெளியான ‘டிஸ்கோ டான்ஸர்’ என்னும் இந்தித் திரைப்படம் மிதுன் சக்ரவர்த்தியின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இந்தியா முழுவதும் அறியப்படும் நட்சத்திரமாக மாறினார் மிதுன். இந்தத் திரைப்படத்தின் வசூல் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்தது. சோவியத் யூனியன் உள்ளிட்ட பல நாடுகளில் இந்தப் படத்திற்கு அபாரமான வரவேற்பு கிடைத்தது.
அந்தக் காலத்திலேயே உலகம் முழுவதும் இந்தப் படம் நூறு கோடிக்கும் மேலாக வசூலித்து, ‘ஷோலே’ ஏற்படுத்தி வைத்திருந்த சாதனையை வெற்றிகரமாக முறியடித்தது. எல்விஸ் பிரெஸ்லியை ஆதர்சமாகக் கொண்ட மிதுன், ஒரு ஸ்ட்ரீட் டான்ஸர் போல சுய ஆர்வத்தில் தானே நடனம் கற்றுக் கொண்டார். ‘டிஸ்கோ டான்சர்’ படத்தில் அவரது நடன அசைவுகள், அப்போதைய இளம் தலைமுறையினரை வெகுவாகக் கவர்ந்தன. அவருடைய ஹேர்ஸ்டைல் முதற்கொண்டு பல விஷயங்களை இளைஞர்கள் ஆர்வமாகப் பின்பற்றினார்கள்.
‘டிஸ்கோ டான்ஸர்’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் பப்பி லஹரி உருவாக்கிய பாடல்கள் இந்தியா முழுவதும் திரையிசை ரசிகர்களை பித்துப் பிடிக்க வைத்தன. ‘டிஸ்கோ’ என்னும் அலை இந்தியாவில் அதிவேகமாக நுழைந்து இளைஞர்களை ஆட்டிப் படைத்ததற்கு ‘டிஸ்கோ டான்சர்’ திரைப்படம் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. தமிழில் ‘ஆனந்த்பாபு’ கதாநாயகனாக நடிக்க, ‘பாடும் வானம்பாடி’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கும் வெற்றியடைந்தது.
டிஸ்கோ டான்சரின் வெற்றிக்குப் பிறகு மிதுன் சக்ரவர்த்திக்கு திரும்பிப் பார்க்க நேரமில்லை. தொடர்ச்சியான வெற்றிகளும் ஹிட் திரைப்படங்களும் குவிந்தன. 1985-ல் பத்மினி கோலாபுரேவுடன் நடித்த ‘Pyar Jhukta Nahin’ (காதல் தலைவணங்காது) என்கிற இந்தித் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை அடைந்தது. இந்தத் திரைப்படம் தமிழில் ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் ‘நான் அடிமை இல்லை’ என்கிற பெயரில் வெளியானது. 1990-ல் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த ‘அக்னிபத்’ மிதுனுக்குச் சிறந்த அடையாளத்தைத் தேடித் தந்தது.
இந்தப் படம் தமிழில் பிரபு, சத்யராஜின் நடிப்பில் ‘சிவசக்தி’ என்கிற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. மிதுனின் நடிப்புப் பயணத்தில் பல ரீமேக்குகளைக் காண முடியும். அவருடைய நடிப்பில் வெற்றி பெற்ற பல திரைப்படங்கள் இங்கு இறக்குமதியாகியுள்ளன. போலவே தமிழில் வெற்றி பெற்ற படங்களையும் அவர் இந்திக்குக் கொண்டு சென்றுள்ளார். சத்யராஜின் நடிப்பில் தமிழில் வெளியான ‘அமைதிப்படை’ திரைப்படம் ‘Jallaad’ என்கிற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
‘மிதுன் தா’ (தா என்றால் வங்காள மொழியில் அண்ணன்) என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மிதுன், அமிதாப் பச்சனுக்கு அடுத்தபடியான புகழை அடைந்தார்.
எனவே ‘ஏழைகளின் அமிதாப்’ என்கிற அடைமொழி கூட இவருக்கு இருந்தது. அமிதாப்பைப் போலவே ‘கோபக்கார இளைஞன்’ பாத்திரங்களில் உணர்ச்சிகரமாக நடித்தார் மிதுன். ஆனால் இந்த வெற்றிப் பயணத்தின் பாதை அத்தனை எளிதாக அவருக்கு அமையவில்லை.
நக்சலைட் நடிகன் ஆன கதை
1950-ல் கல்கத்தாவில் ஒரு கீழ்நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் மிதுன். (இயற்பெயர்: கௌரங்கா சக்ரவர்த்தி). ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்தக் காலகட்டத்தில் நக்சலைட் இயக்கத்தின் தாக்கம் இளைஞர்களிடையே அதிகமிருந்த மாநிலங்களுள் ஒன்று மேற்கு வங்கம். மிதுனும் நக்சலைட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அந்தக் குழுவில் இணைந்தார். ரவி ரஞ்சன் என்கிற பிரபலமான நக்சலைட்டுடன் மிதுனுக்கு நட்பு ஏற்பட்டது. நக்சல்பாரி தலைவரான சாரு மஜூம்தாருடனும் கூட மிதுனுக்குத் தொடர்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஒரு விபத்து மிதுனின் வாழ்க்கைப் பயணத்தை தலைகீழாக மாற்றியது. ஆம், தனது மூத்த சகோதரர் ஒரு விபத்தில் இறந்து விட்ட தகவலை அறிந்த மிதுன், குடும்பத்திற்காக நக்சலைட் வாழ்க்கையை கை விட்டார். என்றாலும் காவல்துறையின் வேட்டை காரணமாக தலைமறைவு வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. எனவே புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரிக்குத் தந்தையால் அனுப்பி வைக்கப்பட்டார். கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகு நடிப்பதற்கான வாய்ப்பு தேடி பம்பாயில் அலைந்து திரிந்தார். மிதுனின் மாநிறம் காரணமாக பல இடங்களில் நிராகரிக்கப்பட்டார். “பாலிவுட்டின் பல முன்னணி நடிகைகள் என்னுடன் இணைந்து நடிப்பதை அப்போது விரும்பவில்லை” என்று ஒரு நேர்காணலில் கசப்புடன் சொல்கிறார் மிதுன்.
பாலிவுட் உலகம் மிதுனை முதலில் ஏற்காவிட்டாலும் அவரது நடனம், ஸ்டைலான தோற்றம், நடிப்பு போன்ற காரணங்களால் மெல்ல அரவணைத்துக் கொண்டது. டிஸ்கோ டான்சர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மிதுனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்தி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா, போஜ்புரி என்று ஏராளமான படங்களில் நடித்துத் தீர்த்தார். அவற்றில் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றன. 1989-ம் ஆண்டில் மட்டும் மிதுன் ஹீரோவாக நடித்த 19 திரைப்படங்கள் வெளியாகின. ஒருவர் ஹீரோவாக நடித்து, ஒரே ஆண்டில் இத்தனை திரைப்படங்கள் வெளியாகி, லிம்கா புக் ஆஃப் ரெக்காடில் பதிவான இந்தச் சாதனை இதுவரையிலும் முறியடிக்கப்படவில்லை.
தென்னிந்தியாவின் மீது பிரியம் கொண்டிருந்த மிதுன்
மிதுன் சக்ரவர்த்திக்குத் தென்னிந்தியா மீது ஒரு பிரத்யேகமான பிரியமும் மோகமும் இருந்துள்ளதை யூகிக்க முடிகிறது. ரம்பா முதற்கொண்டு பல தென்னிந்திய நடிகைகளை வடக்கில் அழைத்துச் சென்று ஹீரோயின்களாக நடிக்க வைத்திருக்கிறார். ஒரு படப்பிடிப்பிற்காக ஊட்டிற்கு வர நேர்ந்த மிதுன், அங்குள்ள இயற்கை அழகில் மயங்கி தனது இருப்பிடத்தையே ஊட்டிக்கு மாற்றிக் கொண்டு அங்கு செட்டில் ஆகிவிட்டார். ஹோட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்களையும் அங்கேயே அமைத்துக் கொண்டார்.
