2024ல் தள்ளாடப் போகும் தமிழ் சினிமா… – காரணம் என்ன? – Tamil cinema is going to falter in 2024…

Estimated read time 1 min read

2024ல் தள்ளாடப் போகும் தமிழ் சினிமா… – காரணம் என்ன?

06 ஜன, 2024 – 12:21 IST

எழுத்தின் அளவு:


Tamil-cinema-is-going-to-falter-in-2024...---What-is-the-reason?

திரையுலகம் என்பது தியேட்டர் சார்ந்த வியாபாரமாக மட்டுமே ஒரு காலத்தில் இருந்தது. அதன்பின்பு ஆடியோ உரிமை, சாட்டிலைட் உரிமை, யு டியூப் உரிமை, ஓடிடி உரிமை என இதர பல உரிமைகளை விற்பதன் மூலம் கூடுதலாக தனி வருவாய் கிடைத்து வந்தது. இப்போது, அந்த உரிமைகளில் சில பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அந்த உரிமைக்காக பல கோடிகளைக் கொடுத்தவர்கள் தற்போது அத்தனை கோடிகளைக் கொடுக்கத் தயாராக இல்லையாம். அந்த உரிமைகளை வியாபாரம் செய்து அதன் மூலம் மட்டும் கிடைத்த தொகையை வைத்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தவர்களுக்கு சிக்கல் வந்துள்ளது என்கிறார்கள்.

உதாரணமாக ‘லியோ’ படத்தின் வியாபாரத்தை எடுத்துக் கொள்வோம். இப்படத்தின் தியேட்டர் வசூல் 600 கோடியைக் கடந்தது என்று தகவல். அதன் ஓடிடி உரிமை 125 கோடிக்கும், சாட்டிலைட் டிவி உரிமை 75 கோடிக்கும், ஆடியோ உரிமை 15 கோடிக்கும் விற்கப்பட்டதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இதில் தியேட்டர் வசூலில் கிடைத்த 600 கோடி ரூபாயில், ஜிஎஸ்டி வரி, உள்ளாட்சி வரி, இதர கமிஷன்கள் போகக் கிடைப்பதுதான் பங்குத் தொகை, அதாவது ‘ஷேர்’ என்று சொல்வார்கள். அந்த ஷேரை எப்படி பிரித்துக் கொள்வது என தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தருக்கும் எத்தனை சதவீதம் என ஒரு ஒப்பந்தம் இருக்கும். அதன்படி தயாரிப்பாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். அந்தத் தொகையில் படத்தின் பட்ஜெட்டை கழித்த பின் மீதமுள்ள தொகைதான் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் லாபம். இந்தத் தியேட்டர் லாபம் தவிர, மேலே குறிப்பிட்ட, சாட்டிலைட் உரிமை, யு டியூப் உரிமை, ஓடிடி உரிமை, ஆடியோ உரிமை ஆகியவை தயாரிப்பாளரின் நேரடி வருவாயில் சேரும்.

தியேட்டர்கள் மூலம் கிடைக்கும் லாபம் என்பது படம் ஓடி முடிந்த பின்புதான் கிடைக்கும். ஆனால், சாட்டிலைட், ஓடிடி உரிமை ஆகியவற்றை படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அதன் மூலம் ஒரு படத்தை ஆரம்பிப்பதற்கான குறிப்பிட்ட தொகை முதலீடாகக் கிடைத்து விடும். எஞ்சியுள்ள தொகைக்குத்தான் பைனான்ஸ் வாங்குவார்கள். சில பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும் வினியோகஸ்தர்கள் அட்வான்ஸ் கொடுப்பதும் நடக்கும்.

2024ல் சிக்கல்
ஆனால், இந்த 2024ல் சாட்டிலைட், ஓடிடி, யு டியூப் உரிமை ஆகியவற்றில் பெரும் பின்னடைவு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு நிறுவனமும் அதிகத் தொகை கொடுத்து படங்களை முன்கூட்டியே வாங்கத் தயாராக இல்லையாம்.

டிவி உரிமை குறைய வாய்ப்பு
ஓடிடியில் படங்கள் நான்கே வாரங்கள் வந்துவிடுவதால், சாட்டிலைட் டிவிக்களில் அந்தப் படங்களைப் பார்க்க யாரும் விரும்புவதில்லை. அதனால், புதிய படங்களை டிவியில் ஒளிபரப்பினாலும், அதற்கு சரியான விளம்பரங்களும் கிடைப்பதில்லை, டிஆர்பி என சொல்லப்படும் ரேட்டிங்கும் முன்பு போல் சிறப்பாக வருவதில்லை என்கிறார்கள். எனவே, சாட்டிலைட் டிவிக்கான உரிமை விலை என்பது பாதியாகக் குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கிறார்கள். ஒரு தனியார் டிவி மட்டும்தான் முன்னணி நடிகர்களின் படங்களை அதிக விலை கொடுத்து வாங்க முன் வருகிறார்களாம். மற்ற நிறுவனங்கள் படங்கள் வெளிவந்து ஓடினால் மட்டுமே வாங்கலாம் என்று மாறிவிட்டார்களாம். அதனால், ஓடாத படங்களுக்கும், சிறிய படங்களுக்கும் சாட்டிலைட் உரிமை என்பது இப்போது எட்டாக்கனியாகி விட்டது. இது ஒரு அதிர்ச்சி என்றால் யு டியூப் ஹிந்தி உரிமை மூலம் மற்றொரு அதிர்ச்சி கிடைத்துள்ளது.

யு டியூபிலும் குறையும் வருவாய்
தமிழ்ப் படங்களுக்கும், இதர தென்னிந்திய மொழி படங்களுக்கும் ஹிந்தி டப்பிங் உரிமையைப் பெற்று அதை யு டியூபில் வெளியிட்டு வந்த ஒரு நிறுவனம் தற்போது அந்த உரிமையை வாங்குவதை நிறுத்த யோசித்து வருகிறது. ஓடிடியிலேயே பல தமிழ்ப் படங்களை, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அதனால், ஹிந்தியில் அந்த படங்களின் யு டியூப் உரிமையை தனியாக வாங்கி வெளியிட்டு பல கோடி பார்வைகளைப் பெற முடியவில்லை. விஜய், அஜித், ரஜினி, அல்லு அர்ஜுன் உள்ளிட்டவர்களின் பல படங்கள் ஹிந்தியில் டப்பிங் ஆகி பல கோடி பார்வைகளைப் பெற்று நல்ல வருமானத்தைக் கொடுத்தன. ஆனால், இப்போது அப்படி கிடைக்கவில்லை என அந்த வட்டாரங்கள் இந்த உரிமையை அதிக விலை கொடுதது வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். உதாரணத்திற்கு 10, 15 கோடிகளைக் கொடுத்து வாங்கியவர்கள் இப்போது 2, 3 கோடிகளைக் கூட கொடுக்க முன்வரவில்லையாம்.

ஓடிடி வளர்ச்சியும்… சரிவும்…
கொரோனா வந்த பிறகு கடந்த நான்கு வருடங்களில் அபரிமிதமான வளர்ச்சியை ஓடிடி நிறுவனங்கள் பெற்றன. 2020, 2021, 2022 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 100 படங்கள், தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின. கடந்த நான்கு வருடங்களில் தியேட்டர்களில் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்ற படங்களின் ஓடிடி உரிமைகளை வாங்க கடும் போட்டி நிலவியது. அதன் மூலம் மட்டுமே சில கோடிகள் சிறிய படங்களுக்கு வருவாயாகவும் கிடைத்தது. முன்னணி நடிகர்களின் படங்கள் 100 கோடிக்கு விற்கப்பட்டதும் நடந்தது. ஆனால், கடந்த 2023ம் ஆண்டில் ஓடிடியில் நேரடியாக வெளியான படங்களின் எண்ணை ஒற்றை இலக்கத்தில் குறைந்தது. இந்த வருடம் அது கூட நடக்குமா என்பது ஆச்சரியம்தான்.

மேலும், இந்த ஆண்டிற்காக வாங்க வேண்டிய பெரிய படங்களை சில ஓடிடி நிறுவனங்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டுவிட்டதாம். அந்தப் படங்களுடன் இந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடும் முடிந்துவிட்டதாம். எனவே, மற்ற படங்களை வாங்கவும், சிறிய படங்களை வாங்கவும் அவர்களிடத்தில் பட்ஜெட் இல்லையாம். ஒரு ஆண்டிற்கான பட்ஜெட் என குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதே அதற்குக் காரணம். அதோடு கடந்த சில ஆண்டுகளில் அதிகமான தொகையைக் கொடுத்து வாங்கிய சில படங்கள் ஓடிடி நிறுவனங்களுக்கு அதிகப் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை, அதனால் வருவாயுமில்லை என்ற நிலைதான் இருந்துள்ளது. எனவே, அதிகத் தொகை கொடுத்து வாங்கி நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவெடுத்துள்ளார்களாம். இதன் காரணமாக ஓடிடி மூலம் கிடைக்க வேண்டிய பெரும் வருவாய் இந்த வருடத்தில் தடைபட வாய்ப்புகள் அதிகம். இதற்கு உதாரணமாய் ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணைய உள்ள புதிய படத்திற்கான ஓடிடி உரிமையை கொடுக்க முன்வந்து பெரிய விலை சொல்லப்படாததால் அதிர்ச்சியடைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆடியோ ரைட்ஸிற்கும் பாதிப்பு
ஆடியோ உரிமையும் கடந்த வருடங்களைப் போல இந்த வருடத்தில் போகாது என்பதும் கூடுதலான அதிர்ச்சி. சில முன்னணி இசையமைப்பாளர்களின் பாடல்கள் கூட கடந்த ஆண்டில் ஹிட்டாகவில்லை. யு டியுபிலும் 100 மில்லியன் பார்வைகளைக் கடக்கவில்லை என்பது நேரடியாக ரசிகர்கள் பார்க்கும் உதாரணமாக உள்ளது. அந்த உரிமை விலையும் ஓரிரு கோடிகளுக்கு சரிந்துவிட்டது.

தியேட்டர்கள் வருவாய் தவிர மேலே விளக்கமாகச் சொல்லப்பட்ட இதர வருவாய் மூலம் கிடைக்க வேண்டிய பெரும் தொகை வரும் வழிகள் அடைபட ஆரம்பித்துள்ளதால் பல முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

இப்போதைய தீர்வு என்ன
ஒரு புதிய வியாபார வட்டம் வரும் போது ஏற்றமும், அதற்கான வரவேற்பு குறையும் போது ஏற்படும் சரிவும் இயல்பாக நிகழும் ஒன்று. இப்போதைக்கு நடிகர்கள் அவர்களது சம்பளத்தைக் குறைப்பதுதான் இதற்கான சிக்கலைத் தீர்க்கும் என்று திரையுலகினர் கருதுகிறார்கள். ஓடிடி உரிமையால் தங்களது சம்பளத்தை அதிகப்படுத்திய நடிகர்கள் அதனால் இழப்பு என்று வரும் போது குறைத்துக் கொள்ளவும் வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே.

இந்த சிக்கல்களை ஆரம்பத்திலேயே சம்பந்தப்பட்டவர்கள் அமர்ந்து பேசினால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும், இல்லையென்றால் இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு தள்ளாட்டமாக இருக்கும் என அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours