Bigg Boss 7 Day 93: `என்னை கேம்காக யூஸ் பண்ணிக்கிட்டாரு' – கொதித்த பூர்ணிமா; நீண்ட உரையாற்றிய விஷ்ணு

Estimated read time 1 min read

‘எந்த வீட்டில் எண்டர்டெயின்மென்ட் இருக்கும் என்று பார்க்கலாம்?’ என்று பிக் பாஸ் சொன்னாலும் இரண்டு வீடுகளிலும் புறணிதான் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆண்கள் தரப்பிலாவது ஏதாவது சுவாரசியம் நிகழும் என்று பார்த்தால் ம்ஹூம்.. விஷ்ணுவும் மணியும் உட்கார்ந்து பொழுது பூராவும் மாயா, பூர்ணிமாவைப் பற்றி வம்பு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் விஷ்ணு பயங்கரமான குற்றவுணர்வில் இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. எனவே அதை மழுப்புவதற்காக டிசைன் டிசைனாக அனத்திக் கொண்டிருக்கிறார்.

மறுபடியும் அதேதான். மூன்றாவது சீசன் சாண்டி, கவின் குரூப் அடித்த லூட்டிகளை ஒரு பெருமூச்சுடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது. எத்தனை குதூகலம் அதில் இருந்தது?! முந்தைய சீசன்களில் கடைசிக் கட்டத்திலாவது அனைத்தையும் மறந்து ஒரு மாதிரி இணக்கமாகி விடுவார்கள். ஆனால் இதிலோ கடைசி வரை புகைந்து கொண்டே இருக்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

ஸ்டோர் ரூம் பெல் அடிக்க, அர்ச்சனா எழுந்து செல்ல முற்பட்டார். “அங்க என்னமோ இருக்கு பாரேன்” என்ற தினேஷ், அர்ச்சனாவை திசை திருப்பி விட்டு ஸ்டோர் ரூமிற்கு ஓடி டாஸ்க் லெட்டரை முதலில் கைப்பற்றினார். பெரும்பாலும் டாஸ்க் அறிவிப்பை அர்ச்சனாதான் வாசிப்பது வழக்கம். ‘அய்யாங்..நான்தான் படிப்பேன்’ என்று அர்ச்சனா சிணுங்கினாலும் தினேஷ் தரவில்லை. பாலைவனத்தில் பெய்த ஒரு துளி மழை மாதிரி, ஒரு சின்ன சுவாரசியமான காட்சி. பிறகு அனைவரும் கூடியதும் ‘போய்.. படி’ என்று தினேஷ் விட்டுத் தந்து விட்டார்.

‘புத்தாண்டு விருப்பங்கள், தீர்மானங்கள் போன்றவற்றை ஒவ்வொருவரும் சொல்ல வேண்டுமாம்’. அதுதான் டாஸ்க். “மாயாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். உடல் மற்றும் மன நலனை அவரைப் பார்த்து கற்றுக் கொண்டேன். வெளியில் சென்று பின்பற்றுவேன்’ என்றார் அர்ச்சனா. ஆம், இந்த சீசனில் அதிகமாக வெறுக்கப்படுகிறவராக மாயா இருந்தாலும் அவரிடமுள்ள EQ அம்சங்களை பலர் கவனிக்கத் தவறி விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

மாயா

“இதுவரைக்கும் எல்லோரையும் ஈஸியா நம்பிடுவேன். ஆனா இனிமே நம்பிடக்கூடாதுன்ற பாடத்தை பிக் பாஸ் வீடு தந்திருக்கு. சுயநலக்காரன், தந்திரக்காரன்னுல்லாம் என்னை சொல்றாங்க. நான் கண்ணாடி மாதிரி. எனக்குத் தந்ததைத்தான் திருப்பித் தருவேன். எண்ணம் போல் வாழ்க்கை’ என்று விஷ்ணு சொன்னதெல்லாம் பூர்ணிமா மீதான நேரடித்தாக்குதல். வழக்கம் போல் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தார் பூர்ணிமா.

டாஸ்க்கில் விஷ்ணு பேசியதை வைத்து பிறகு மாயாவும் பூர்ணிமாவும் ரகளையாக கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் மிகையான உற்சாகத்துடன் மாயா வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து ‘நான் யாரை நம்பறது?’ என்பதை விதம் விதமான மாடுலேஷன்களில் கத்திக் கொண்டிருந்தார். “ஏன் அந்த அப்பிராணி புள்ளைய ஏமாத்தினீங்க?’ என்று சர்காஸ்டிக்காக சொன்னார் விசித்ரா. பெண்கள் ராஜ்ஜியத்தில் இருந்தது பெரிய வீடு.

விஷ்ணு – பூர்ணிமா – இருவரும் ஒன்றுதான்

விஷ்ணு, பூர்ணிமா ஆகிய இருவருமே தந்திரக்காரர்கள்தான். பரஸ்பர ஆதாயம் கருதித்தான் சில உதவிகளைச் செய்து கொண்டார்கள். ஆனால், தான் மட்டுமே ஏமாற்றப்பட்டதுபோல் இருவருமே அனத்துவது வேடிக்கை. பூர்ணிமாவின் பேட்டர்ன் ஒரே மாதிரி இருக்கிறது. ஆனால் விஷ்ணுவோ வார ஆரம்பத்தில் சண்டைக்கோழியாகவும் வார இறுதியில் பிள்ளைப்பூச்சியாகவும் மாறி மாறி அவதாரம் எடுத்துக் கொண்டிருந்தார். பிறகு பூர்ணிமாவுடன் ரொமான்ஸ் நாடகம், மீண்டும் கோபம், மீண்டும் மன்னிப்பு, அழுகை போன்றவற்றை நிகழ்த்தி விட்டு “பூர்ணிமா ரொம்ப டேன்சரஸ்’ என்று இப்போது ‘சூப் பாய்’ பாவனையை அணிந்து கொள்வது சுயநலமான நாடகம்.

பூர்ணிமா – விஷ்ணு

விஷ்ணுவால் தான் ஏமாற்றப்பட்டதை டிசைன் டிசைனான கழிவிரக்கத்துடன் அனத்திக் கொண்டிருந்தார் பூர்ணிமா. ‘என்னை யூஸ் பண்ணிக்கிட்டார்’ என்பதை அவர் மீண்டும் மீண்டும் சொல்வது வில்லங்கமான அர்த்தமாக கூட மாறி விடலாம். ‘வெச்சு செஞ்சிட்டாங்க’ன்ற மீனிங் பலருக்குத் தெரியல. இந்த வீட்டில் அதைப் பேசாதீங்க’ என்று கமல் அறிவுறுத்தியும் அதையே மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. அனத்தலின் நடுவே “சரி. நான் உனக்கு ஃபேவரிட்டசம் பண்ணினேன்னே வெச்சுக்கோயேன்” என்று பூர்ணிமா சுயவாக்குமூலம் தர “சரியா பேசுங்க” என்று எச்சரித்தார் மாயா.

“நீ என்னை யூஸ் பண்ணி ஃபைனல் போயிட்டே.. கப்பு வாங்கறதுக்கு கூட இப்பவும் என்னை யூஸ் பண்ணனுமா.. நான்தான் வெளில பைத்தியம் மாதிரி தெரிவேன். முட்டாளா ஃபீல் பண்றேன்” என்று விஷ்ணுவின் வெற்றியே தன் மீதான மோசடியின் மீதுதான் நிகழ்ந்தது என்பது மாதிரி பதிவு செய்து கொண்டிருந்தார் பூர்ணிமா. அவர் அனத்துவதைப் பார்க்க ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும், இம்மாதிரியான ரொமான்ஸ் நாடகங்கள் பிக் பாஸ் வீட்டில் எப்போதும் நிகழ்வது என்பது அவருக்குத் தெரியாதா?!

‘பொட்டி வந்துடுச்சேய்’ – ரூ. 1 லட்சம் ஆரம்பம்

அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘பணப்பெட்டி’ டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ்.. ‘நான் ஜெயிக்க மாட்டேன். ஆட்டம் முடிஞ்சது. இனிமே செய்ய ஒண்ணுமில்ல’ என்று நினைப்பவர்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு பெட்டி படுக்கையை கட்டலாமாம். ஆனால் இதற்கு டெட்லைன் உண்டு’ என்பது அறிவிப்பு. ஆரம்பத்தொகையாக ஒரு லட்சம் வர தினேஷ் அதை ஏலம் விட்டார். பிறகு மூன்று லட்சமாக மாறியது. “இது ஏழாவது சீசன். ஏழு டிஜிட் வர்ற வரைக்கும் யாரும் எடுக்க மாட்டாங்க” என்று உசுப்பேற்றி விட்டார் தினேஷ். பத்து லட்சம் வராமல் யாரும் பெட்டியை சீந்த மாட்டார்கள் என்பது அதன் பொருள்.

“பாரேன்.. இந்த நூறு நாளும் என்னை யூஸ் பண்ணிக்கிட்டார். நான்தான் அதெல்லாம் தெரியாத முட்டாளா இருந்திருக்கேன்” என்று கண்கலங்கி அபலை நாடகத்தை மறுபடியும் பூர்ணிமா ஆரம்பிக்க, அவரை சமாதானப்படுத்துவதற்குள் மாயாவின் பாடு பெரும்பாடு ஆகியது. “அவர் ஒண்ணும் டாஸ்க்ல பயங்கரமா ஆடி ஜெயிக்கலை. லக் அடிச்சது. குழந்தை மாதிரி சிலதை பிடிவாதம் பிடிச்சு வாங்கிடுவார்” என்று விஷ்ணுவின் சீக்ரெட் ரகசியத்தைச் சொன்னார் மாயா.

மாயா

இவரது பிக் பாஸ் பயணம் எப்படி இருந்தது?’

மக்களிடம் சிண்டு முடிவதற்காக அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘பயணம்’ என்பது அதன் தலைப்பு. ஒருவர் இன்னொருவரைத் தேர்ந்தெடுத்து பிக் பாஸில் அவரது பயணம் எவ்வாறாக இருந்தது. வெற்றி, தோல்வி என்ன, பிளஸ் மற்றும் மைனஸ் பாயிண்ட் என்ன என்பதையெல்லாம் அலசிக் காயப் போட வேண்டும். இந்த வாய்ப்பை சிலர் பாசிட்டிவ்வாகவும் துல்லியமான மதிப்பீடாகவும் பயன்படுத்த, சிலர் விரோதப் புகையை அதிகரிக்க பயன்படுத்திக் கொண்டார்கள். ஒருவர் பேசி முடித்த பிறகு, ஒப்புதலா, இல்லையா என்பதை மற்றவர்கள் சொல்ல வேண்டும்.

முதலில் வந்த அர்ச்சனா விஜய்யை தேர்வு செய்து “முதல்ல ரக்கட் பாயா தெரிஞ்சார். கோபக்காரரா இருந்ததால பயமா இருந்தது. ரீஎன்ட்ரில வந்தப்ப ‘எல்லோரையும் பற்றி தெரியும்’ன்னு சொல்லி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாரு. ஆனா வாரம் முழுக்க சைலண்ட்டா இருந்தார். வாரஇறுதியில மட்டும்தான் பேசினாரு. சக ஆட்டக்காரர்கள் பற்றி நல்லா தெரியும்ன்றதை ஒளிச்சு வெச்சு ஆடறாரு” என்று சொல்லி முடிக்க “விஜய் ரக்கட்ன்றதையெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்” என்று ஆதரவுக்கரம் நீட்டினார் விசித்ரா. “நீங்க வீட்டுக்குள்ள மட்டும்தான் பார்த்தீங்க. நான் ரெண்டு இடத்துலயும் பார்த்துட்டு பேசறேன்” என்று அர்ச்சனா சொல்ல “ஏற்பு அல்லது மறுப்பு மட்டும்தான் காட்டணும்” என்று மற்றவர்கள் தலையிட்டார்கள். பூர்ணிமா மட்டும் இதை ஏற்கவில்லை.

அடுத்தது ஒரு ரகளையான காம்பினேஷன். பூர்ணிமா விஷ்ணுவைத் தேர்ந்தெடுத்தார். மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி விட ஒரு நல்ல சந்தர்ப்பம். “முதல் வாரத்துல ஒரு பாண்டிங் ஏற்பட்டுச்சு. அடுத்த வாரம் அவர் அக்ரஷனா மாறிட்டார். சின்ன விஷயத்துக்கு கூட வெடிச்சிடுவார். பொறுமையா கேட்கற பக்குவம் இல்ல.. அதுக்கு அப்புறம் இரண்டு வாரம் மகிழ்ச்சியா போச்சு. ‘நம்புகிறேன், ஆனால் மதிக்க மாட்டேன்’ன்னு ஒரு டாஸ்க்ல அவர் பேரைச் சொல்லிட்டேன். அவ்வளவுதான். அது அவர் மண்டைல ஏறிடுச்சு. வெச்சு செஞ்சுட்டாரு….

அர்ச்சனா கிட்ட நிறைய வார்த்தைகளை விட்டாரு. தனியா கூட்டிட்டு போய் ‘இது தப்பு’ன்னு சொன்னேன். அதைக் கூட தப்பா புரிஞ்சிக்கிட்டாரு. அவர் காப்டன்சி வாரத்துலதான் எனக்கு பயம் ரொம்ப அதிகமா ஆச்சு. அப்புறம் வந்து கண்கலங்கி அழுதார். ஒன்றரை மணி நேரம் பேசினோம். ஃபேமிலி ரவுண்டில ஏன் ஓடி ஒளியணும்? அப்புறம் டிக்கெட் டு பினாலே.

அர்ச்சனா -விஜய்

ஒரு விஷயம் வேணும்னா மத்தவங்களை யூஸ் பண்ணிட்டு அதை அடைய தயங்க மாட்டாரு. அவரால அதிகமா பாதிக்கப்பட்டது நான்தான். அதான் டிக்கெட் கிடைச்சிடுச்சுல்ல. ஏன் திரும்பவும் அதையே பண்றீங்க?”

என்று பேசி முடித்த பூர்ணிமாவின் பேச்சு, விஷ்ணுவின் பயணம் என்பதைத் தாண்டி இரு தனிப்பட்ட நபர்களுக்கான உறவு என்பதில் அதிகம் ஃபோகஸ் ஆனது போல் தெரிந்தது. மற்றவர்கள் இதற்கான ஏற்பு, மறுப்பு காட்டுவதற்குள் பூர்ணிமா சென்று இருக்கையில் அமர்ந்து விட்டார். ‘இதென்ன வீடா… எழுந்து வாங்க’ என்று விஷ்ணு அதிகாரம் செய்ய ‘பார்த்தீங்களா?’ என்று வீம்பாக அமர்ந்திருந்தார் பூர்ணிமா. இதன் நடுவில் மாயாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே உரசல் ஏற்பட்டது. முடிவில் மணியும் தினேஷூம் ‘ஏற்பில்லை’ என்கிற பலகையைக் காண்பிக்க மற்றவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

தினேஷ் பற்றி புலம்பிய விசித்ரா; கூடுதல் டென்ஷனை ஏற்படுத்திய ரெஸ்பான்ஸ்!

அடுத்து வந்த மாயா, அர்ச்சனாவைத் தேர்ந்தெடுத்தார். ‘இவங்க வந்த அன்னிக்கே ‘அவ்ளதானா’ன்ற மாதிரி தோணிச்சு. விமன் கார்டு, ஹாரஸ்மென்ட் விஷயத்துல பேசறதுக்கு கிட்ட கூட போக முடியல. அழுததெல்லாம் ஃபேக்கா தெரிஞ்சது. கிட்ட போனாலே பிரவோக் பண்றன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கும் trauma இருக்குன்னு சொன்னா அதையும் கேலி பண்ணாங்க. மனப்பிரச்சினைன்றது எல்லோருக்குமானதுதான். நிறைய விஷயங்கள் காமிராக்காக பண்ண மாதிரி இருந்தது. ஏன் அர்ச்சனாவை யாருமே கேள்வி கேக்க மாட்டேன்றாங்கன்னு எனக்குத் தோணும். ஒரு விசாரணை நாளிற்குப் பிறகு ஸாரி கேட்டாங்க” என்று மாயா சொல்லி முடிக்க அனைவருமே இதை ஒப்புக் கொண்டார்கள்.