பல வடமொழித் திரைப்படங்களில் நடித்துள்ள மிதுன், ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். 2015-ல் வெளியான ‘யாகாவராரயினும் நா காக்க’ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் ‘முதலியார்’ என்னும் பாத்திரத்தில் நடித்தார். இதைப் போலவே ‘கோபாலா கோபாலா’ (2014) என்னும் திரைப்படம் உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். ‘தி வில்லன்’ என்கிற கன்னடப் படமும் இந்த வரிசையில் உண்டு. மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ திரைப்படத்தில் நடிப்பதற்காக மிதுன் அழைக்கப்பட்டார். ஆனால் அந்தச் சமயத்தில் அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை. என்றாலும் 2007-ல் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘குரு’ திரைப்படத்தில் பத்திரிகையாளர் பாத்திரத்தில் நடித்தார்.
நட்சத்திரத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
எண்பது மற்றும் தொன்னூறுகளில், பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்களாக இருந்த பலருடனும் இணைந்து நடித்தார் மிதுன். நடனம், ஸ்டைல், ஆக்ஷன் என்கிற ஏரியாவில் மட்டும் இல்லாமல் ரொமான்ஸ், காமெடி, குணச்சித்திரம் என்று பல்வேறு நடிப்பிலும் மிதுனின் கலைத்திறமை பளிச்சிட்டது. முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கியது தவிர, 1992-ல் வெளியான ‘Tahader Katha’ என்கிற வங்க மொழித் திரைப்படத்திற்காகவும் தேசிய விருது கிடைத்தது. ஜி.வி.ஐயர் இயக்கத்தில் 1998-ல் வெளியான ‘சுவாமி விவேகானந்தா’ படத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் பாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த துணை நடிகருக்கான’ தேசிய விருது கிடைத்தது. இது தவிர கணிசமான தனியார் விருதுகளையும் வென்றார். 2024-ல் பத்ம பூஷண் விருது கிடைத்தது.
இந்தியாவைத் தாண்டி சோவியத் யூனியன், கனடா போன்ற நாடுகளில் மிதுனிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தொன்னூறுகளில் சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த மிகைல் கார்பசேவ், ஒருமுறை இந்தியாவிற்கு வருகை தந்த போது அப்போதைய பிரதமரான ராஜீவ் காந்தி, அவருக்கு அமிதாப் பச்சனை அறிமுகப்படுத்திய போது ‘என் மகளுக்கு மிதுன் சக்ரவர்த்தி என்கிற நடிகரைத்தான் தெரியும்’ என்றாராம்.
தொன்னூறுகளுக்குப் பிறகு மிதுனின் திரைப்பயணம் இறங்குமுகத்தில் அமைந்தது. சில விதிவிலக்குகளைத் தவிர்த்து அவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியடையத் துவங்கின. ‘மிதுன் டிரீம் ஃபேக்டரி’ என்கிற சொந்த நிறுவனத்தின் மூலம் ஏராளமான திரைப்படங்களை உருவாக்கி நடித்தார். போஜ்புரி மொழி உள்ளிட்ட மிகச் சுமாரான படங்களில் மிதுன் நடிக்கத் துவங்கியது அவருடைய வீழ்ச்சியை வேகமாக்கியது. இதனால் வங்கமொழித் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். மணிரத்னத்தின் ‘குரு’ திரைப்படத்தில் அவர் ஏற்ற பாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
ஸ்ரீதேவியுடன் காதல் திருமணம்?!
இதன் மூலம் இரண்டாவது ரவுண்டில் அவரது ஆட்டம் மீண்டும் ஆரம்பமாயிற்று. இந்த முறை ஹீரோ அந்தஸ்தை மெல்ல கை விட்டு, பல சிறந்த குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார். அவருடைய நகைச்சுவை நடிப்பிற்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. 2019-ல் ‘The Tashkent Files’ என்கிற இந்தித் திரைப்படத்தில் முக்கியமான பாத்திரத்தை ஏற்றார். 2022-ல் நடித்த ‘The Kashmir Files’ படத்திற்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. வங்க மொழியில் மிதுன் நடித்து 2023-ல் வெளியான ‘காபூலிவாலா’தான் அவருடைய சமீபத்திய திரைப்படம்.
நடிப்பிற்கு இடையில் நடனத்தை மையமாகக் கொண்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிப்பதிலும் மிதுன் ஆர்வம் காட்டினார். ‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ என்று அவருடைய தயாரிப்பில் உருவான நிகழ்ச்சி பரவலாகக் கவனிக்கப்பட்டது. வங்க மொழியில் தயாரான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு மிதுன் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.
மிதுன் சக்ரவர்த்தியின் முதலாவது மணவாழ்க்கை நான்கே மாதங்களில் முடிவிற்கு வந்தது. 1979-ல் ஹெலனா என்பவரோடு நடந்த திருமணம் விரைவில் முறிவானது. பிறகு அதே ஆண்டில் யோகிதா பாலி என்கிற பாலிவுட் நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர் பாடகரும் நடிகருமான கிஷோர் குமாரின் முன்னாள் மனைவியாவார். 1984-ல் ஒரு இந்தித் திரைப்படத்தில் இணைந்து நடித்த போது ஸ்ரீதேவியுடன் காதல் ஏற்பட்டது. இது குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக வதந்தி கிளம்பியது. ஆனால் தனது மனைவியை விவாகரத்து செய்யத் தயாராக இல்லாத மிதுனைத் திருமணம் செய்து கொள்ள ஸ்ரீதேவி விரும்பாததால் இந்தக் காதல் முடிவிற்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.
சிவப்பில் துவங்கி காவியில் முடிந்திருக்கும் அரசியல் பக்கம்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மிதுன், துவக்கத்தில் நக்சலைட் இயக்கத்தால் கவரப்பட்டார். 1980-ல் ‘நக்சலைட்ஸ்’ என்கிற தலைப்பைக் கொண்ட படத்திலும் நடித்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் மிதுனுக்குத் தொடர்பும் ஆதரவும் இருந்தது. சுபாஷ் சக்ரவர்த்தி, ஜோதி பாசு போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் இணக்கமான உறவில் இருந்தார்.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களின் ஆட்சி முடிந்த பிறகு, ஜோதி பாசுவின் யுகம் முடிவிற்கு வந்த பிறகு அந்தத் தொடர்புகளில் இருந்து விலகல் ஏற்பட்டது. 2014-ல் மம்தா பானர்ஜியின் மூலம் ‘திரிணாமுல் காங்கிரஸ்’ கட்சியின் சார்பில் ராஜ்ய சபா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். ஆனால் மிதுனின் நாடாளுமன்ற வருகை மிகக் குறைவாக இருந்தது.
தனது பதவிக்காலத்தில் ஒரு கேள்வியைக் கூட அவர் எழுப்பவில்லை. எந்தவொரு விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை. தனது உடல்நலத்தைக் காரணம் காட்டி 2016-ல் ராஜ்ய சபா பதவியை ராஜினாமா செய்தார். இதே சமயத்தில் ‘சாரதா நிதி நிறுவன மோசடியில்’ மிதுனின் பெயர் அடிபட்டது. அந்தக் குழும நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக இருந்ததால் அமலாக்கத் துறையின் விசாரணையை மிதுன் எதிர்கொள்ள நேரிட்டது. 2021-ல் நரேந்திர மோடி முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் மிதுன்.
சிவப்பு நிறத்தில் துவங்கிய மிதுனின் அரசியல் பயணம், பல்வேறு சுற்றுகளைக் கடந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததின் மூலம் காவி நிறத்தில் முடிந்திருப்பதை ஒருவகையான அவல நகைச்சுவை என்றுதான் சொல்ல வேண்டும்.
சமீபத்தில், மூளையில் ஏற்பட்ட ஸ்ட்ரோக் காரணமாக (Ischemic Cerebrovascular Stroke) மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடி சிகிச்சைக்குப் பிறகு இயல்பு நிலைக்கு மிதுன் திரும்பியுள்ளதாக மருத்துவர்களின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த மிதுன் சக்ரவர்த்தி, தனது உழைப்பாலும் கலைத் திறமையாலும் பாலிவுட்டின் உச்சத்திற்குப் பயணித்து முன்னணி நட்சத்திரமாக மாறி உலகமெங்கிலும் ஏராளமான ரசிகர்களையும் புகழையும் பெற்று, மேற்கு வங்க மாநிலத்தின் முகமாக மாறியிருப்பதை ஓர் அசாதாரணமான சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
+ There are no comments
Add yours