மாயா & பூர்ணிமா – ஊடலும் கூடலும்
நாள் 94. ‘மகான்’ திரைப்படத்தில் இருந்து ‘Rich.. Rich’ என்கிற பாடல் ஒலித்தது. (இது என்ன பாடலென்று இணையத்தில் தேடிக் கண்டுபிடிக்க எனக்கு ஐந்து நிமிடங்கள் ஆனது!)
“யாரு இங்க சேஃப் கேம் ஆடறா?” என்று காலையிலேயே ஒரு பட்டாசை ஜாலியாகப் பற்ற வைத்தார் விசித்ரா. அது நன்றாகவே வேலை செய்தது. “பூர்ணிமாதான் இங்க சேஃப் கேம் ஆடறாங்க. எனக்கு மட்டும்தான் அது தெரியும். நேரேஷன் டாஸ்க்ல ஒருத்தரை காப்பாத்த டிரை பண்ணாங்க. என் கிட்ட சொன்னது வேற. ஆனா அங்க சொன்னது வேற” என்று ஜாலியாக பூர்ணிமாவை கோர்த்து விட்டார் மாயா. அதில் வேடிக்கையும் இருந்தது. வில்லங்கமும் இருந்தது.
விஷ்ணுவைப் பற்றி தன் மனதில் உள்ளதையெல்லாம் அங்கு கொட்டி தீர்த்து விட்டு வந்து அது சார்ந்த வருத்தத்தில் இருக்கிற நேரத்தில், தன் தோழியே தன்னைப் பற்றி இப்படிச் சொல்கிறாளே என்கிற வலி பூர்ணிமாவிற்கு இப்போது ஏற்பட்டது. எனவே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கண் கலங்க ஆரம்பித்தார். வழக்கம் போல் மாயா விதம் விதமான சமாதான முயற்சியில் ஈடுபட்டு அவரைத் தேற்றிக் கொண்டிருந்தார். ‘ஹப்பாடா. நம்ம வந்த வேலை முடிஞ்சது’ என்கிற திருப்தியுடன், ‘இதோ வந்துட்டேன்’ என்று விசித்ரா வெளியில் கிளம்ப, மாயா அதைப் பார்த்து சிரி சிரியென்று சிரித்துத் தீர்க்க, அந்தச் சிரிப்பு பூர்ணிமாவின் முகத்திலும் ஒருவழியாக பிரதிபலித்தது.
“பெட்டித் தொகை மேலும் ஏறலாம். மாறாக கீழேயும் இறங்கலாம். யோசிச்சு முடிவெடுங்க. டெட்லைன் முடிஞ்சுன்னா பெட்டியை நான் தூக்கிடுவேன்” என்று செல்லமாக எச்சரிக்கை செய்தார் பிக் பாஸ். ஐந்து லட்சமாக இருந்த தொகை, இப்போது மூன்றரை லட்சமாக குறைந்திருந்தது. (வருமான வரி, டிடிஎஸ் கழித்த தொகை போல). “அய்யா.. பார்த்து ஏத்துங்கய்யா” என்ற மணி, “இது பத்தியே ரொம்ப யோசிக்க வெக்கறாங்கள்ல” என்று விஷ்ணுவிடம் புலம்பினார்.
+ There are no comments
Add yours