நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டிருந்தது. திரைப் பிரபலங்களும், தொண்டர்களும், ரசிகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர். அந்தவகையில் விஜயகாந்த் உடலிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய்யும் சென்றிருந்தார். அஞ்சலி செலுத்திவிட்டு பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் மகன்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து விஜய் புறப்பட்டார்.
விஜய் கிளம்பும்போது அவர் மீது காலணி வீசப்பட்டது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்துக்கு விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தலைவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருக்கிறார்.
நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது ரசிகர்கள் மனதை புண்படுத்தும் மற்றும் அருவருக்கத்தக்க செயல். காலணி வீசிய நபரை கண்டுபிடித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours