சென்னை: “முதன்முதலில் கலைஞரை நேரில் பார்த்தபோது அவர் என்னை ‘வாங்க மன்மத ராஜா’ என அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா என ஆச்சரியமாக இருந்தது” என நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமோ இல்லை. ஒரு படத்தின் பூஜையின்போது தான் முதன்முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கு வந்திருந்தவர் என்னை, ‘வாங்க மன்மத ராஜா’ எனக் கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா என ஆச்சரியமாக இருந்தது, நெகிழ்ந்துவிட்டேன்” என நினைவுகளை பகிர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “‘அசுரன்’ படம் பார்த்துட்டு முதல்வர் என்னைத் தொடர்புகொண்டு, ‘பிரதர் நான் ஸ்டாலின் பேசுறேன்’ என்றார். அவர் பிரதர் என்று அழைத்த அந்த யதார்த்தமான அணுகுமுறை. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது.
முதல்வர் என்றாலே வானத்தில் ஒரு எட்ட முடியாத நட்சத்திரமாக இருக்க வேண்டும் எனபது போல் இல்லாமல், மிகவும் எளிமையானவராக, எளிதில் அணுகக்கூடிய ஒருவராக, நம்மில் ஒருவராக இருக்கும் முதல்வரை பார்க்கும்போது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்பதை நம்பவே முடியாது.
கலைஞரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். யாராவது சொன்னால் தான் அவர் மறைந்துவிட்டார் என தோன்றுகிறது. மற்றபடி அவர் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பது போலத்தான் எனக்கு தோன்றும். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியன் பூங்குன்றனார் சொன்னார், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று. 2000-ல் கருணாநிதி ‘நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்’ என்று. நாமாக வாழ்வோம், நலமாக வாழ்வோம்” என்று பேசினார் தனுஷ்.> வாசிக்க: “மாற்றங்களை நிகழ்த்தியவர் கருணாநிதி” – சூர்யா புகழாரம் @ ‘கலைஞர் 100’ விழா
+ There are no comments
Add yours