திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
`விருந்துக்கு அழைக்க விரும்பு வி.ஐ.பி’ என்கிற பகுதிக்காக விகடனுக்கு அளித்த நேர்காணலில் நடிகர் விஜயகாந்த் பகிர்ந்த சில விஷயங்கள் இதோ!
சென்னை, வாஹினி ஸ்டூடியோவில் ‘பதவிப்பிரமாணம்’ படப்பிடிப்பு. காட்சி முடிந்து ‘கட்’ சொன்னதும் வந்து அமர்ந்தார். அவரிடம் கேட்டோம்: “மிகப் பிடித்தமான ஒருவருக்கு நீங்கள் டின்னர் கொடுக்க வேண்டும். நீங்கள் விருந்துக்கு அழைக்கும் வி.ஐ.பி. யாராக இருக்கும்?”
“வி.வி.ஐ.பி-க்கும் மேம்பட்ட, என் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சாமியை (அதீத பக்தி. சாமி என்றே குறிப்பிடுகிறார்) அழைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால், அது இயலாதே. அதனால் அவர் துணைவியார் ஜானகி அம்மாளை அழைப்பேன்…”
“எம்.ஜி.ஆரைக் குறிப்பிடுவதற்குக் காரணம் என்ன?”
“அவருடைய பண்பாடு, ஈகைத்தன்மை, எல்லோரையும் சமமாக மதிக்கும் அன்பு… இப்படி நிறைய அடுக்கிக்கொண்டே போகலாம். சின்ன வயதிலிருந்தே நான் எம்.ஜி.ஆர். ரசிகன். அவர் மன்றத்தைச் சேர்ந்தவன். ‘ராமன் தேடிய சீதை’ படம், வெளிவந்த போது மதுரையிலிருந்து லாரியிலேயே ரசிகர் மன்றத்தினருடன் சென்னை வந்து, சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆரைப் பார்த்திருக்கிறேன். அவர் தனிக் கட்சி ஆரம்பித்து, முதன் முதலில் தேர்தலில் ஈடுபட்டு, திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மாயத்தேவரை நிறுத்திய போது எம்.ஜி.ஆர். பிரசாரத்துக்காகச் சென்ற இடங்களுக்கெல்லாம் அவரது ரசிகன் என்ற முறையில் நானும் உடன் சென்றிருக்கிறேன். அப்போது எங்களுக்குத் தயிர்சாதப் பொட்டலமும் கறியும் கொடுப்பார்கள். என்ன ருசியாக இருக்கும் தெரியுமா?”
“நீங்கள் நடிகரான பின் எம்.ஜி.ஆரைச் சந்தித்துப் பேசியிருக்கிறீர்களா?”
“நடிகர் ராஜேஷின் தம்பி திருமணம் விஜய சேஷ மஹாலில் நடந்தபோது சந்தித்திருக்கிறேன். என்னைக் கையைப் பிடித்து, தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார். திடீரென எழுந்து போய்விட்டார். பத்தடி தூரம்கூடப் போயிருக்க மாட்டார். திரும்பி வந்து மீண்டும் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். வீட்டுக்கு ஒரு முறை வாருங்கள், பேசுவோம்’ என்று சொல்லிச் சென்றார். அதன்பின் அவரைச் சந்திக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.”
“ஜானகி அம்மாவை நீங்கள் முதன்முதலில் சந்தித்தது எப்போது?”
“அவர்களது வளர்ப்பு மகனான அப்புவுக்குச் சொந்தமான – தி. நகரில் உள்ள அப்பு ஹவுஸில் ‘நல்லவன்’ பட ஷூட்டிங் நடந்தது. அங்கே இரண்டு வீடுகள். ஒன்று படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடப்படுகிறது. பக்கத்து வீட்டில் அப்பு குடியிருக்கிறார். ஷூட்டிங் நடந்தபோது ஜானகி அம்மாள் அப்பு வீட்டில் இருந்திருக்கிறார். அவர் எங்களைச் சாப்பாட்டுக்கு அழைத்தார். அன்றுதான் அந்த அம்மாவுடன் பேச எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னையும் ராதிகா, எஸ்.எஸ். சந்திரன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவையும் சாப்பிட அழைத்தார். எஸ். எஸ். சந்திரன் மட்டும் ‘அம்மா, அரசியல்ரீதியாக நான் உங்களைத் தாக்கிப் பேசுகிறவன். உப்பைத் தின்றால் துரோகம் செய்தவனாகி விடுவேன். சாப்பிடக் கூப்பிட்டதற்கு ரொம்ப நன்றி என்று கூறி கும்பிட்டுவிட்டு, சாப்பிட மறுத்துவிட்டார்.
நாங்கள் சாப்பிட்டோம். அதன்பின் இன்று வரை என்னைத் தன் மகன் போலவே அம்மா (ஜானகி அம்மாள்) பாவிக்கிறார்கள். என் கல்யாணத்துக்கு வரும்படி அழைத்தேன். ‘மணநாளன்று என்னால் வர இயலாது. பின்னர் எப்போதாவது உங்கள் வீட்டுக்கு வருகிறேன்’ என்றார்கள். அதேபோல எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். எனக்கும் என் மனைவி பிரேமலதாவுக்கும் எம்.ஜி.ஆர். பெயர் பொறித்த மோதிரம், செயின் பரிசளித்தார்கள். இன்று வரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்து எங்களை ஆசீர்வதிக்கிறார்கள். நானும் என் மனைவியும் அவரை ‘அம்மா’ என்றுதான் அழைப்போம். என் மகன்கள் (விஜய் பிரபாகரனும், சண்முக பாண்டியனும்) அவரைப் பாட்டி என்று கூறி, அவரின் மடியிலேறி விளையாடுவார்கள். ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்குப் போய் வரும்போதெல்லாம் என் பிள்ளைகளுக்கு நிறைய பரிசுப்பொருட்கள் வாங்கி வந்து கொடுப்பார்…”
“நீங்கள் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குப் போவதுண்டா?”
“எனக்கு நேரம் கிடைப்பதில்லை. குழந்தைகளுடன் என் மனைவி போய் வருவாள். சமீபத்தில் போயிருந்த போது என் மகன் பிரபாகரனை, அம்மா அவர்கள் தன் மடிமீது தூக்கி வைத்துச் சாதம் ஊட்டி விட்டார்களாம். அவன் தட்டில் இருந்த எச்சில் சாப்பாட்டையே அவர்களும் சாப்பிட்டார்களாம். அதைப் பார்த்து என் மனைவி கண் கலங்கி விட்டாள். ‘அவங்க (ஜானகி அம்மாள்) எவ்வளவு பெரியவங்க, இப்படிச் செய்றாங்களே…’ என்று உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் சொன்னாள்…”
“எங்கு வைத்து விருந்து கொடுப்பீர்கள்?”
“எங்கள் வீட்டிலேதான். வீட்டில் விருந்து தருவதுதான் முறை. ஓட்டலில் கொடுப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காது. என் மனைவி என்னைவிட இந்த விஷயத்தில் பிடிவாதமானவள். வீட்டில்தான் விருந்து. அதுவும் எல்லா அயிட்டங்களையும் என் மனைவியே தன் கைப்படத் தயாரித்து, அவளே பரிமாறுவாள்…”
“விருந்தில் என்னென்ன இருக்கும்?”
“எம்.ஜி.ஆர். என்றால் கருவாடு, மீன், காடை, கோழி, ஆட்டுக்கறி, இறால் என்று அவருக்குப் பிடித்தமான எல்லா அயிட்டங்களையும் வகைவகையாகச் செய்து குவித்து விடுவோம். பாஸந்தி என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதுவும் இருக்கும். இரவைவிடப் பகலில் தான் திருப்தியாக, நிறைய சாப்பிடுவார். எனவே, எம்.ஜி.ஆர். என்றால் இரவு டின்னரைவிட, மதிய விருந்துதான் பெஸ்ட். ஆனால், அவருக்குச் செய்து போட்டு அவர் சாப்பிடுவதைப் பக்கத்திலிருந்து பார்க்க எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லையே. அந்த ஆசையை அம்மாவுக்கு விருந்து வைத்துத் தீர்த்துக் கொள்வோம். அம்மா என்ன சாப்பிடுவார்கள். அவர்களுக்கு எது எது பிடிக்கும் என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு அவற்றையெல்லாம் செய்து பரிமாறுவோம்.”
“டின்னர் முன் இரவிலா, பின் இரவிலா?”
“அது அம்மாவின் வசதியைப் பொறுத்தது. அநேகமாக முன் இரவில்தான் இருக்கும்.”
“அழைப்பு ஜானகி அம்மாவுக்கு மட்டும்தானா?”
“அவர்களுடன் எத்தனை பேர் வந்தாலும் எங்களுக்குச் சந்தோஷம்தான்.”
நீங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வீர்களா?”
“கண்டிப்பாக! விருந்தே எங்கள் வீட்டில்தானே. எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்க வேண்டுமே!”
“டின்னரின் போது உங்கள் டிரஸ்..?”
“கதர் வேஷ்டி, சட்டைதான். எனக்குச் சின்ன வயதிலிருந்தே கதர்தான் பிடிக்கும். சினிமாவுக்கு நடிக்க வந்தபோது, சான்ஸ் தேடிய சமயத்திலும், நடிகனாகிச் சில படங்களில் நடிக்கும் வரையிலும் பாண்ட், ஷர்ட் போட்டுக் கொண்டிருந்தேன். பத்துப் பன்னிரண்டு படங்களில் நடித்தபின் மீண்டும் கதர் உடுத்தத் துவங்கினேன். இப்போதெல்லாம் கதர் உடைதான். என் மனைவியைப் பொறுத்தவரை அது அவள் இஷ்டம்.”
“டின்னர் டேபிளிலா, தரையில் அமர்ந்தபடியா..?”
“நான் எங்கள் வீட்டில் மாடியில் கீழே உட்கார்ந்து வாழையிலையில் தான் சாப்பிடுவேன். என் மகன் பிரபாகரனும் அதையே பழக்கமாக்கிவிட்டான். வேலைக்காரர்கள் உட்பட அனைவரும் சாப்பிட்டுவிட்டார்களா என்பதைத் தெரிந்து கொண்டபின்தான் நான் சாப்பிடுவேன். எம்.ஜி.ஆர். அவர்களும் அப்படித்தான். அவரைப் போலவே பல பழக்கவழக்கங்கள் என்னிடம் இருப்பதாக அம்மா (ஜானகி அம்மாள்) அடிக்கடி சொல்லுவார்கள். அதே பழக்கம் என் மகனிடமும் இருப்பதில் அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம். நானென்றால் கீழே உட்கார்ந்துவிடலாம். அம்மாவுக்கு டேபிளில்தான் டின்னர்…”
“பழவகைகள், பூங்கொத்துகள் டேபிளில் வைப்பர்களா? வெளிச்சம் எப்படி இருக்க வேண்டும். சாப்பிடும் போது இசை உண்டா?”
“கண்ணுக்கு அழகாகப் பூக்களும், வாய்க்கு ருசியான பழங்களும் டின்னர் டேபிளில் உண்டு. வெளிச்சம் பளிச்சென்று இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை சாப்பிடும் நேரத்தில் இசை இருக்க வேண்டுமென்று விரும்ப மாட்டேன். மனம் விட்டுப் பேச வேண்டிய நேரத்தில் இசை எதற்கு? “
“அவர்கள் அருகில் உட்கார்ந்து கொள்வீர்களா, எதிரிலா?”
“என் பிள்ளைகள் இரண்டு பேரும் அம்மாவுக்கு இரண்டு புறமும் அமர்ந்து கொள்ள வேண்டும். என் மனைவி உணவு பரிமாற வேண்டும். நான் எதிரில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்த்து ரசிக்க வேண்டும்.”
“விருந்தின் போது என்னென்ன பேசுவீர்கள்?”
“நிறைய நிறைய பேச வேண்டும். ஆனால் பேசுவது நாங்களல்ல. அம்மா பேச வேண்டும். அதைக் காது குளிர நாங்கள் கேட்க வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி அம்மாவுக்குத் தெரிந்தது போல் வேறு யாருக்கும் தெரியாது. அவற்றை அவர்களைச் சொல்லச் சொல்லிக் கேட்போம்…”
“ஜானகி அம்மாள் உங்களுக்குச் சொன்ன புத்திமதி எதாவது…”
“தானத்திலே சிறந்தது அன்னதானம். ஏழை எளியவர்களுக்கு நிறைய உதவுங்கள். கொடுப்பதால் நாம் குறைந்து போய்விடமாட்டோம் என்று அடிக்கடி அம்மா சொல்லுவார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் உன் கணவருக்கு நீ உதவியாக, தூண்டுகோலாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குச் சோறு போட்டு அழிந்தவர்கள் யாரும் கிடையாது. என்னைவிட அவர் (எம்.ஜி.ஆர்.) மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். அதனால் மற்றவர்களின் கஷ்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும்’ என்று என் மனைவியிடமும் சொல்லுவார்கள். என் மனைவியைத் தன் மகள் போலவே பாவித்து அன்பு செலுத்துகிறார்கள்…”
“டின்னரில் பீடா, வெற்றிலை பாக்கெல்லாம் உண்டா?”
“இரண்டுமே இருக்கும். எனக்கு பீடாவைவிட வெற்றிலை பாக்குத்தான் பிடிக்கும். சாப்பிட்டபின் அதைப் போட்டால்தான் உண்ட திருப்தியே.”
“உங்கள் கெஸ்ட்டுக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்?”
“அவர்கள் பார்க்காத பரிசுகளா? கொடுத்தே பழக்கப்பட்டுவிட்ட அவர்களுக்கு நாங்கள் என்ன தரமுடியும். ஆனாலும் எனக்கு ஒரு ஆசை. அந்தப் புண்ணிய தம்பதிகள் (எம்.ஜி.ஆர்.ஜானகி அம்மாள்) சேர்ந்து நிற்கும் படம் ஒன்றை (இதுவரை அவர்களே கூட பார்த்திராத படமாகத் தேர்ந்தெடுத்து) பெரியதாக பிரிண்ட் போட்டு எங்களின் சிறிய பரிசாகக் கொடுக்க ஆசை. நானும், என் மனைவியும், குழந்தைகளுடன் சேர்ந்து, காலைத் தொட்டுக் கும்பிடுவதுபோல் தனியாகப் படமெடுத்து, அவர்கள் காலில் விழுந்து நாங்கள் வணங்குவது போல வெட்டி, ஒட்டி, சேர்த்து அல்லது வரைந்து அதை அம்மாவுக்குப் பரிசாகக் கொடுக்க வேண்டும்.”
விஜய்காந்த் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஆத்மார்த்தமாக, அவரது அடிமனதிலிருந்து வந்தது. எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவர் மனம் விம்மியது. கண்களிலே நீர்க்கோர்வை.
+ There are no comments
Add yours