கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் திலக வர்மன் (ஜெயம் ரவி) 14 ஆண்டுகளுக்குப் பின் தன் தந்தையையும் தாயில்லாத தன் மகளான மலரையும் (யுவினா பர்தவி) பார்க்க 14 நாள்கள் பரோலில் வருகிறார். கொலைகாரனான தன் தந்தை மீது வெறுப்பில் இருக்கும் மலரை, எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று பாசப் போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார் திலக வர்மன்.
இந்நிலையில், ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட, அக்கொலை வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை ஆய்வாளர் நந்தினி (கீர்த்தி சுரேஷ்) திலக வர்மனைச் சந்தேகப்படுகிறார். உண்மையில், அந்தக் கொலைகளைச் செய்தது யார், அந்தக் கொலைகளுக்கும் திலக வர்மனுக்கும் என்ன சம்பந்தம், திலக வர்மன் சிறை செல்ல காரணம் என்ன, இறுதியில் தன் மகளுடன் சேர்ந்தாரா போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தருகிறது இயக்குநர் ஆண்டனி பாக்யராஜின் ‘சைரன்’.
தன் மகளைத் தூரத்தில் இருந்தாவது பார்த்துவிட வேண்டும் என்கிற ஏக்கம், 14 ஆண்டு சிறை வாசம் தந்த இறுக்கம், ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பொறுப்பு, பதற்றம், மனைவியுடனான காதல், ஆங்காங்கே எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் எனப் பல லேயர்களைக் கொண்ட கதாபாத்திரத்தை முடிந்த அளவுக்கு தன் நடிப்பால் உருவம் கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. ஆனாலும், அவரின் வழக்கமான ‘இறுக்கமான’ முகபாவங்களைத் தவிர்த்திருக்கலாம். மிடுக்கான காவல்துறை அதிகாரிக்கான தோற்றத்தில் மட்டும் கவரும் கீர்த்தி சுரேஷ், ‘ஆக்ரோஷமாக’ செயல்பட வேண்டிய காட்சிகளில் கத்திக்கொண்டு மட்டும் இருக்கிறார். அக்கதாபாத்திரம் அழுத்தமில்லாமல் எழுதப்பட்டிருந்தாலும், தன் நடிப்பால் அதை ஈடுசெய்ய வாய்ப்புகள் கிடைத்தும் அதைத் தவறவிடுகிறார்.
யோகி பாபு படம் முழுவதும் வந்து, நான்கு, ஐந்து இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், அஜய் ஆகியோர் கூட்டாகவும், தனித்தனியாகவும் ஒரு ‘டெம்ப்ளட் வில்லன்களாக’ வந்து ‘டெம்ப்ளட்டான வசனங்களால்’ மிரட்டுகிறார்கள். கோபக்கார மகளாக யுவினா பர்தவி, பாசமான அம்மாவாக துளசி, பொறுப்பான தங்கையாக சாந்தினி தமிழரசன், காதல் மனைவியாக அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் குறையேதுமில்லை. லல்லு பிரசாத், ப்ராதனா, முத்து குமார் ஆகியோர் எவ்வித தாக்கம் தராமல் வந்துப் போகிறார்கள்.
செல்வ குமார் ஆர்.கே-வின் ஒளிப்பதிவு ஒரு ஆக்ஷன் படத்திற்குத் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறது. இரவு நேர ஆக்ஷன் காட்சிகளில் கொஞ்சம் கவனிக்க வைக்கிறார். எடிட்டர் ரூபன், காலில் வெந்நீர் ஊற்றியது போல ஓடும் காட்சிகளை இன்னும் நேர்த்தியாகவும், தேவையான இடங்களில் நிதானமாகவும் தொகுத்திருக்கலாம். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ஹரிசரண் குரலில் ‘கண்ணம்மா’ பாடலும், சித் ஶ்ரீராம் குரலில் ‘நேற்று வரை’ பாடலும் காதுகளுக்கு இதம் தருகின்றன.
