இன்னொரு நபராக தினேஷை சுட்டிக் காட்டிய அர்ச்சனா “இந்த வீட்ல அன்பு தேவையில்லைன்னு சொல்றாரு. அன்புக்கு ஒரு நல்ல பாசிட்டிவ்வான சக்தி இருக்கு. அதையும் அவர் சேர்த்துக்கணும்” என்று இணைத்துக் கொண்டார். அடுத்து எழுந்த பூர்ணிமா “இன்னொருத்தரை உபயோகிச்சிக்காம, விஷ்ணு தன்னை நம்பி செயல்படணும்” என்று ஊமைக்குத்தாக குத்தினார். “பாசிட்டிவ்வாதான் இருக்கு. விஷ்ணு மூக்கை விடைக்காம இதை ஏத்துக்கலாம்” என்று கமல் சிரிக்க, சங்கடமான சிரிப்புடன் அதை ஒப்புக் கொண்டார் விஷ்ணு. அடுத்து எழுந்த விஜய் “ரவீனா சிரிக்கறது நல்ல விஷயம்தான். ஆனா மத்தவங்களுக்கு ஹர்ட் ஆகாம இருக்கற மாதிரி மாத்திக்கணும். முடியும்ன்னு நெனச்சா பூர்ணிமாவால பண்ண முடியும்” என்று சொல்லி அமர்ந்தார்.
“ஃபேமிலிக்கு நேரம் ஒதுக்கணும். அது முக்கியம்” என்று விசித்ரா மையமாகச் சொல்ல, அது தினேஷிற்கான மறைமுக குத்தலோ என்று தோன்றியது. எனவே “யாருக்கு?” என்று கமல் கேட்க, விஷ்ணுவைச் சுட்டிக் காட்டினார். “நிக்சனோட கனவுகள் நிறைவேறி அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கணும்” என்று விசித்ரா கூடுதல் தீர்மானத்தை சொல்ல “அதுக்கு அவரோட அப்பா நம்பரை பிளாக் பண்ணாம இருக்கணும்” என்று சொல்லி கமல் சிரித்தார். “பாடல்கள்ல நல்ல தமிழ் சேர்க்கணும்” என்று நிக்சன் சொல்ல, “இங்கிலீஷ் பேசினா அறிவாளின்னு நெனச்சுக்கறாங்க. தமிழ் நமது பெருமை” என்று லெக்சர் தந்தார் கமல். “விஷ்ணு கோபத்தைக் குறைச்சுக்கணும்” என்று நிக்சன் சொல்ல “பத்து வரைக்கும் எண்ணுன்னு சொல்வாங்க. அப்படில்லாம் கோபம் போகாது. உண்மையிலேயே மனம் மாறணும்” என்ற கமல் அதற்காக செய்து கொட்டியது சுவாரசியமான காமெடி.
“ரவீனா புத்திசாலி. ஆனா ஓவரா சிரிக்கிறாங்க” என்று நிக்சன் சொல்ல “சிரிக்கட்டும்ங்க.. அதுவொரு வரம். ஆனா யாரைப் பார்த்தும் சிரிக்காதீங்க” என்று ரவீனாவிற்கு உபதேசம் சொன்ன கமல் “ஓகே. ரொம்ப பாசிட்டிவ்வா போயிடுச்சுன்னு வருத்தப்படாதீங்க. இதோ வரேன்” என்று எவிக்ஷனுக்கான அலார்ம் சவுண்டை ஒலிக்க விட்டு போட்டியாளர்களை திகைப்பில் ஆழ்த்தி விட்டு பிரேக்கில் சென்றார்.
+ There are no comments
Add yours