ஜப்பான் நாட்டின் வட மத்திய பகுதியில், இந்திய நேரப்படி நேற்று மதியம் அதிகபட்சமாக 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, இஷிகாவா (Ishikawa), நிகாடா (Niigata), டோயாமா (Toyama) மாகாணங்கள் உட்பட பல பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட வலுவான நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்கிறது. இஷிகாவா மற்றும் அதனருகிலுள்ள மாகாணங்களில் ரிக்டரில் 7.4 எனப் பதிவாகியிருந்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை நீக்கப்படும் வரை, கடற்கரை பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தொடர்ந்து வெளியேறுமாறும், தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேறுமாறும் வலியுறுத்தியிருக்கிறது அந்நாட்டு அரசு.
இந்நிலையில் கடந்த வாரம் ஜப்பானுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டபோது அங்குதான் இருந்துள்ளார். பின்னர், ஜப்பான் அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்த பிறகு இன்று இந்தியா திரும்பியுள்ளார். இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த வாரம் முழுவதும் ஜாப்பானில்தான் தங்கியிருந்தேன். இன்று அங்கிருந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். இருப்பினும், அங்கு ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பின் அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் என் இதயம் வருந்துகிறது. எல்லாம் விரைவில் குணமடையும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours