Bigg Boss 7 Day 92: விஷ்ணுவைத் தவிர அனைவரும் இடம்பெற்ற நாமினேஷன்; விசித்ரா பணப்பெட்டியை எடுப்பாரா?

Estimated read time 1 min read

‘பெட்டியை யார் எடுப்பார், எவ்வளவு தொகை?’ என்கிற வம்புதான் வீடு முழுக்க ஓடிக் கொண்டிருக்கிறது. கடைசி சில நாள்கள்தான் என்றாலும் போட்டியாளர்களுக்குள் இருக்கிற விரோதம் குறையவில்லை. இரு அணிகளாகப் புகைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வாரத்தில் அனைவருமே நாமினேட் ஆகியிருக்கிறார்கள். விஷ்ணுவைத் தவிர!

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

ஆங்கிலப் புத்தாண்டு என்றாலே கமல் பைக்கில் வரும் பாடலை ஒலிபரப்புவதுதான் தமிழ் மரபு. முதல் வரியில் மட்டும் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வந்துவிட்டால் போதும். அது புத்தாண்டு தொடர்பான பாடலாக வரலாற்றில் இடம் பெற்றுவிடும். ஆனால் இன்று பிக் பாஸ் வீட்டில் ஒலிபரப்பான புத்தாண்டுப் பாடல், ‘ஹாப்பி… ஹாப்பி…’ என்று ரயிலில் ‘காப்பி… காப்பி’ என்று விற்பவரின் பாணியில் ஒலித்தது. எப்போதும் உற்சாகமாக எழுந்து ஆடும் மணி, இன்று பேட்டரி இல்லாத கடிகாரம் போல் உறைந்திருந்தார். காரணம் நமக்குத் தெரியும். அந்தக் கீச்சுக்குரலைக் கேட்காமல் அவரால் இருக்க முடியாது.

Bigg Boss 7 Day 92

“இங்கு கற்றுக் கொண்ட விஷயங்களில் எவற்றை வெளியிலும் எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?” என்கிற கேள்வியை மார்னிங் டாஸ்க்காக தந்தார் பிக் பாஸ். ‘எதை வெளியில் எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?’ என்று மட்டும் கேட்டிருந்தால் பலரும் ‘பணப்பெட்டி’ என்று சொல்லியிருப்பார்கள் போல! அந்த அளவிற்கு ‘பெட்டி மேட்டர்’ இன்று புறணிப் பொருளாக விளங்கியது.

பிக் பாஸ் வீட்டில் கற்றதும் பெற்றதும்

முதலில் வந்த அர்ச்சனா, “லைப் நம்மை எவ்ளோ கீழ தள்ளினாலும், பந்து மாதிரி உடனே எழுந்து வந்துடறாரு தினேஷ் ப்ரோ. அது இன்ஸ்பயரிங்கா இருக்கு. விஷ்ணு கிட்ட இருந்து ‘லவ் யுவர்செல்ஃப்’ன்றதை கத்துக்கிட்டேன். (ஓ… சுயநலத்தை இப்படியும் சொல்லலாமா?!). வயசுல்லாம் ஒரு மேட்டரே இல்லைன்றதை விசித்ரா மேம் கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்” என்றார். இந்த ‘bounce back’ என்கிற வார்த்தையை வைத்துக் கொண்டு பின்னால் வந்த பலரும் ஜல்லியடித்தார்கள். “நான் எப்பவுமே ஒரு கம்ஃப்பர்ட் ஜோன்லயே இருப்பேன். அதை உடைச்சு கஷ்டமான சூழல்ல குதிச்சு தாக்குப் பிடிக்கறதைக் கத்துக்கிட்டேன்” என்று மணி சொன்னது ‘இன்ட்ரோவெர்ட்களுக்கு’ உபயோகமான விஷயம்.

பணப்பெட்டி விவகாரம் வீட்டிற்குள் சுற்றிச் சுற்றி வந்தது. “எதிர் குரூப்தான் எடுக்கும். அப்படி அவங்க எடுத்திட்டா…” என்று தினேஷூம் விஷ்ணுவும் பந்தயம் கட்டிக் கொண்டார்கள். “Bounce back-ல ஒரு ஒண்ணு சொல்ல விட்டுப் போச்சு. விழுந்து எழுந்துக்கறது ஓகே. ஆனா அதே தப்பை மீண்டும் செய்யாம இருக்கணும்” என்று தாமதமான, ஆனால் நல்ல திருத்தத்தைச் சொன்னார் மணி.

