தனி ஒருவன் 2: ஹீரோவுக்கு நிகரான வில்லன், தொடரும் தேடுதல் வேட்டை; படத்தின் தற்போதைய நிலவரம் என்ன?

Estimated read time 1 min read

ஜெயம் ரவியின் ‘சைரன்’ வரும் பிப்ரவரி 16ம் தேதி அன்று வெளியாகிறது. ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படத்தின் ரன்னிங் டைம், இரண்டரை மணி நேரம் என்கிறார்கள். இதனை அடுத்து ரவியின் ‘பிரதர்’ வெளியாகிறது. படப்பிடிப்பில் ‘ஜீனி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘தக் லைஃப்’, ‘தனி ஒருவன் 2’ என அசத்தல் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில் ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என விழா ஒன்றில் ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

காதலிக்க நேரமில்லை படத்தில்…

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி அன்று ‘தனி ஒருவன்’ வெளியானது. இந்தப் படம் ஜெயம் ரவிக்கு மட்டுமல்ல, அவரது அண்ணனும் படத்தின் இயக்குநருமான மோகன் ராஜாவிற்கும் முக்கியமான படமாக அமைந்தது. ‘தனி ஒருவன்’ படத்திற்கு முன் டைட்டில்களில் தன் பெயரை எம்.ராஜா எனப் போட்டு வந்த இயக்குநர் ராஜா, இந்தப் படத்தில் இருந்துதான் மோகன் ராஜா எனப் பெயரை மாற்றிக் கொண்டார். தங்களுடைய அப்பா எடிட்டர் மோகன், சினிமாவில் 60 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டவர். எடிட்டர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் கொண்டவர் என்றாலும் அவர் இயக்குநரானதில்லை.

‘தனி ஒருவன்’ படத்தில்…

ஆகையால், அப்பாவைப் பெருமைப்படுத்தும் விதமாக ‘மோகன் ராஜா’ என தன் பெயரை மாற்றினார் எம்.ராஜா. மோகன் ராஜா, ஜெயம் ரவி இவர்கள் கூட்டணியின் ‘தனி ஒருவன் 2’ ஸ்கிரிப்ட் வேலைகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. ஆனாலும், படப்பிடிப்பு செல்வதற்கு ஒருநாள் முன்னர் கூட, ஸ்கிரிப்ட் அப்டேட் ஆக இருக்குமாறு, புதிது புதிதான விஷயங்களைச் சேர்த்தும், திருத்தியும் வருகிறார் மோகன்ராஜா.

“‘சைரன்’ படத்தை அடுத்து ராஜேஷ்.எம் இயக்கத்தில் ‘பிரதர்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில்தான் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதற்கிடையே ஒரே சமயத்தில் அறிமுக இயக்குநர் அர்ஜூனன் இயக்கி வரும் ‘ஜீனி’, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தவிர மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

‘தனி ஒருவன்’ நயன்தாரா

இந்நிலையில் ‘ஜீனி’ படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த வாரம் படக்குழு வெளிநாடு பறக்கவும் திட்டமிட்டு வருகிறது. ‘தனி ஒருவன்’ படத்தைப் பொறுத்தவரை நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் படத்தின் லைன் என்பதால், ஹீரோவுக்குச் சமமான கதாபாத்திரமாக வில்லன் கதாபாத்திரமும் உண்டு.

மோகன்ராஜா

முதல் பாகத்தில் அரவிந்த்சாமி அமைந்தது போல, ‘பாகம் 2’லும் வலுவான வில்லனைத் தேடி வேட்டையை ஆரம்பித்துவிட்டார் மோகன்ராஜா. ஸ்கிரிப்ட்டும் ரெடி, ஹீரோவும் ரெடி… ஹீரோயினும் ரெடி… ஆனால் வில்லன் இன்னமும் யாரென முடிவாகவில்லை. ‘தனி ஒருவன்’ படத்தில் யாரும் எதிர்பார்க்காத வில்லனாக அரவிந்த்சாமி அமைந்தது போல், இதிலும் ஒரு சர்ப்ரைஸ் வில்லனை ஆலோசித்து வருகிறார்கள். அந்த வலுவான வில்லன் செட் ஆனதும் அடுத்தடுத்த அறிவிப்புகள் ராக்கெட் வேகத்தில் சீறிப்பாய்ந்து வரும் என்கிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours