‘கேப்டன் மில்லர்’ விழாவில் நடிகைக்கு தனுஷ் ரசிகர் பாலியல் துன்புறுத்தல்
04 ஜன, 2024 – 10:16 IST

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், தனுஷ், சிவராஜ்குமார், சுந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நேற்று (ஜன.,3) சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஐஸ்வர்யா, ‘கேப்டன் மில்லர்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். அதனால், அவர் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.. நிகழ்ச்சி முடிந்த பின் மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த தனுஷைப் பார்க்க அவரது ரசிகர்கள் பலரும் முட்டி மோதி உள்ளனர். அப்போது அருகில் இருந்த ஐஸ்வர்யாவை, தனுஷ் ரசிகர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
அவரை பிடித்து ஐஸ்வர்யா அடிக்கும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. அந்த தனுஷ் ரசிகர் ஐஸ்வர்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து உடனடியாக கூட்டத்தில் நுழைந்து ஓடுவது வரை வீடியோவில் இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த ‘சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்த நிகழ்ச்சியை ஐஸ்வர்யா தொகுத்து வழங்கிய போது நடிகர் கூல் சுரேஷ், அவருக்கு மாலை அணிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் அதற்கு மன்னிப்பு கேட்டார் கூல் சுரேஷ்.
விழாக்களை நடத்துபவர்கள் தகுந்த பாதுகாப்புடன் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக எழுந்துள்ளது. ரசிகர்கள் அதிகம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பதாகவும் பலரும் கூறி வருகிறார்கள். கடந்த வருடம் சென்னையில் ஏஆர் ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது கூட இப்படி நடந்ததாக சிலர் தெரிவித்திருந்தனர்.
நேற்றைய ‘கேப்டன் மில்லர்’ நிகழ்ச்சியில் நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் என்ன சொல்லப் போகிறார்கள்?.
+ There are no comments
Add yours