இப்படி ஒரு மனிதனை இனிமேல் பார்க்க முடியுமா? – விஜயகாந்த்திற்கு செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி புகழஞ்சலி
05 ஜன, 2024 – 12:50 IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவரான கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்த குவிந்தனர். இந்நிலையில், அவரது இறப்பு அன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத பலரும் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல பாடகர்களான செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதியினர் விஜயகாந்த் காலமான போது தாங்கள் வெளிநாட்டில் கச்சேரியில் மாட்டிக்கொண்டதாகவும், எனவே அன்று அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை என்று கூறியுள்ளனர்.
தற்போது அவரது நினைவிடம் முன் அஞ்சலி செலுத்திய அவர்கள், அதன்பின் அளித்த பேட்டியில், ‘ஒரு தலைவன் இப்படி தான் இருக்க வேண்டு என்று காண்பித்தவர். கடையெழு வள்ளல்களை பற்றி கேள்வி தான் பட்டிருக்கிறோம். பார்த்ததில்லை. ஆனால், கேப்டனை பார்த்திருக்கிறோம். இதற்கு பிறகு இப்படி ஒரு மனிதனை பார்ப்போமா? என்று தெரியவிலை. அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்று சொல்வதே பெருமை’ என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours