கடந்த டிசம்பர் மாதம், கடுமையான மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி மக்கள் அசுர பாதிப்பைச் சந்தித்திருந்தனர்.
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வெள்ள நிவாரணப் பொருள்களை நடிகர் விஜய் திருநெல்வேலிக்கே சென்று வழங்கினார். கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்குக் கல்வி விருதுகளையும் நடிகர் விஜய் வழங்கியிருந்தார்.

வெள்ள நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளும்போது நடிகர் விஜய்யை மக்கள் கொஞ்சும் காட்சிகள்தான் தற்போதைய சமூக வலைதள டிரண்டிங்.
அன்று என்னென்ன விஷயங்கள் நிகழ்ந்தன, நடிகர் விஜய்க்குத் தென் மாவட்ட மக்களின் வரவேற்பு எவ்வாறு அமைந்தது எனப் பல கேள்விகளை தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் பில்லா ஜெகனிடம் முன்வைத்தோம்.
அதற்குப் பதிலளித்த அவர், “விமான நிலையத்திலிருந்து சரியாக மதியம் 12 மணிக்கு மண்டபத்துக்கு வந்துட்டாரு. அங்கிருந்து 20 நிமிடத்துல நிவாரணப் பொருள்கள் வழங்குற இடத்துக்கு வந்ததும் பொருள்களைக் கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு. அரிசி, பருப்பு உட்பட மளிகை பொருள்களும் காய்கறிகள், வேட்டி சட்டை, சேலைகளும்தான் நிவாரணப் பொருள்களாக வழங்கினார். அவரே 1000 பேருக்கு இந்த நிவாரணப் பொருள்களைக் கொடுத்தார். அதுமட்டுமில்லாம வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரணத் தொகையையும் கொடுத்தார்.

தூத்துக்குடியில் ஒருவர் கரெண்ட் ஷாக் அடிச்சு இறந்துட்டாரு. அவரோட குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாயும் கொடுத்தாரு. மேலும், ரூ.25,000, ரூ.50,000-ன்னு மொத்தம் 57 பேருக்குக் காசோலைகள் கொடுத்தார். இந்த நிகழ்வு மதியம் 12.20 ஆரம்பிச்சு 3 மணி வரைக்கும் நடந்தது. அவ்ளோ எடை கனமான பொருள்கள் எல்லாத்தையும் அவரேதான் தூக்கிக் கொடுத்தார். இதுமட்டுமில்லாம 5000 பேருக்கு சைவ உணவு ஏற்பாடு பண்ணியிருந்தாரு. மாலை நேரம் வரைக்கும் நிறைய பேர் வந்து சாப்பிட்டாங்க. எல்லாரும் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆரைப் பார்த்த மாதிரி தளபதியைப் பார்க்கிறாங்க.
அவரை எல்லாரும் அரவணைச்சு கன்னத்தைப் பிடிச்சு கொஞ்சுனாங்க, அவரோட கையை எடுத்து தோள்ல போட்டுகிட்டு போட்டோ எடுத்துக்கிட்டாங்க. ஒரு அம்மா தளபதியைப் பார்த்ததும் நடனமாட ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாரோடையும் சிரிச்சு சந்தோஷமாக மக்களோட மக்களாகத் தளபதி இருந்தாரு. அவரை மக்கள் எதிர்பார்க்கிறாங்க. இதை அவர்கிட்டையே ‘உங்களை எதிர்பார்க்கிறோம்’னு நிறையப் பேர் சொல்லிட்டாங்க. அதுக்கு தளபதி ஒரு புன்னகையை மட்டுமே பதிலா கொடுத்தாரு.”

மேலும், “திடீர்னு தென்மாவட்டத்துல ஒரு மாநாடு இருந்தாலும் இருக்கும்” என்றவரிடம், “இந்த நெல்லை விசிட் தென்மாவட்ட மக்களை கவர் செய்வதற்கான ஒரு யுக்தினு சமூக வலைதளங்கள்ல பேசிக்கிறாங்களே?” என்கிற கேள்வியை முன்வைத்தோம்.
அதற்குப் பதிலளித்த அவர், “அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, கஷ்டப்பட்ட மக்களை நேர்ல பார்க்கணும்னுதான் வந்தார். இதுல வேற நோக்கம் எதுவுமில்லை!” என்று முடித்துக்கொண்டார்.
+ There are no comments
Add yours