Vijayakanth: “நான் சுயநினைவு இல்லாமல் இருந்தப்போ அவர் செய்த உதவி!"- கலங்கிய ரஜினிகாந்த்

Estimated read time 1 min read

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்த நிலையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

திரைப் பிரபலங்களும், தொண்டர்களும், ரசிகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தீவுத்திடலுக்கு சென்று விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் “கன்னியாகுமரி படப்பிடிப்பில் இருந்து நேற்று வரவேண்டியதாக இருந்தது. மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நட்பிற்கு இலக்கணம் விஜயகாந்த்.  அவருடன் பழகி விட்டால் அதனை நம்மால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அதனால்தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். 

விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

அவர் நண்பர்கள், அரசியல்வாதிகள், ஏன் ஊடகங்கள் மீதும் கோபப்படுவார்.  ஆனால் அவர்மீது யாருக்கும் கோபம் வராது. அவரின் கோபத்திற்கு நியாயமும் அன்பும்  இருக்கும். சுயநலம் இருக்காது. தைரியத்திற்கும் வீரத்திற்கும் இலக்கணமானவர். அவருடன் பழகிய அனைவருக்கும் அவரைப் பற்றி சொல்வதற்கு எவ்வளவோ நினைவிருக்கும்.

எனக்கும் அவரைப்பற்றிய நினைவுகள் எவ்வளவோ உள்ளது. நான் உடல் நிலை குன்றி ராமச்சந்திரா மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருக்கும் போது, ரசிகர்கள், ஊடகங்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. கட்டுப்படுத்தவே முடியவில்லை. விஜயகாந்த் அங்கு வந்து 5 நிமிடங்களில் அங்கிருந்த எல்லோரையும் போகச்சொல்லி அதை சரிபடுத்திவிட்டு, எனது அறை பக்கத்திலேயே தனக்கும் அறைகேட்டு யார் வருகிறார்களோ நான் பார்த்துக்கொள்கிறேன் எனச் சொன்னார்.  

ரஜினிகாந்த் , விஜயகாந்த்

சிங்கப்பூர் மலேசியா நடிகர் சங்க நிகழ்ச்சிக்காக செல்லும்போது, நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் பேருந்தில் ஏறிவிட்டார்கள். நான் வருவதற்கு சற்று நேரமானது. ரசிகர்கள் ஏராளமானோர் சூழ்ந்துவிட்டனர். பவுன்சர்கள் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர் பேருந்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். இரண்டு நிமிடங்களில் அனைவரையும் விரட்டி பாதை உருவாக்கினார்.

அந்தமாதிரியான ஒரு ஆளை கடைசி நாளில் இப்படி பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. கேப்டன் அவருக்கு மிக பொருத்தமான பெயர். 71 பந்துகளில் பல பவுண்டரிகள் பல சிக்ஸர்கள்.

ரஜினிகாந்த், விஜயகாந்த்

நூற்றுக்கணக்கான ரன்களை குவித்து மக்களை மகிழ்வித்து தனது விக்கெட்டை இழந்து இந்த உலகம் எனும் ஃபீல்டை விட்டு போய்விட்டார். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் யார்?  விஜயகாந்த் போன்றோர். வாழ்க விஜயகாந்த் நாமம்” என உருக்கமாகப் பேசினார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours