நடனம் என்றால் எனக்கு பயம்: நடன கலைஞர்கள் விழாவில் விஜய்சேதுபதி ஓப்பன் டாக்
04 ஜன, 2024 – 13:44 IST

தமிழ் திரையுலகின் முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கவுரவிக்கும் வகையிலும், ‘டான்ஸ் டான்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட தமிழ் திரையுலகின் முன்னாள், இந்நாள் நடனக் கலைஞர்கள், தமிழ் திரையுலக முன்னணி இயக்குநர்கள், நடிகர் விஜய் சேதுபதி முதலானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சில் தமிழ் திரையுலகில் 1938 முதல் 2023 வரை பணியாற்றிய அனைத்து நடனக் கலைஞர்களும் கவுரவிக்கப்பட்டனர் மேலும் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்களும் இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய்சேதுபதி பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. உங்களின் சாதனைகள் அளப்பரியது. நடனம் என்றாலே எனக்குப் பயம், நான் வேலைபார்த்த அனைத்து மாஸ்டர்களுக்கும் அது தெரியும்.சினிமாவில் கொடுக்கப்படும் குறைவான நேரத்தில் ஆச்சரியப்படும்படியாக கதைக்கு ஏற்றவாறு, போடப்பட்டிருக்கும் செட்டுக்கு ஏற்றவாறு, மக்களும் ரசிக்கும் வகையில், நடனத்தை அமைக்கும் உங்கள் திறமை போற்றப்பட வேண்டியது.
பழைய காலப் பாடல்கள் பார்க்கும் போது, அதில் வரும் நடனம் எல்லாம் எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும், சில பாடல்கள் ஒரு நாளில் எடுத்ததாகச் சொல்வார்கள் அது மிகப்பெரிய ஆச்சரியம். உங்களைக் கவுரவிக்கும் இந்த விழாவினில் பங்கேற்றது எனக்குப் பெருமை. உங்களுடைய அனுபவங்களையெல்லாம், எங்களுக்காகப் பதிவு செய்யுங்கள். என்றார்.
+ There are no comments
Add yours