ஒரு தயக்கம், யோசனைக்குப் பிறகு தினேஷைத் தேர்ந்தெடுத்தார் விசித்ரா. நல்ல செலக்ஷன். “தினேஷை முன்னாடியே கொஞ்சம் தெரியும். ஆனா க்ளோஸ்லாம் இல்ல. முதல் நாளே மாயா கிட்ட பட்டுன்னு முகத்தில் அடிச்ச மாதிரி பேசிய போது எனக்கு உள்ள ஸ்பார்க் ஆனது. பூர்ணிமா என்னைத் தூக்கி சின்ன வீட்டில் போட்ட போது ஒரு மாதிரி மேனேஜ் பண்ணிட்டேன். ‘நல்லா பாயிண்ட்டா பேசறாரே’ன்னு நெனச்சேன். ஆனா அது எனக்கே திரும்பி வந்தது.

விசித்ரா, தினேஷ்

தினேஷ் கூட இருக்கறவங்லாம் எனக்கு எதிரா ஆயிடற மாதிரியே தோணுது. வின் பண்றதுக்காக மட்டும்தான் வந்திருக்காரு. யார் கூடயும் அட்டாச் இல்ல. பெண்கள் கிட்ட எப்படி பேசறதுன்னு தெரியல. முதல் கேப்டன்சி பெஸ்ட்டா இருந்தது. என்னை பல முறை ஃபேக்-ன்னு சொன்னாரு. பேசித் தீர்த்திருக்கலாம்” என்று விசித்ரா முடித்தார். இப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. எல்லோருமே ‘disagree’ பலகையைக் காட்டினார்கள். அதை உடம்பு வணங்கி ஏற்றுக் கொண்டார் தினேஷ். விசித்ரா நிச்சயம் நொந்து போயிருப்பார்.

அடுத்து வந்த மணி தேர்ந்தெடுத்தது மாயாவை. “ரொம்ப கடினமான பிளேயர். கேமிற்காக பண்றேன்னு வெளில சொல்லாம பண்ணியிருக்கலாம். அவர் காப்டன்சி என்னளவுல நல்லா இருந்தது. ஆனா ஏன் தப்பு பண்ணாங்கன்னு கேள்வி வந்தது. ஒருமுறை தண்ணி கேட்கும் போது (ஸாரி.. ஸாரி – சிரிப்புடன் மாயா) நீயே வந்து எடுத்துக்கங்கன்னு சொன்னது ரொம்ப ஹர்ட் ஆச்சு. எண்டர்டெயின்மெயின்ட் இருக்கற அளவிற்கு அவங்க கிட்ட முரணும் இருக்கு. கயிறு டாஸ்க்ல ரொம்ப பயந்துட்டு இருந்தேன். ஆனா தலைகீழா ஆயிடுச்சு. பேசிப் பேசியே பிரெண்ட்ஸா ஆயிட்டோம். அப்புறம் மறுபடியும் கெட்டுடுச்சு.. அவங்க எண்டர்மெயின்மென்ட் பிடிக்கும். கேம் பிடிக்காது” என்று மணி சொல்லி முடிக்க, பூர்ணிமா மட்டும் ‘ஏற்பில்லை’ பலகையை காட்டினார்.

நீளமாக பூர்ணிமாயணம் பாடிய விஷ்ணு

அடுத்து வந்தவர் விஷ்ணு. பேசியது பூர்ணிமாவைப் பற்றி. மனோகரா வசனம் மாதிரி பத்து பக்கத்திற்கு பேசினார் விஷ்ணு. “முடிச்சிட்டீங்களா விஷ்ணு?” என்று பிக் பாஸே கேட்குமளவிற்கு இருந்தது அவரது உரை. “முதல் வாரம் இவங்கள சென்சிபிள்ன்னு நெனச்சேன். தப்போ.. சரியோ. தோண்றதை பேசுவேன். இவங்க ஒண்ணு முடிவு செஞ்சிட்டா அதன்படியே மத்தவங்க நடக்கணும்ன்னு நெனப்பாங்க. காப்டன்சி நல்லாயிருந்தது. ஆனா மாயா கிட்ட மட்டும் ஃபேவர் காட்டினாங்க. வார நாள்ல ஒண்ணு சொல்லிட்டு வீக்கெண்டுல மாத்திடுவாங்க. பர்சனலா நிறைய பேசிக்கிட்டோம். நான் அவங்களை யூஸ் பண்ணது கிடையாது. அவங்க ஆடறது டிஸ்டிராக்ட் பண்ற கேம். ஃபேமிலி டாஸ்க்ல டிஸ்டிராக்ட் ஆச்சு. பலியாடா மாத்திட்டாங்க.” என்று விஷ்ணு தொடர, அதை இடைமறித்த மாயா ‘என்னைப் பத்தியா பேசறீங்க” என்று கேட்டார். “ரெண்டு பேரும் ஒண்ணுதானே?” என்று நக்கலடித்த விஷ்ணு மீண்டும் தொடர்ந்தார்.

பூர்ணிமா, மாயா

“டாஸ்க்ல மத்தவங்களை டார்கெட் பண்ணுவாங்க. என்னைத் தொட மாட்டாங்க. அதுவொரு ஸ்ட்ராட்டஜிதான். நல்ல விஷயம் என்னன்னா.. நல்லா பேசுவாங்க. கெட்ட விஷயம்’நிறைய பேசுவாங்க.. மத்தவங்க சொன்னது பத்தி விளக்கம் தந்துட்டே இருக்கறது இருப்பாங்க” என்று பூர்ணிமாயணம் உரையை புகார்ப்பட்டியலாக மாற்றி முடித்தார் விஷ்ணு.

“ஒரு சிலதுல மட்டும்தான் உடன்பாடு” என்று சொல்லி ஏற்பு பலகையைக் காட்டினார் அர்ச்சனா. “காமிராக்காக பேசறதா சொல்றீங்கள்ல விஷ்ணு?. காமிரா இருக்குன்றதையே மறந்துட்டு பூர்ணிமா பேசிட்டாங்கன்றதுதான் உண்மை” என்று விஜய் சொன்னது ஒருவகையில் உண்மை. மூன்று ஏற்பும் மூன்று ஏற்பில்லையும் கலவையாக வந்தன. ‘அனைத்துமே ஏற்பு’ என்கிற அடிப்படையில், இந்த டாஸ்க்கில் மாயா வெற்றி பெற்றார்.

“தினேஷ் ஒரு இடத்திற்கு வந்தாலே அது எனக்கு எதிரா மாறிடுது. அது ஏன்னு புரியல?” என்று நொந்து போய் பேசினார் விசித்ரா. ‘அது அப்படியில்ல. தினேஷ் இல்லைன்னாலும் ஆகுது. ரவீனா எப்படி பேசுவாங்கன்னு எனக்குத் தெரியும்” என்று பூர்ணிமா அதை மறுக்க “உனக்கு ரவீனாவைப் பிடிக்காது. அப்படித்தான் பேசுவே’ என்று விசித்ரா எரிச்சலாக “ரவீனாவை எனக்குப் பிடிக்காதுன்னு யாரு சொன்னது? நீங்களா அப்படி நெனச்சிக்கிட்டு ரிஜிஸ்டர் பண்ணாதீங்க” என்று ஆவேசமாக மறுத்தார் பூர்ணிமா. “அப்படியா.. சொல்ற.. ஊர்ல அப்படித்தானே பேசிக்கிட்டாங்க’ என்ற விசித்ராவின் குரலில் இப்போது சுருதி இறங்கியிருந்தது. விசித்ராவுடன் இப்போது இணக்கமாக இருந்தாலும் மறுப்பு தெரிவிக்க வேண்டிய இடங்களில் தைரியமாக பூர்ணிமா பேசுவது சிறப்பான விஷயம்.

மணி

“ஒரு பாயிண்ட்டிற்கு மேல நான் பேசினது பர்சனலா போயிடுச்சுல்ல” என்று குற்றவுணர்வில் வருந்திய விஷ்ணுவிடம் “ஆமாம். பூர்ணிமா பேசினதுக்கு பதில் பேசினது மாதிரி ஆயிடுச்சு.. என்னைப் பத்தி பேச்சு வந்தா. ரவீனாவையும் கூடவே இழுத்துடுவாங்கள்ல. அப்படி” என்றார் மணி. தனது அனத்தலை மாயாவிடம் பூர்ணிமா மறுபடியும் ஆரம்பித்து ரகசியம் பேச ‘அய்யோ. விடுங்கப்பா..போதும்’ என்று காதைப் பொத்திக் கொண்டு அலறினார் அர்ச்சனா. பார்வையாளர்களின் மனநிலையும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். முடியல. அடுத்த டாஸ்க் அறிவிப்பின் போது ‘என்னத்த நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்” என்று இதே விவகாரத்தைப் பற்றி அர்ச்சனாவிடம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார் விஷ்ணு.

விஷ்ணுவின் குற்றவுணர்வும் அனத்தலும்

தினேஷ் பற்றிய தனது பேச்சிற்கு அனைவருமே disagree காட்டியதால் நொந்து போயிருந்த விசித்ராவைப் பற்றி “மேம் நம்ம மேல கோபமா இருக்காங்க போல” என்று பூர்ணிமா ஆரம்பிக்க “நான் பார்க்கற விஷயங்களை ஏன் உங்களால பார்க்க முடியலை” என்று புலம்ப ஆரம்பித்தார் விசித்ரா. “நீங்க பேசினது தப்புன்னு சொல்லல… டாஸ்க் படி உங்க நேரேஷன் பொருத்தமா இல்ல” என்று மாயா விளக்கம் சொல்ல “அப்ப நான் சொன்னதெல்லாம் பொய்யா?” என்று கோபித்துக் கொண்டார் விசித்ரா.

விசித்ரா

பூர்ணிமா பற்றி தான் பேசியதை யாரிடமாவது நியாயப்படுத்தியே ஆக வேண்டும் என்கிற தவிப்பில் இருக்கிறார் விஷ்ணு. எனவே மீண்டும் அர்ச்சனாவிடம் அதைப் பற்றிய பொழிப்புரையை வழங்க “விஷ்ணுவை எனக்கு பிடிக்கும். அவரோட கேம் பிடிக்காது’ என்று அர்ச்சனா சுருக்கமாகச் சொல்ல “நான் கேம் ஆடறேன். நீ ஆடலை. அதுதான் வித்தியாசம்” என்று அனத்தியவரிடமே குறை சொன்னார் விஷ்ணு. “நீங்க கேம் ஆடறீங்கள்ல.. அப்படின்னா அதோட எதிர்விளைவுகளை சந்திச்சுதான் ஆகணும்” என்று அர்ச்சனா சொன்னது நெத்தியடி பதில்.

பரிசுத் தொகை ஐந்து லட்சமாக உயர்ந்திருக்கிறது. பெட்டியை யார் எடுப்பார் என்கிற கனவுடன் அனைவரும் உறங்கச் சென்றார்கள். பணப்பெட்டி, டைட்டில் பரிசு ஆகிய அனைத்துத் தொகையையும் சேர்த்து ஒவ்வொரு வாரமும் வாக்களித்த பார்வையாளர்களுக்கே பிக் பாஸ் பேசாமல் பிரித்துத் தந்து விடலாம். அடிவாங்கினவங்க அவங்கதான். ஆகையால் கோப்பை அவர்களுக்கே!.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours