சென்னை: “சலார் இரண்டாம் பாகம் வெளியாகும்போது உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரிய வரும். கதைக்கு என்ன தேவையோ அதனை செய்திருக்கிறேன். விமர்சனங்களுக்காக அடுத்த பாகத்தில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை” என ‘சலார்’ படம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சலார்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 22-ம் தேதி வெளியானது. படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் அளித்துள்ள பேட்டியில், “6 மணிநேரப் படத்தில் வெறும் 3 மணி நேரம் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.
கதைக்குத் தேவையில்லாத எந்த ஒரு சிறு கதாபாத்திரத்தையும் நான் சேர்க்கமாட்டேன். படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் கதையை பின்தொடர்வது கடினமாக உள்ளது என்கின்றனர். சலார் இரண்டாம் பாகம் வெளியாகும்போது உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரிய வரும். கதைக்கு என்ன தேவையோ அதனை செய்திருக்கிறேன். நான் கதையில் தான் கவனம் செலுத்துகிறேன். அந்த நேரத்தில் பார்வையாளர்களுக்கு இது எளிதாக புரியுமா? கடினமாக இருக்குமா? என்பது குறித்தெல்லாம் நான் சிந்திக்க முயற்சிக்கவில்லை. உங்களிடம் இன்னும் பாதி கதையை சொல்ல வேண்டியுள்ளது.
முழு கதையையும் பார்த்த பிறகு தான் கதாபாத்திரங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இந்த விமர்சனங்களால் நான் 2-வது பாகத்தில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை. ஒரு இயக்குநராக எழுதப்பட்ட கதையை எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி விவரிப்பது தான் என் வேலை” என்றார்.