அம்பலமான பிக் பாஸ் பிரமோஷன்கள்
சபரிமலை சீசன் என்பதால் ‘ஐயப்பா’ பாடலோடு பெட்டி டாஸ்க்கையும் இணைத்த பாட்டை தேர்ந்தெடுத்த புத்திசாலித்தனத்திற்காக பிக் பாஸ் டீமிற்கு பாராட்டு. ‘யப்பா.. யப்பா.. ஐயப்பா.. கண்ணுல காச காட்டப்பா’ என்கிற பாடல் ஒலிக்க நாள் 95 விடிந்தது. மார்னிங் ஆக்ட்டிவிட்டி ஆரம்பம். போட்டியாளர்கள் பேசிக் கொள்வதில் இருந்தே ஐடியாக்களை உருவுவதில் பிக் பாஸ் கைதேர்ந்தவர். “அர்ச்சனா வர்றதுக்கு முன்னாடி வெளியே பக்காவா பிரமோஷன் ரெடி பண்ணிட்டு வந்திருக்காங்க” என்று நேற்றைய எபிசோடில் தினேஷ் பேசிக் கொண்டிருந்ததை சரியாக ‘கேட்ச்’ பிடித்து விட்ட பிக் பாஸ், இன்று அதையே காலைச் செயலாக அதையே வைத்து விட்டார்.
ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னால் என்னென்ன பிரமோஷன் ஏற்பாடுகளை செய்திருக்கலாம் என்பதை மற்றவர்கள் சொல்ல வேண்டும். இலைமறை, காய்மறையாக இருந்த பிரமோஷன் விஷயத்தை சந்தி சிரிக்க வைத்து விட்டார் பிக் பாஸ். முதலில் வந்த அர்ச்சனா “விஜய் செமயா பண்ணியிருக்காரு” என்று விளக்க “அப்படிப் பண்ணியிருந்தா நான் வெளில போயே இருக்க மாட்டேனே” என்று சிரித்தார் விஜய். (பெயரில் விஜய் என்று வைத்துக் கொண்டு விளம்பரம் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா என்ன?!).
அடுத்து வந்த மாயா விஷ்ணு மீது நேரடியான தாக்குதல் நடத்தினார். ‘ஒவ்வொரு வாரமும் என்ன போடணும்னு விதம் விதமாக டிரஸ்ஸோட போட்டோஷூட் நடத்திட்டுதான் வந்திருக்கார்” என்றார் மாயா. பின்பு எழுந்த விஷ்ணு அதை ஒப்புக் கொண்டு “பின்னே.. மக்கு சாம்பிராணி மாதிரியா இங்க வந்து நிக்க முடியும்? எல்லா பிக் பாஸையும் பார்த்து அந்த பிரமோஷன்களில் இருந்து எடுத்துக்கிட்டேன். ஆனா இங்க அர்ச்சனாவிற்கு ஒரு தனியான ரசிகர் பட்டாளம் இருக்கு. அவங்க பக்காவா பிரமோஷன் பண்ணிட்டு வந்திருக்காங்க” என்றார்.
பிறகு வந்த பெரும்பாலோனோர் அர்ச்சனாவையே கை காட்டினார்கள். “விம், டோமக்ஸ் டாஸ்க்ல கூட நீங்க இருக்கற டீமிற்குத்தான் பாயிண்ட்ஸ் நெறய வருது. அத வெச்சு கண்டுபிடிச்சிட்டேன்” என்றார் பூர்ணிமா. (ரசிகர்கள் தீயா வேலை செய்யறாங்களா அல்லது வாங்கின காசுக்கு பிஆர் டீம் விசுவாசமா இருக்காங்களா?!).
+ There are no comments
Add yours