2023ல் தமிழ் சினிமா மொத்த வசூல் 2024ல் ‘டபுள்’ ஆகுமா ?
03 ஜன, 2024 – 10:58 IST
2023ம் ஆண்டு சினிமாவைப் பொருத்த வரையில் சில பல சோதனைகளுடனும், சாதனைகளுடனும் கடந்து போனது. கொரோனாவுக்குப் பிறகு கடந்த நான்கு வருடங்களில் வெளியான சில முக்கிய படங்கள் வழக்கமான வசூலைக் காட்டிலும் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்து வருகின்றன.
2022ம் ஆண்டு வெளியான ‘பொன்னியின் செல்வன் 1’ 500 கோடி, ‘விக்ரம்’ 400 கோடி வசூல், ஆகியவை தவிர ‘பீஸ்ட், வலிமை, திருச்சிற்றம்பலம், டான், சர்தார், லவ் டுடே,’ ஆகிய நேரடி தமிழ்ப் படங்களும், ‘ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2’ ஆகிய டப்பிங் படங்களும் பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்து மொத்தமாக அந்த ஆண்டில் 1500 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்தன.
கடந்த 2023ம் ஆண்டில், ‘ஜெயிலர், லியோ’ ஆகிய இரண்டு படங்கள் 1200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்தன. ஒரே ஆண்டில் இரண்டு தமிழ்ப் படங்கள் 600 கோடி வசூலைப் பெற்ற ஆண்டாக முத்திரை பதித்தன. அவை மட்டுமல்லாது, “பொன்னியின் செல்வன் 2, வாரிசு’ படங்கள் தலா 300 கோடிக்கும் அதிகமான வசூல், ‘துணிவு’ 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தன. மற்றும் ‘மார்க் ஆண்டனி, மாவீரன், வாத்தி, மாமன்னன், விடுதலை 1, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், போர் தொழில், குட்நைட்,’ உள்ளிட்ட படங்களின் வசூலையும் சேர்த்துப் பார்த்தால் மொத்தமாக 2200 கோடி வரை செல்கிறது.
2022ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023ல் வெளியாகி வசூலைக் குவித்த விதத்தில் 700 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது. இது முக்கிய படங்களுக்கான கணக்கு மட்டுமே. மற்ற சுமாரான படங்களின் வசூலையும் சேர்த்தால் ஒரு 200 கோடி வரை கணக்கில் சேரும்.
இந்த 2024ம் ஆண்டில் பல பிரம்மாண்டப் படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் என பல வருவதால் இந்த ஆண்டு 3000 கோடிக்கும் மேல் அல்லது அதைவிட டபுள் ஆகுமா என்பது தயாரிப்பாளர்களின், இயக்குனர்களின், டாப் நடிகர்களின் கையில் உள்ளது.
+ There are no comments
Add yours