பண்டிகை நாள்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எப்போதும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவும்.
விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் புதிய படங்களைத் திரையரங்குகளில் பார்த்துக் கொண்டாட வேண்டும் என்பதை வருடந்தோறும் சில குடும்பங்கள் கட்டாயத் திட்டமாக வைத்திருப்பார்கள். இதனாலேயே வருடந்தோறும் பண்டிகை தினங்களில் வெளியாகும் படங்களுக்கான எதிர்பார்ப்பும் இருக்கும்.
இந்த வருடமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிவுள்ளன. அந்த லிஸ்டை இப்போது பார்க்கலாம்.
தமிழ்:
அயலான்:
கடந்த 2018-ம் ஆண்டு ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஏலியன் பாத்திரத்தை அசலாகக் கொண்டு வர வேண்டும் என்கிற முனைப்பில் அதிகளவில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு உழைப்பைக் கொடுத்து எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இத்திரைப்படத்தில் மொத்தமாக 4500 கிராபிக்ஸ் ஷாட்கள் இடம்பெற்றுள்ளன. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ‘இன்று, நேற்று, நாளை’ ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக வருகிற ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கேப்டன் மில்லர்:
போஸ்டரில் இருக்கும் தனுஷின் உருவத் தோற்றத்திலிருந்து தொடங்கி பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது ‘கேப்டன் மில்லர்’. தனுஷ், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். பிரீயட் படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடித்திருக்கிறார். 12-ம் தேதி வெளியாகும் இத்திரைப்படமும் பொங்கல் ரேஸுக்குத் தயாராகவுள்ளது.
மிஷன் – Chapter 1:
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது மிஷன். ‘2.o’ திரைப்படத்திற்குப் பிறகு இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுக்கவிருக்கிறார் நடிகை எமி ஜாக்சன். இத்திரைப்படமும் ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
மெரி கிறிஸ்துமஸ்:
விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப், ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், ‘மெரி கிறிஸ்துமஸ்’. பாலிவுட் இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஒரே சமயத்தில் இந்தியிலும் தமிழிலும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்கிறார் நடிகை கத்ரினா கைஃப். இப்படமும் பொங்கல் ரிலீஸாக 12-ம் தேதி வெளியாகிறது.
தெலுங்கு:
குண்டூர் காரம்:
நடிகர் மகேஷ் பாபுவின் 28வது திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘குண்டூர் காரம்’ படமும் பொங்கல் ரிலீஸுக்குத் தயாராகவுள்ளது. நடிகை ஶ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் கதாநாயகிகளாகக் களமிறங்கியுள்ளனர். இப்படத்தை ‘அல வைகுண்டபுரமலோ’ திரைப்படத்தின் புகழ் திரிவிக்ரம் இயக்கியிருக்கிறார். தெலுங்கு சினிமா ரசிகர்களின் அளப்பரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற 13-ம் தேதி திரைக்கு வருகிறது ‘குண்டூர் காரம்’.
சைந்தவ்:
நடிகர் வெங்கடேஷின் 75வது படமாக உருவாகியிருக்கிறது ‘சைந்தவ்’. இவருடன் ஆர்யா, நவாஸுதின் சித்திக், ஷ்ரதா ஶ்ரீநாத் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘ஹிட்’ பட வரிசைகளை இயக்கிய இயக்குநர் சைலேஷ் கொலனு இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படமும் பொங்கல் விடுமுறையில் வரும் 13-ம் தேதி திரைக்கு வருகிறது.
ஈகிள்:
ரவி தேஜா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற படம் ‘ஈகிள்’. இப்படம் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி இயக்கும் இரண்டாவது திரைப்படம். இவரே இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் செய்துள்ளார். பொங்கல் ரேஸுக்குத் தயாராகிவுள்ள இப்படமும் வருகிற 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நா சாமி ரங்கா:
‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ என்கிற மலையாளத் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியிருக்கிறது ‘நா சாமி ரங்கா’. நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியிருக்கிற இப்படத்தை விஜய் பின்னி இயக்கியிருக்கிறார். கீரவாணி இசையமைத்துள்ள இப்படம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஹனு மேன் (Hanu Man):
‘ஓ பேபி’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஹனு மேன்’. நடிகை அமிர்தா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். ‘ஜோம்பி ரெட்டி’ புகழ் பிரசாந்த் வர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ம் தேதி திரைக்கு வருகிறது.
மலையாளம்:
அப்ரஹாம் ஓஸ்லெர்:
மிதுன் மானுவல் தாமஸ் இயக்கியிருக்கும் ‘அப்ரஹாம் ஒஸ்லெர்’ திரைப்படத்தில் ஜெயராம், அர்ஜுன் அசோகன், அனஸ்வரா ராஜன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் மம்மூட்டி கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பொங்கல் வெளியீடாக இப்படம் வருகிற 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இவைதான் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிற தென் இந்தியப் படைப்புகள். இதில் எந்தப் படத்திற்காக அதிகளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள் என்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள்.
+ There are no comments
Add yours