சென்னை: “நண்பர் விஜயகாந்தின் இறுதிச் சடங்கை சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். அவருடைய இந்த பண்பு கலைஞரிடமிருந்து வந்தது” என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ‘கலைஞர் 100’ விழாவில் பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், வடிவேலு உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியவதாவது: “எனது நெருங்கிய நண்பர் விஜயகாந்தின் இறுதிச் சடங்கை சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். அவருடைய இந்த பண்பு கலைஞரிடமிருந்து வந்தது. என்னுடைய தமிழ் ஆசான்கள் மூன்று பேர். கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி. எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு ஆளுமைகளையும் தனது வசனங்கள் மூலம் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாய் மாற்றியவர் கருணாநிதி.
கருணாநிதி தன்னையும் வளர்த்தார். தமிழையும் வளர்த்தார். தமிழ்நாட்டையும் வளர்த்தார். தன்னுடைய கொள்கைகளை தன்னுடைய வசனங்களில் இடம்பெறச் செய்வார். அவரை நவீன தமிழ் சினிமாவின் வசன சிற்பி என்று சொன்னால் மிகையாகாது. கருணாநிதி போன்று நடுவாங்கு எடுத்த ஹேர்ஸ்டைல்தான் வேண்டும் என்று சிறுவயதில் என் அக்காவிடம் சொல்வேன்.
மேடையின் ஓரத்தில் நின்று பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். கருணாநிதி இருக்கும் மேடையில் நான் எப்போதும் ஓரமாக தான் இருப்பேன். அவர் எனக்கு சூட்டிய ‘கலைஞானி’ என்ற பட்டத்தை என்றும் மறக்கமாட்டேன். எந்த வாய்ப்பையும் விடக்கூடாது என்பது நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட பாடம். அதைதான் நான் எனது வாழ்க்கையில் பின்பற்றி வருகிறேன்” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.