Bigg Boss 7 Day 92

‘இன்னொரு குரூப்பில்’ வேறு புறணி போய்க் கொண்டிருந்தது. “ஓட்டுதான் முக்கியம் போல. கெட்டவங்க கூட ஜெயிச்சிடுவாங்க” என்று விசித்ரா சொல்லிக் கொண்டிருந்தார். (யாருக்கு… யாருக்கோ?!). தன்னைப் பற்றி அறிய முடியாவிட்டாலும் பிறரைப் பற்றிய விஷயங்களை பூர்ணிமா சரியாக யூகித்து விடுகிறார். “அர்ச்சனாவிற்குத்தான் வெளில நிறைய ஆன்லைன் சப்போர்ட் இருக்கு. இந்த விஷயம் டோமெக்ஸ் டாஸ்க் மூலமா தெரிஞ்சது. அவ வந்தப்புறம்தான் வோட்டிங் அதிகமாச்சு. எல்லா பிக் பாஸையும் பார்த்துடுவாளாம். அதனால எப்பப்ப என்ன பண்ணணும்னு சரியா தெரிஞ்சு வெச்சிருக்கா” என்றார் பூர்ணிமா. “அவ ஆங்கர்ன்றதால நல்லா பேசறா. நெகட்டிவ்வா ஒரு வாரம்தான் இருந்தா. அப்புறம் அதைத் தலைகீழா மாத்திட்டா. நமக்குல்லாம் பேசவே வராது” என்றார் விசித்ரா.

தனித்தனியாகப் பிரிந்த ஆண்கள் – பெண்கள் அணி

“நான் ஜெயிக்க மாட்டேன். அதனால 10 எல்-க்கு மேல வந்தா எடுத்துடுவேன்” என்று பூர்ணிமாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மாயா. பாத்திரம் விளக்கும் போது தினேஷைப் பற்றி மிகையாகப் பேசி கமலிடம் விசித்ரா மாட்டிக் கொண்ட கதையை இருவரும் மீண்டும் அலசிக் கொண்டிருந்தார்கள். “உங்க ஃபேமிலி பத்தி பேசினா ஒத்துப்பீங்களான்னு கேட்டேன்” என்றார் பூர்ணிமா. “விசித்ரா மேம் பெட்டி எடுத்தாலும் எடுப்பாங்க” என்பது இவர்களின் யூகம். அதுதான் நடக்கும் போல தெரிகிறது.

‘ஸ்மால் பாஸ்’ வீட்டிற்கு யாரெல்லாம் செல்லப் போகிறீர்கள்?’ என்று பிக் பாஸ் கேட்டதும் வீட்டிலுள்ள ஆண்கள் அனைவரும் எழுந்து வந்தது ஜாலியான தற்செயல். பெரிய வீட்டில் பெண்கள் மட்டும் இருப்பார்கள். “இன்ட்ரஸ்டிங். எந்த வீட்டில எண்டர்டெயின்மென்ட் இருக்குன்னு பார்த்துடலாம்” என்றார் பிக் பாஸ். ஆனால் இரண்டு வீட்டிலும் புறணி மட்டும்தான் இருந்தது. பெண்களுக்கு நிகராக ஆண்கள் வம்பு பேசுகிறார்கள் என்பதும் அம்பலமானது.

Bigg Boss 7 Day 92

“ஓகே.. AV பார்க்கலாமா?” என்று பிக் பாஸ் கேட்டதும், “அய்… டிவில புதுப்படம் போடறாங்க” என்பது மாதிரி அனைவரும் ஆவலாக அமர்ந்தார்கள். பிக் பாஸ் ஒண்ணும் அத்தனை நல்ல ஆசாமி இல்லையே என்கிற எண்ணமும் கூடவே ஓடியிருக்கும். “AV-ன்னா ‘அன்றாட வேலைகள்-ன்னு அர்த்தம். போய் வேலையைப் பாருங்க” என்று பிக் பாஸ் துரத்தி விட, “இதெல்லாம் ஓவர் பிக் பாஸ்” என்று ஏமாந்ததின் முகபாவத்தை சுவாரஸ்யமாக வெளிப்படுத்தினார் அர்ச்சனா. ‘நீங்கதான் எண்டர்டெயின்மென்ட் பண்ண மாட்டீங்க. நானாவது ஜோக் அடிச்சுத் தொலையறேன்” என்று பிக் பாஸ் முடிவு செய்துவிட்டார் போல.

முதல் ஃபைனலிஸ்ட் ஆன விஷ்ணுவிற்கு சாக்லேட்கள் பரிசாக வந்தன. ‘Eat chocolate, do nothing’ என்கிற குறிப்புடன். (என்னது… டூ நத்திங்கா?.. இந்த சீசன் முழுக்க இவிய்ங்க அதை மட்டும்தானே செஞ்சிட்டு இருந்தாங்க?!) ‘இந்த சீசனின் கடைசி நாமினேஷன்’ என்று பிக் பாஸ் அறிவித்ததும் மக்களின் முகத்தில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. “யாரை வேணுமின்னாலும் நாமினேட் பண்ணலாம்” என்று அவர் அறிவிக்க “விஷ்ணுவையுமா?’ என்று இவர்கள் கேட்டது குறும்பு. “அவரைத் தவிர” என்று திருத்தினார் பிக் பாஸ்.

இந்த வாரம் அனைவருமே நாமினேஷன்

அனைவரும் ஆக்ட்டிவிட்டி ஏரியாவிற்கு வரவழைக்கப்பட்டார்கள். குத்துச்சண்டை போன்ற ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரின் கைகளிலும் கிளவுஸ் மாட்டப்பட்டது. இறுதிச்சுற்று ஹீரோயின் மாதிரி சீரியஸாக வார்ம் அப் செய்ய ஆரம்பித்தார் மாயா. யார் யாருடன் மோதவிருக்கிறார்கள் என்பதை பிக் பாஸே அறிவித்தார். “இந்தப் போட்டியின் நடுவர் விஷ்ணு. அவர் மேல அடிபடாம பார்த்துக்கங்க” என்று அவர் அறிவிக்க அப்போதே விஷ்ணுவிற்குள் பீதி கிளம்பியிருக்க வேண்டும். அடிபட்டாலும் பரவாயில்லை. ‘அடிவாங்கினது நானு. கப்பு எனக்குத்தான்’ என்று அதையும் எடுத்துக் கொண்டிருப்பார்.

நான்கு ஜோடிகளை பிக் பாஸ் அறிவிக்க, வெற்றி பெற்றவர்களோடு அர்ச்சனா மோதுவாராம். “நெஜம்மாவே அடிக்கணுமா… இல்ல. பெயரைச் சொல்லி நாமினேஷன் செய்யணுமா…” என்று மக்கள் குழம்பி ஆவலாகக் காத்திருக்க, ரிங்கில் இருந்து ஒரு பேனர் மெல்ல கீழே இறங்கியது. ‘அனைவரும் நாக்அவுட்’ என்று அதிலிருந்த வாசகங்களைப் பார்த்ததும்தான், பிக் பாஸ் செய்த குறும்பு தெரிந்தது. இந்த வாரம் அனைவருமே நாமினேஷன் லிஸ்ட்டில் வந்திருக்கிறார்கள். விஷ்ணுவைத் தவிர!

Bigg Boss 7 Day 92

விசித்ரா எடுத்த முத்த வகுப்பு

கடைசி சில நாள்கள்தான் என்றாலும் போட்டியாளர்களுக்குள் இருக்கும் புகைச்சல் தீரவில்லை. “மாயா நான் போட்டிருந்த டிரஸ்ஸைப் பார்த்து ‘உவ்வேக்’ன்னு சொன்னாங்க. எனக்கு செம காண்டாயிடுச்சு. அவ டிரஸ்ஸைப் பார்த்து ‘உவ்வ்வ்வ்வேவவக்’ன்னு சொல்லிட்டேன். எப்பூடீ?” என்று ‘சின்னப்புள்ளத்தனமாக’ பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார் மணி. “மாயாவுக்கு மனிதாபிமானமே கிடையாது” என்றார் விஷ்ணு. இதில் ‘மானமே கிடையாது’ என்பதை மட்டும் சற்று இடைவெளி விட்டு அழுத்திச் சொன்னதில் கிண்டல் தெரிந்தது.

“விக்ரம், நிக்சன், ஐஷூ ஆகியோரையெல்லாம் மாயா உபயோகப்படுத்திட்டு எறிஞ்சுட்டாங்க. நான் அந்தப் பக்கம் போறதே கிடையாது. எமோஷனல் கேம் ஆடறாங்க” என்று விஷ்ணு அனத்த, “நான் ஐஷூ சொன்னது ஞாபகம் இருக்கான்னு எதுக்கோ கேட்கும் போது “ஐஷூவே ஞாபகம் இல்ல. அவ சொன்னது எப்படி ஞாபகம் இருக்குமான்னு கேக்கறாங்க” என்று மாயாவைப் பற்றிப் புறணி பேசினார் தினேஷ். உரையாடலில் ஏதாவது ஒரு ப்ளோவில் ரைமிங்காகப் பேசி விட்டு அது ‘ஜாலிக்காக’ என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்தத் தொனி எதிராளியின் மனதில் எப்படியாகச் சென்று சேரக்கூடும் என்பதற்கு இதுவொரு பாடம்.

“எனக்கு இப்பத்திக்கு பெட்டி எடுக்கற ஐடியா இல்ல. ஆனா கேம் போற போக்குல எடுக்க வேண்டி வந்தா அதை யோசிப்பேன்” என்றார் மணி. “டைட்டில் அடிக்க வாய்ப்பில்லைன்னு நெனச்சா மட்டும் அதை யோசி” என்று ஆலோசனை தந்தார் தினேஷ். “எதிர் குரூப்புல பயங்கரமான லெக்சர் தருவாங்க. உஷாரா இரு. நான் அவங்ககிட்ட பேசிட்டே இருக்கேன். அந்த கேப்புல நீ போய் எடுத்துடு” என்று சொல்லிச் சிரித்தார் விஷ்ணு.

‘கிறக்கமான முகபாவத்துடன் நாசூக்காக மென்முத்தம் தருவது எப்படி?’ என்கிற வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார் விசித்ரா. பூர்ணிமாவிற்கு அது வரவேயில்லை. முகத்தை விதம் விதமாக வைத்துக் கொண்டு சேஷ்டைகள் செய்ய, “வாய்ல புண்ணு வந்த மாதிரியே பண்றா…” என்று மாயா கிண்டலடித்தார்.

Bigg Boss 7 Day 92

உண்ட மயக்கம் தீர கண்டபடி பேசப்பட்ட வம்பு

“நல்லா டிரஸ் பண்ணியிருக்கீங்க. பார்ட்டியை ஆரம்பிக்கலாமா?” என்று பிக் பாஸ் கேட்க, கார்டன் ஏரியாவில் ‘வேர் ஈஸ் த பார்ட்டி’ ஒலித்தது. கமல் பைக் போலவே இதுவும் ஒரு கிளிஷேவான பாடல். ஆட்டம், பாட்டம் முடிந்ததும் உணவு வகைகள். “குண்டுப் பையா…” என்று ஆரம்பித்து சக போட்டியாளர்களை நினைவு கூர்ந்தார் மணி. பூர்ணிமாவும் மாயாவும் அதையே செய்தார்கள்.

உணவருந்திய பின் களைப்பு நீங்க வம்புகள். “ஜாலியா இருக்கறது ஒரு பிளெஸ்ஸிங்” என்று மணி சொல்ல, “நாம சிரிச்சுப் பேசினாலே எதிரணி காண்டாயிடறாங்க” என்றார் விஷ்ணு. “பெட்டியை நாம எடுக்கறா மாதிரி பாவ்லா காட்டுவோம். விசித்ரா கம்மி அமௌண்ட்டோட போகட்டும்” என்கிற மாதிரி சதியாலோசனை செய்து கொண்டிருந்தார் தினேஷ்.

Bigg Boss 7 Day 92

எவிக்ட்டாகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் விருந்தினர்களாக உள்ளே வருவார்கள். சுவாரஸ்யங்களும் வம்புகளும் பெருகியோடும். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

‘பெட்டியை விசித்ராதான் எடுத்துப் போவார்’ என்று உள்ளுக்குள் ஒரு பட்சி கூவுகிறது. உங்களின் யூகம் என்ன? கமென்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours