அயோத்தி
தமிழ் சினிமா போட்டிக்கு வந்த படங்களில் முதல் பரிசு பெற்ற படம் ‘அயோத்தி’. மனிதாபிமானம் என்பது சாதி, மத மாச்சரியங்களைக் கடந்தது என்றும் அன்பே நமது வாழ்வின் ஜீவநாடி என்று பறைசாற்றும் இந்தப் படம் – ஓர் அமர காவியம்.
இந்தியன் பனோரமா காணக் கிடைத்த இரண்டு மலையாள படங்கள் அருமையானவை!
‘ஜனனம் 1947’ என்ற மலையாளத் திரைப்படம் முதியோர் இல்லம் பற்றியது. கேரளாவில் ஒரு முதியோர் இல்லத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை கௌரி என்பவர் தங்கி இருக்கிறார். சிவன் அங்கு கண்காணிப்பாளராக வேலை பார்க்கிறார். கௌரி கணவனை இழந்தவர். சிவன் மனைவியை இழந்தவர். இருவருமே 70 வயதைத் தாண்டியவர்கள். கௌரிக்கும் சிவனுக்கும் ஸ்நேகம் உண்டாகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். இருவர் வீட்டிலும் இதற்கு எதிர்ப்பு இருக்கிறது. எதிர்ப்பை மீறி ஒரு கோயிலில் மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.
இருவருக்கும் இது இரண்டாவது வசந்தம். ஆனால் ஒரு நாள் கௌரி டீச்சர் தூக்கத்திலேயே மரணம் அடைந்து விடுகிறார். தனது இரண்டாவது இனிய இல்வாழ்வு இவ்வளவு சீக்கிரம் முடிவு அடைந்தது – சிவனை துக்கத்தில் ஆழ்த்துகிறது. இப்படியான பல உணர்வுக் குவியல்கள், இனிய பல தருணங்கள் நிறைந்த படம்.
‘MANAS -THE MIND’ என்ற மலையாள படம் – யோகா, மெடிட்டேஷன் இவற்றின் பெருமையைப் பேசுகிறது.
THEOLD OAK
இப்படம் யூ.கே, பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளின் கூட்டுத் தயாரிப்பு. இயக்குநர் கென் லோச் (KEN LOACH).
ஒரு சிற்றூர் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து ஒரு பெண் புகைப்படக் கலைஞர் – தான் வேலை பார்க்கும் ஒரு பத்திரிக்கைக்காக ஒருவரை புகைப்படம் எடுக்கிறார். புகைப்பட கலைஞர் யாராவின்(YARA) கையில் இருந்து கேமராவை பிடுங்கி அவன் உடைத்து விடுகிறான். யாரா அந்த அராஜகவாதியிடம் இழப்பீட்டுத் தொகை கேட்கிறாள். அவனும் உனக்கு ஒரு சல்லிக்காசும் தர முடியாது என்று ஆணவத்துடன் பதில் சொல்கிறான்.
அந்த ஊரில் பலான்த்தேன் என்பவர் ஒரு மதுபான ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். யாரா அவரிடம் அந்த உள்ளூர் அராஜகவாதியைப் பற்றிச் சொல்கிறாள். பலான்த்தேன் பச்சாதாபம் கொண்டு தன் மதுபானக் கடைக்கு யாராவை அழைத்துச் செல்கிறார். தன் அப்பா சேமித்து வைத்திருந்த சில கேமராக்களை பரணில் இருந்து எடுத்து வந்து காட்டுகிறார். `உனக்கு இந்த கேமராக்களில் ஏதேனும் ஒன்று உபயோகப்படுமா?’ எனக் கேட்கிறார். யாரா ஒரு கேமராவைத் தேர்ந்தெடுக்கிறாள். சில நாட்கள் கழித்து யாரா உபயோகித்த அதே பிராண்டு கேமரா ஒன்றை விலைக்கு வாங்கி பரிசாக அளிக்கிறார் பலான்த்தேன். யாரா – பலான்த்தேனை சொந்தத் தந்தையைப் போல் நேசிக்க தொடங்குகிறாள்.
யாராவின் சொந்தத் தந்தை அரசியல் கைதியாக அயல்நாட்டில் சிறையில் இருக்கிறார். `ஒரே சிறைச்சாலை அறையில் என் அப்பா நூறு பேரோடு அடைக்கப்பட்டு இருக்கிறார். அங்கு அனைவரும் நிற்க மட்டுமே இடம் உண்டு. முறைப் போட்டுக்கொண்டு மாறி மாறி உட்காருவார்கள். கைதியான என் அப்பா எப்போது மீண்டு வருவாரோ?’ என்று யாரா அழுகிறாள்….
பலன்தாதேன் மனைவியை இழந்தவர். அவருக்கு துணையாக இருப்பது மாரா(MARA) என்ற ஒரு கருப்பு நாய். யாராவிடம் தன் சோகக் கதையை பலான்த்தேன் சொல்கிறார்.
வெறுமையான வாழ்க்கையில் விரக்தியின் உச்சியை அடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள கடலை நோக்கி ஓடுகிறார். கடற்கரையில் சற்று நேரம் நிற்கிறார். அப்போது எங்கிருந்தோ ஒரு கருப்பு நாய் ஓடி வந்து அவர் காலடியில் கொஞ்சிக் குலாவுகிறது.
தற்கொலை எண்ணத்தை விட்டுவிட்டு அவர் அந்த நாயை எடுத்து வளர்ப்பதில் ஒரு எல்லையில்லா இன்பத்தை அடைகிறார். அவர் குடும்பத்தில் ஒரு அங்கம் ஆகிவிடுகிறது அந்த நாய். ஒரு பெரிய நாயிடம் சண்டை போட்ட போது அது கடித்து குதறிவிட மாரா மரித்துப் போய் விடுகிறது. தன் வாழ்க்கை இன்பங்கள் அஸ்தமனம் ஆகிவிட்டதைப் போல வருந்துகிறார் பலான்த்தேன்.
யாரா ஒரு முஸ்லிம் குடும்பத்தினரிடம் அடைக்கலம் கேட்டு வாழ்ந்து வருகிறாள். அந்த முஸ்லிம் அம்மாவின் கணவரும் அரசியல் கைதியாக சிறையில் வாடுகிறார்.
யாராவின் அப்பாவும் அந்த முஸ்லிம் மூதாட்டியின் கணவரும் சிறையில் மரித்த செய்தி வருகிறது…. ஊர் மக்கள் திரண்டு வந்து மலர் கொத்துக்கள் கொடுத்து துக்கம் தெரிவிக்கிறார்கள். யாராவும் முஸ்லிம் அம்மாவும் ஊர் மக்களின் அன்பு கண்டு நெகிழ்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள். பலான்த்தேனும் ஆறுதல் சொல்வதில் கலந்து கொள்கிறார்…..
THE RAPTURE
‘THE RAPTURE’ என்ற பிரெஞ்சுப் படம் தாய் பாசம் குறித்துப் பேசுகிறது அதன் இயக்குநர் ஐரிஸ் கால்டன் பாக்.
லிடியா, அரசாங்கப் பொது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவச்சியாக வேலை பார்த்து வந்தாள். ஒவ்வொரு தாய்க்கும் பிரசவம் பார்க்கும்போது ஆனந்தப் பரவச நிலையை அடைவாள். ‘ம்’ அம்மா நன்றாகத் தள்ளுங்கள்! முக்கி முனகி நன்றாகத் தள்ளுங்கள்! என்று தாய்மார்களை அவள் தூண்டும்போது தாய்மார்கள் முக்கித் தள்ளுகையில் குழந்தையின் தலை வெளிப்படும் காட்சி… தாயார் – மருத்துவச்சி இருவருக்குமே சிலிர்ப்பை ஏற்படுத்தும்!
ஒரு நாள் லிடியா நள்ளிரவில் ஒரு பேருந்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பஸ் டிரைவர் மைலோ பாசத்துடன் பழகினார். கடைசி நிறுத்தத்தில் லிடியா இறங்கினாள். `அம்மா இந்த நேரத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் இருக்கும். என்னுடன் வாருங்கள் உங்களை நலமாக வீடு சேர்க்கிறேன்’ என்று அவர் லிடியா இருப்பிடம் வரை வந்து அவளை பத்திரமாகச் சேர்த்தார். அதன் பின் இருவருக்கும் நெருக்கமான நட்பு உண்டானது….
சலோமி என்ற லிடியாவின் தோழி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்ந்து ஒரு பெண் மகவைப் பெற்றாள். லிடியா தான் பிரசவம் பார்த்தாள். அந்தக் குழந்தைக்கு ‘எஸ் மீ’ என்று லிடியா பெயர் சூட்டினாள். `நான் வளர்த்து ஆளாக்கித் தருகிறேன்’ எனக் குழந்தையை எடுத்துக் கொண்டாள் லிடியா.
மைலோவிடம் ‘எஸ்மீ’ என்ற அந்தக் குழந்தை தனக்கும் மைலோவிக்கும் பிறந்ததாகச் சொல்லி நம்ப வைத்தாள் லிடியா. மைலோ முதலில் தந்தை பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினான். ஆனால் மெல்ல மெல்ல அந்தக் குழந்தை மீது அவனுக்கு ப்ரியம் உண்டாகிறது. குழந்தையின் பராமரிப்புக்காக நிறைய செலவு செய்யத் தொடங்கினான். தன்னிடம் உரிய நேரத்தில் குழந்தையைத் தரவில்லை என்று சலோமி போலீஸில் சொல்ல லிடியா கைதானாள். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை. சிறை மீண்டு வந்ததும் மைலோவும் லிடியாவும் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்கள்.
PERFECT DAYS
ஆரம்ப விழா படமாக ‘PERFECT DAYS‘ என்ற ஜப்பானிய படத்தை திரையிட்டார்கள். விம் வெண்டர்ஸ் (WIM WENDERS) இயக்கத்தில் வெளிவந்திருக்கிற திரை ஓவியம் என்றே சொல்லலாம். கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் ஹிரயாமா என்ற பாட்டாளியின் அன்றாட அலுவல்களை இந்தப் படம் பதிவு செய்கிறது. எடுப்பு தொகுப்பு முடிவு என்றெல்லாம் ஏதும் கதை அம்சம் இல்லை. நடுத்தர வயதுக்காரரான ஹிரயாமா இலக்கிய ரசிகனாகவும் இருப்பது ரசிகனின் மனதுக்கு ஒரு ஆறுதல். நல்ல இலக்கிய புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார். நல்ல இசையைக் கேட்பதிலும் இவருக்கு நாட்டம் உண்டு. சிறந்த நகரான டோக்கியோவின் அழகுணர்ச்சி மிகுந்த தெருக்களைப் படம் எங்கும் காணலாம்!
THE PALACE
THE PALACE – ரோமன் போலன்ஸ்கி இயக்கி உள்ள படம். இத்தாலி, சுவிட்சர்லாந்து, போலாந்து, பிரான்ஸ் தேசக் கூட்டுத் தயாரிப்பு. புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக ஒரு நட்சத்திர உணவு விடுதியில் மாபெரும் செல்வந்தர்கள் பலர் கூடியிருக்கிறார்கள். இவர்களது சுகபோக வாழ்வுக்காக ஓட்டல் தொழிலாளர்கள் ஓய்வின்றி உழைப்பது அருமையாகப் பதிவாகி இருக்கிறது.
கோடை இருள்
‘கோடை இருள்’ என்ற தமிழ் படம் கவிதாயினி குட்டி ரேவதி இயக்கியது. ஒடுக்கப்பட்ட இனமான இருளர்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பேசுகிறது. இருளர் இளைஞர் ஒருவன் சிகப்பி என்ற இருளர் இன இளம் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். இல்லறம் இனிதே செல்கிறது. தான் வேலை பார்க்கும் இடத்தில் இளைஞனை பணத்தைக் களவாடி விட்டான் என்று முதலாளி சந்தேகப்பட்டு கடுமையாகத் தாக்கி விடுகிறான். கை முறிந்து மயங்கிக் கிடக்கும் இருளனை சிகப்பி தன் உறவினர் ஒருவருடன் சென்று மீட்டு வருகிறாள். எலும்பு முறிவுக்கு நாட்டு வைத்தியம் செய்யும் ஒரு பெண்மணி பச்சிலை அரைத்து மாவு கட்டு போடுகிறாள். மூன்று மாதங்களில் இருளன் குணமடைகிறான்.
சிகப்பி பாம்பு பிடிப்பதிலும் வல்லவள். அவள் பிடிக்கும் பாம்புகள் பாம்புசட பண்ணைக்கு செல்கின்றன. உள்ளூர் மைனர் ஒருவர் தன்னிடம் வாலாட்ட வரும்போது சிகப்பி தான் பிடித்த பாம்பை அந்த மனிதன் மேல் போட்டு தப்பி விடுகிறாள். மைனர் பாம்பைக் கண்டதும் பயந்து ஓடுவது நம்மை விலா நோகச் சிரிக்க வைக்கும் காட்சி!
தோழர் தொல் திருமாவளவன் பொதுக்கூட்டங்கள் போட்டு இருளர் இனம் உயர்வு பெற குரல் கொடுப்பது போஸ்டர்கள் வாயிலாக சொல்லப்படுகிறது. இருளர்களின் வாழ்க்கை முறை அவர்களது கோயில்கள் – திருவிழாக்கள் – திருமண சடங்குகள் – ஆட்ட பாட்டங்கள் இதையெல்லாம் இந்த படம் போகிற போக்கில் விளக்கமாக விரிவாகச் சொல்லி செல்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு வழி சொல்லும் உன்னத படைப்பு.
LITTLE FOREST
‘LITTLE FOREST’ என்ற தென்கொரியப் படம் கண்ணுக்கு இதமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அப்படி ஒரு அனுசரணையான ஒளிப்பதிவு.
தன் சொந்த கிராமத்துக்கு வருகிறாள் கதாநாயகி. அவளது தாய் அந்தக் கிராமத்தில் இல்லை. தன் காதலன் ஒருவனுடன் அவர் ஊரைவிட்டுச் சென்றுவடுகிறார். மனம் சோர்ந்து போன நமது கதாநாயகியைத் தேற்ற இரு தோழிகள் வருகிறார்கள்.
‘சிறு வனம்’ என்று பெயர் சூட்டப்பட்ட தனது வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதிலும் அவள் ஆனந்த பரவசம் அடைகிறாள். கொரிய மக்கள் விதவிதமாக சமைத்து உண்பதை படம் விளக்கமாகச் சொல்கிறது. சமையல் அறைக் காட்சிகள் அதிகம்…
FOOD PRINTS
‘FOOD PRINTS’ என்ற ஆங்கில படத்தை இயக்கியவர் நடாலியா ஷ்யாம் என்ற யுவதி. சட்டத்திற்குப் புறம்பாக திருட்டுத்தனமாக வெளிநாட்டில் குடியேற நினைக்கும் இந்தியர்களுக்குக் காத்திருக்கும் துயரங்களைச் சொல்லும் படம். ஒரு கேரள குடும்பம் இடம் பெயர்கிறது. அம்மா அப்பா பெண் மூவர் அடங்கிய ஒரு சிறு குடும்பம். பெண்ணின் பெயர் மீரா. மூவரும் என்றைக்குப் போலீஸ் தங்களை பிடித்து நாடு கடத்தி விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கின்றனர். மகள் மீரா தவறான சிநேகிதனால் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறாள். அதிர்ஷ்டவசமாக லோக்கல் போலீஸ் உரிய நேரத்தில் மீராவை மீட்டு எடுக்கிறது.
WILDING COUNTRY
‘WILDING COUNTRY’ என்னும் பிரேசில் நாட்டு படம் இதயத்தை உறைய வைக்கும் ஒரு திரை ஓவியம். எடிவால்டோ என்ற வாலிபனும் மரியாள் என்ற இளம் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமதி வால்டா என்ற காருண்யம் மிகுந்த ஒரு மாதரசி இந்த இளம் தம்பதிகளுக்கு தன் வீட்டில் புகலிடம் அளிக்கிறாள். வால்டாவின் உறவினான ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அந்த மூதாட்டியைப் பார்க்க அங்கு வருகிறான். மரியாவை தவறான எண்ணத்தோடு பார்க்கிறான். கான்ஸ்டபிளின் கழுகு பார்வையில் இருந்து தப்ப இந்த இளம் தம்பதிகள் வீட்டை விட்டு வெளியேறி ஓடுகிறார்கள். பைக்கில் விரைந்து வந்து கான்ஸ்டபிள் வழி மறிக்கிறான். எடிவால்டோ தன் கத்தியை தூக்கும் முன்பாக கான்ஸ்டபிள் தன் துப்பாக்கியால் அவனை சுட்டு வீழ்த்தி விடுகிறான்.
– எஸ்.குரு
+ There are no comments
Add yours