இரண்டரை மணி நேர படத்தை 3 மணி நேரப் பின்னணி இசையால் சுற்றிச் சுற்றிக் கட்டி, பார்சல் செய்திருக்கிறார் சாம் சி.எஸ். இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்கும் பின்னணி இசை, பதற்றத்தைக் கடத்த சில காட்சிகளுக்கு மட்டும் உதவியிருக்கிறது. பல உருக்கமான இடங்களில் நம்மையும் ‘Why Blood? Same Blood…’ சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.
காதல், ஆக்ஷன், மகள் பாசம், காவல்துறை விசாரணை, மிரட்டும் வில்லன்கள், உருக்கமான பின்கதை, பழிவாங்கல், குடும்ப பாசம், காமெடி என ஒரு பக்கா பொழுதுபோக்கு படத்திற்குத் தேவையான கச்சா பொருள்களைக் குறைவின்றி கொண்டிருக்கிறது படம். அதை விறுவிறு திரைக்கதையில், சோர்வு தட்டாத வகையில் படமாக்கியது பாராட்டத்தக்கதுதான். ஆனால்… இந்த ‘விறுவிறுப்பு’ மட்டும்தான் படத்தில் விஞ்சி நிற்கும் ஒரே விஷயம்.
முதற்பாதி திரைக்கதையையும் திலகவர்மன் கதாபாத்திரத்தையும் நகர்த்தும் அப்பா – மகள் சென்டிமென்ட் தொகுப்பு, இரண்டாம் பாதியில் காணாமல் போகின்றது. கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்கும் ‘லாக்-அப் டெத்’ வழக்கும் வெறும் வசனங்களாக மட்டுமே வந்து போகிறது. பழிவாங்கல் படத்திற்கான வழக்கமான கதாபாத்திரங்களுக்கு இடையே, பணத்திற்காகக் கொலை செய்யும் லல்லு பிரசாத், சிறை நண்பரான முத்துகுமார், ‘பேர்டன்’ வைத்து கொலை செய்யும் கொலையாளிகள் போன்ற புதிய கதாபாத்திரங்கள் தலைகாட்டினாலும், அவற்றைச் சுவாரஸ்யமான ஒன்றாக மாற்றவே முடியவில்லை.
ஆங்காங்கே ஆணவக் கொலை, சாதிய அரசியல், உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு உள்ள சாதி வெறி போன்றவற்றைக் கேள்வி கேட்கும் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. சாதி ரீதியிலான ஒடுக்குதல்களுக்கு எதிரான வசனங்களும் `நச்’. இவை மட்டுமே படத்தில் ஆறுதலான விஷயங்கள்.
“லாஜிக்குனா என்ன? ஸ்வீட்டா காரமா?” என்று கேட்கிறது மொத்த திரைக்கதையும்! முக்கியமாக, ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கணக்காக’ இருக்கிறது கீர்த்தி சுரேஷின் விசாரணைக் காட்சிகள். நம்பகத்தன்மை இல்லாவிட்டாலும், விசாரணை முறையில் கொஞ்சம் சுவாரஸ்யத்தையாவது கொண்டுவந்திருக்கலாம். மேலும், கனமான வில்லன்கள் இல்லாததால், கதாநாயகன் எடுக்கும் முடிவுகளும், செய்யும் செயல்களும் எந்தவித ஆர்வத்தையும் நமக்கு ஏற்படுத்தவில்லை.
பழிவாங்கல், பாசம், சமூகக் கருத்து, பரபரப்பு என ஒரு ஆக்ஷன் – பொழுதுபோக்கு படத்திற்கான அடிப்படையான விஷயங்களைக் கொண்டிருந்தாலும், புதுமையான திரைக்கதை இருந்திருந்தால் `சைரன்’ சத்தம் இன்னும் பலமாக ஒலித்திருக்கும்.
+ There are no comments
Add yours