பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மகள் இரான் கான் இன்று தன் காதலன் நுபுர் சிகாரேயைத் திருமணம் செய்கிறார். இத்திருமணத்திற்கான சடங்குகள் ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது.
நேற்று மருதானி மற்றும் மஞ்சள் வைக்கும் சடங்கு நடந்தது. இதில் ஆமீர் கான், அமீர் கான் சகோதரி நிகத் ஹெக்டே, அவரின் உறவினர்கள் மற்றும் மணமகன் வீட்டார் கலந்து கொண்டனர். இதில் மணமகன் நுபுர் சிகாரே, மணமகள் இரா கான் மராத்திய பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.
திருமணம் பாந்த்ராவில் உள்ள தாஜ் லேண்ட் ஓட்டலில் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு நடைபெறும் விருந்தில் பிரத்யேகமாக மராத்திய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த கையோடு அனைவரும் ஜெய்ப்பூர் செல்கின்றனர். அங்கு திருமண வரவேற்பு நடைபெறுகிறது. இது தவிர டெல்லியிலும் ஒரு திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக திருமண தம்பதி மற்றும் ஆமீர் கான் குடும்பத்திற்கு நடிகர் சல்மான் கான் தனது இல்லத்தில் பிரத்யேக விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இவ்விருந்தில் ஆமீர் கான் தனது மூத்த மகன் ஜுனைத் கானுடன் கலந்து கொண்டார். ஆமீர் கானின் இரண்டாவது மனைவி கிரண் தனது மகனுடன் கலந்து கொண்டார். ஆமீர் கானும் சல்மான் கானும் பாலிவுடில் பல ஆண்டுகளாக மிகவும் நெருக்கமான உறவை பேணி வருகின்றனர். எனவேதான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு திருமணத் தம்பதிக்கு சல்மான் கான் விருந்து வைத்துள்ளார்.
ஆமீர் கான் சகோதரி நிகத் ஹெக்டே இத்திருமண ஏற்பாடுகள் குறித்து கூறுகையில்,”திருமணத்திற்கு பனாரஸ், லக்னோ, டெல்லி, பஞ்சாப்பில் இருந்து உறவினர்கள் வந்துள்ளனர். திருமண இசைநிகழ்ச்சியில் பாடுவதற்காக நாங்கள் பயிற்சி எடுத்து வருகிறோம். ஆமீர் கான் இதற்காக பிரத்யேகமாக பயிற்சி எடுக்கிறார். பதிவுத்திருமணமாக இது நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு யாரும் பரிசுப்பொருட்கள் கொண்டு வரவேண்டாம் என்று ஆமீர் கான் கேட்டுக்கொண்டுள்ளார். இராகானும் இதே கொள்கையை பின்பற்றுகிறார். ஆனால் அப்படி கொடுப்பதாக இருந்தால் தனது தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்துவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
+ There are no comments
Add yours