Bigg Boss 7 Day 89: விசித்ராவின் எல்லை தாண்டிய தீவிரவாதப் பேச்சு; விஷ்ணுதான் முதல் ஃபைனலிஸ்ட்டா?

Estimated read time 1 min read

TTF (Ticket to Finale) டாஸ்க் ஸ்கோர் போர்டில் விஷ்ணு முன்னிலை. அவர்தான் முதல் ஃபைனலிஸ்ட்டாக ஆவார் என்பது மாதிரி ஆட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் ரவீனா எவிக்ஷன் என்றொரு வதந்தி உலா வருகிறது. இரண்டு எவிக்ஷன்கள் என்றும் காற்று வாக்கில் சேதிகள் வருகின்றன. என்ன நடக்கப் போகிறது?

இந்த எபிசோடில் வேலை செய்யாமல் விசித்ரா டபாய்த்தது கூட ஓகே. ஆனால் தினேஷை எல்லை தாண்டி திட்டித் தீர்த்தது முறையானதல்ல.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

தமிழில் ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசுவதும், எழுதுவதும் இயல்பான பழக்கமாகவே மாறி விட்டிருக்கிறது. என்றாலும் சில ஆங்கில வார்த்தைகளை அப்படியே பொருத்திப் பேசும் போது, அது விநோதமான ‘தமிலாகி’ விடுகிறது. “நீங்க ஏன் தினேஷை கில் பண்ணலை?” என்று விசித்ராவைக் கேட்டுக் கொண்டிருந்தார் பூர்ணிமா. “நான் 3 பாயின்ட் வாங்கிட்டேன். போதும். அடுத்த ரவுண்டுல கில் பண்ணியிருப்பேன்” என்றார் விசித்ரா. “விஷ்ணுவைத்தான் இப்ப மத்தவங்க டார்கெட் பண்ணுவாங்க. அவர்தான் லீட்ல இருக்கார்” என்றார் பூர்ணிமா. அது அவரின் மைண்ட் வாய்ஸ் போல!

Bigg Boss 7 Day 89

நாள் 89. ‘பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்’ என்றார் பாரதி. பிக் பாஸ் வீட்டில் பொழுது புலர்ந்தவுடன் சண்டைகளும் கூடவே மலர்ந்து விடுகின்றன. கிச்சன் ஏரியா பக்கம் வராமல் விசித்ரா ‘டிமிக்கி’ கொடுப்பதும் தூரத்திலிருந்து ரவீனா அழைப்பதும் இந்த வாரம் முழுக்கவே தொடர்கதையாகி வருகிறது. இன்றும் அப்படியே! மாயா குழுவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த விசித்ராவை “மேம்… வெஷல் வாஷிங் பண்ணணும்” என்று அழைத்ததும், அணுகுண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஞ்ஞானியை, “அண்ணாச்சி கடைல போய் 50 கிராம் காஃபித்தூள் வாங்கிட்டு வா” என்று அனுப்பியதைப் போல் அதிர்ச்சியடைந்து பார்த்தார் விசித்ரா.

விசித்ரா என்ன எதிர்பார்க்கிறார் என்றால் காய்கறி உள்ளிட்ட எல்லாவற்றையும் மற்றவர்கள் வெட்டி வைத்துவிட வேண்டும். பாத்திரங்களைக் கழுவி சமையல் அறையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் உதவியாளர்கள் செய்து வைத்து விட்டு ‘சீஃப் குக்’கிடம் வந்து பவ்யமாக மனு எழுதித் தந்தால் மேடம் வந்து வெங்காயத்தை எண்ணைய்யில் போட்டு வதக்கும் சிரமமான பணியை மேற்கொள்வார். இப்படியொரு சித்திரம்தான் விசித்ரா செய்வதைப் பார்க்கும் போது தோன்றுகிறது.

சீஃப் குக் விசித்ரா காட்டிய மிகையான கோபம்

பாத்திரம் சுத்தம் செய்ய ரவீனா அழைக்க, “என்ன… எல்லா வேலையையும் என்கிட்டயே சொல்றீங்க. இன்னிக்கு பிரேக்பாஸ்ட் நீங்களே பார்த்துக்கங்க. நான் பாத்திரம் விளக்கறேன்” என்று சீறினார் விசித்ரா. ஆனால் இதே விசித்ராதான் சில நிமிடங்களில் “என்னைக் கேக்காம நீங்களே மெனு தீர்மானிச்சு சமைக்க ஆரம்பிச்சிட்டீங்க” என்று கோபித்துக் கொள்ளவும் செய்தார்.

“அப்போதைக்குத் தேவையான பாத்திரத்தை டக்குன்னு கழுவி எடுத்து சமையல் செய்ய ஆரம்பிக்கக்கூடாதா… இதுக்கெல்லாம் ஒருத்தரைக் கூப்பிடணுமா… நாங்கள்லாம் வீட்ல எவ்வளவு பண்ணியிருக்கோம்? ஒரு ஸ்பூன் கழுவித்தரக்கூட கூப்பிடணுமா… நீங்கள்லாம் என்ன கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி…” என்று நீளமாகத் தேவையில்லாமல் புலம்பினார் விசித்ரா. ‘ஒரு புறாவிற்கு அக்கப்போரா’ என்கிற மாதிரி ஸ்பூன் கழுவும் விவகாரத்தை அண்டா சைஸூக்கு இழுத்தார்.

Bigg Boss 7 Day 89

ரவீனாவைத் திட்டினால் மணிக்குப் பொறுக்குமா? விசித்ராவின் மிகையான கோபத்தைப் பார்த்தால் நமக்கே நெருடலாகத்தான் இருந்தது. பூர்ணிமா சொல்வதுபோலச் சொன்னால் ‘செம காண்டாவுது’. எனவே பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டிருந்த மணி, ஒரு கட்டத்தில் உள்ளே புகுந்து ‘மம்மி… ஒரு பாத்திரம் மட்டும் விளக்க உங்களைக் கூப்பிடலை. எல்லாமேதான் சுத்தம் பண்ணணும். நீங்க கோச்சுக்கறதால ஒண்ணு கேட்டோம்” என்றார்.

விசித்ரா மாதிரி கோபமாக ஒருவர் அனத்தும் போது அவரை அப்படியே விட்டு விட்டால் சற்று நேரத்தில் அடங்கி விடுவார். ஆனால் “அதாவது வந்துங்க” என்று யாராவது விளக்கம் சொல்லப் புகுந்தால் போதும். அனத்துபவருக்கும் அதுதான் வேண்டும். பெட்ரோலில் தீப்பொறி பட்டது போல் அதை உபயோகித்துக் கொண்டு “அதெல்லாம் நீ சொல்லக்கூடாது… நீயேன் சொல்ற?! தப்பு… தப்பு!” என்று ‘கில்லி’ பிரகாஷ்ராஜ் போல் கூடுதலாக எரிந்து விழுவார்கள். அனத்தல் இன்னமும் நீளமாகும். இப்போதும் அப்படியேதான் நடந்தது. “என்னத்தா கல்யாணம் பண்ணி… குடும்பம் பண்ணி” என்று மணியின் மீதும் பாய்ந்தார் விசித்ரா.

விசித்ராவின் எல்லை தாண்டிய தீவிரவாதப் பேச்சு

இதெல்லாம் கூட பிக் பாஸ் வீட்டில் வழக்கமாக நிகழும் சர்ச்சைகள் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு காஃபி கோப்பையைக் கழுவி வைப்பதற்கு கூட பஞ்சாயத்து வைப்பார்கள். சீனியர் என்கிற ஹோதாவில் விசித்ரா செய்யும் பந்தா என்று கூட விட்டு விடலாம். ஆனால் வேண்டாவெறுப்பாக பாத்திரம் கழுவ வந்த விசித்ரா, “இதுங்க மூஞ்சையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. இன்னமும் 15 நாள். வெளியே ஓடிடுவேன்” என்று ஆரம்பித்து தினேஷ் பற்றி முனகியதெல்லாம் எல்லை தாண்டிய தீவிரவாதம். “உடம்பு முழுக்க விஷம். வன்மம்… இவங்களோடலாம் எப்படித்தான் குடித்தனம் பண்ணாங்களோ… நீ திரும்பி வந்துராதம்மா தாயி…” என்று தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்தியது முறையானதல்ல. விசித்ரா இப்படிச் செய்வது நிறைய முறை நடந்திருக்கிறது. ஆனால் இதுதான் பர்ஸ்ட் டைம்.

Bigg Boss 7 Day 89

மோசமாக நடந்து கொள்ளும் ஆண்களைப் பார்த்து, முகச்சுளிப்புடன் “இவனைக் கட்டினவ பாவம். என்னல்லாம் கஷ்டபடறாளோ?” என்று ஆதங்கப்படுவது நடைமுறையில் உள்ளதுதான். ஆனால், தான் எதற்காக பிக் பாஸ் ஷோவிற்கு வந்தேன், அதன் நோக்கம் என்ன, தன் துயரம் என்ன என்பதையெல்லாம் தினேஷ் பல சந்தர்ப்பங்களில் விரிவாகச் சொல்லியிருக்கிறார். எனில் அப்படியொரு சென்சிட்டிவ்வான பர்சனல் பக்கத்தில் சென்று விசித்ரா தீர்ப்பெழுதுவது சரியானதல்ல. தினேஷ் முகத்தில் அடிப்பது போல் கடுமையான வார்த்தைகளைச் சொல்வது உண்மைதான். அதை பிக் பாஸ் வீட்டின் எல்லைக்குள் நின்றுதான் விசித்ரா விமர்சிக்க வேண்டுமே ஒழிய தனிப்பட்ட விவகாரத்திற்குள் சென்று ஒருவரின் இமேஜை டேமேஜ் செய்து குருவிக்கூட்டிற்குள் குண்டு வைக்கும் வேலையைச் செய்யக்கூடாது.

உண்மையில் விசித்ராவின் கோபம் தினேஷின் மீதுதான். “அவர்தான் கீ கொடுத்து இவங்களை கேக்கச் சொல்றார்” என்று இவராகவே நினைத்துக் கொண்டார். ஆனால் உண்மையில் அப்படி நிகழவில்லை. இதிலிருந்து நமக்கும் கூட ஒரு பாடம் உள்ளது. நமக்கு ஒருவரைப் பிடிக்காமல் போய் விட்டால் அவர் செய்வது எல்லாமே நமக்கு எதிரான உலக சதி என்று நாமாக நினைத்துக் கொண்டு வெறுப்பின் எல்லையை அதிகப்படுத்திக் கொண்டே செல்வோம். தினேஷ் மீதுள்ள மறைமுக வெறுப்பில் விசித்ரா தன் கோபத்தைக் காட்டியதால் அந்த கிராஸ் ஃபயரில் மணியும் ரவீனாவும் மாட்டிக் கொண்டார்கள்.

தினேஷ் மீதுள்ள கோபம்தான் இப்படி வெடிக்கிறது என்று ரவீனாவிற்கு உள்ளூற புரிகிறது. என்றாலும் இன்னொருவர் மீதுள்ள கோபத்தை தன் மீது இறக்கி தன்னையொரு வடிகாலாக ஒருவர் பயன்படுத்திக் கொண்டால் எவருக்குமே நிச்சயம் கோபம் வரும். ஆனால் இந்தச் சூழலை ரவீனா கையாண்ட விதம் அருமையானது. தன் தரப்பு நியாயத்தை மிக இயல்பான தொனியில் விடாமல் சொல்லிக் கொண்டே இருந்தது நன்று. ஒரு கட்டத்தில் ரவீனாவின் பாவமான முகத்தைப் பார்த்து “ஓகே… என் மேலதான் தப்பு. சரியா…” என்று விசித்ரா இறங்கி வந்தார். மனச்சாட்சி உறுத்தியிருக்கும் போல! குழந்தை போல முகத்தை பாவமாக வைத்துக் கொண்டிருந்த ரவீனாவிற்கு கேமரா க்ளோசப் வைத்து அழகு பார்த்தது.

Bigg Boss 7 Day 89

ரவீனா வெள்ளந்தியா, விஷ பாட்டிலா?

எமோஷனல் சூழலை ரவீனா நிதானமாக கையாண்டதற்குப் பாராட்டினாலும் இவ்வகையானவர்கள் சற்று ஆபத்தானவர்கள். பற்ற வைக்காத வெடிகுண்டு மாதிரி. உணர்ச்சிவசப்பட்டு கத்துபவர்களை கூட நம்பி விடலாம். ஆனால் மௌனமாக இருப்பவர்கள், சரியான நேரத்தில் கழுத்தில் கத்தியை வைத்து விடுவார்கள். பிற்பாடு தினேஷிடம் பேசும் போது “விசித்ரா உங்களைப் பத்தி என்னென்னலாம் சொன்னாங்க தெரியுமா?” என்று தினேஷிடம் கச்சிதமாகப் போட்டுக் கொடுத்து விட்டார் ரவீனா. “எனக்கு நேரா சொல்லியிருந்தா கிழிச்சு விட்டிருப்பேன்” என்றார் தினேஷ். ஆம், தனிப்பட்ட விவகாரங்களை இழுத்தால் தினேஷ் வழக்கத்தை விடவும் அதிக கொலைவெறியை அடைவார் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம்.

பாத்திரம் விளக்கும் சமயத்தில் விசித்ரா அனத்திக் கொண்டிருந்ததையெல்லாம் மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்தார் தினேஷ். அந்த அம்புகள் தம்மை நோக்கியவை என்பது அவருக்கும் தெரியும். என்றாலும் ‘அம்பு நேராக வரட்டும், இப்போது தலையிடுவது சரியல்ல’ என்று பொறுமை காத்தது நன்று. ஆனால் என்னதான் விசித்ரா மறைமுகமாகத் திட்டிக் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் அவராலும் தினேஷின் மௌனத்தை சகிக்க முடியவில்லை. “என்ன சமைக்கணும்ன்னு சார் சொல்வாரு. கேட்டுக்கங்க” என்று தினேஷை வம்பிற்கு இழுக்க, “இதுவரைக்கும் நான் ஏதாவது பேசினேனா… உங்க பிரச்னைல என்னை ஏன் இழுக்கறீங்க. கௌம்புங்க” என்று சரியாகத் துண்டித்தார் தினேஷ். ஒரு சின்ன விவகாரத்தில் எத்தனை விதமான உணர்ச்சிகள், கோணங்கள், சறுக்கல்கள் நிகழ்கின்றன என்று பாருங்கள். இவையெல்லாம் நமக்கானவையும் கூட. நாமும் இதே மாதிரி பல முறை சறுக்கியிருப்போம்.

“வாழ்க்கைக்குத் தேவையானதை சொல்றாங்களாமா. ரைட்டு. ஆனா அவங்க பொியவங்க மாதிரி நடந்துக்கறாங்களாமா?” என்று பின்னர் இதை விமர்சித்தார் விஷ்ணு. “சின்னப்பொண்ணு எவ்வளவு மெச்சூர்டா பேசுது. அது கூட இவங்களுக்கு இல்லையே” என்றார் தினேஷ். “எனக்கு இப்ப சண்டை போடற மூடு இல்லை. சண்டைக்காரன்னு பட்டம் வேற தந்துடுவாங்க” என்று உஷாராக இருந்தார் விஷ்ணு. பிறகு நடந்த மதிய சமையலுக்கான ஏற்பாட்டில் “ரெண்டு வயசு குழந்தை கூட உருளைக்கிழங்கு உரிக்கும். உனக்கு உரிக்கத் தெரிலையன்றே?” என்று விசித்ரா கேட்க “ரெண்டு வயசு குழந்தைக்கு சாப்பிடவே தெரியாது. எங்க அந்தக் குழந்தையை கூட்டிட்டு வந்து உரிக்கச் சொல்லுங்க பார்க்கலாம்?” என்று நக்கலடித்தார் விஷ்ணு.

குழந்தைகளைக் கொஞ்சி கடுப்பேற்றிய விசித்ரா

விசித்ரா இதுவரை செய்ததைக் கூட ஒரு மாதிரியாக சகித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்குப் பிறகு மாயாவையும் பூர்ணிமாவையும் குழந்தைகள் போல் வைத்து அவர் கொஞ்சிய காட்சிதான் கூடுதல் கடுப்பை ஏற்றியது. போதாக்குறைக்கு அந்த இருவரும் எல்கேஜி பாப்பா போல் பேசிய போது கடுப்பு அதன் உச்சத்திற்கே சென்றது. இதே கரிசனத்தின் பகுதியை ரவீனா மீது விசித்ரா காட்டத் தவறியது ஏன்?

Bigg Boss 7 Day 89

“இந்த வாரம் ஸ்கூல் பிரின்சிபல் ஏதாவது கம்ப்ளெயிண்ட் பண்ணா என்ன பண்ணுவீங்க?” என்று தினேஷை மறைமுகமாக குறிப்பிட்டு விசித்ரா கேட்க, “இந்த வாரம் அவர் போயிடுவாரு” என்று சொல்லி கபகபவென சிரித்தார் மாயா. “எங்களை யாரும் அனுப்ப முடியாது. நாங்களே போனாத்தான் உண்டு” என்று பூர்ணிமா சிரித்ததும் ஒருவகையில் உண்மைதான் போல.

“நம்மள யாராவது கத்தினா பொறுமையா போயிடணும். அப்பதான் எதிராளி குணம் வெளிய நல்லா தெரியும்” என்பது போல் பிறகு சொல்லிக் கொண்டிருந்தார் ரவீனா. (அப்ப இதுதான் அந்தப் பொறுமைக்கு காரணமா. வெஷம்… வெஷம்!). “நூறு கோடி ரூவா செட்ல நடு வீட்ல ஜட்டியை காய வைச்சிருக்கான். ஆனா மம்மி இதையெல்லாம் கேட்க மாட்டாங்க. ஏன்னா அவன் செல்லப் பிள்ளை” என்று நிக்சன் குறித்து ஜாலியாக கமெண்ட் அடித்தார் தினேஷ். (அந்த செட்டு நூறு கோடியா ஆகியிருக்கும்… ஏப்பே நீ பார்த்தே?) “சம்பளம் வாங்கலை. வேலை செய்ய மட்டும் கசக்குதா?” என்று விசித்ரா குறித்து காட்டமாகக் கேள்வி கேட்டார் தினேஷ். தனக்கு சிக்கன் துண்டு தருவதற்குத் தயங்கிய விசித்ரா, பூர்ணிமா மற்றும் நிக்சனுக்கு மட்டும் அள்ளி அள்ளி வழங்கிய சம்பவத்தை மணி விவரித்தது சுவாரஸ்யமான காமெடிக் காட்சி.

‘வுட்றாதீங்க. யப்போவ்… வுட்றாதீங்க யம்மோவ்’

TTF-ன் நான்காவது டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். இது சிரமமான ஆட்டம்தான். எட்டு நபர்களும் இரண்டு அணிகளாகப் பிரிய வேண்டும். ‘டிக்கெட் டூ பினாலே’ என்ற பலகையை ஒரு ஸ்டாண்டில் வைத்து ஒரு கையை மட்டும் வைத்து விழாமல் தாங்கிப் பிடிக்க வேண்டும். கையை மாற்றக்கூடாது. அழுத்தியிருக்கும் கையை எடுக்கக்கூடாது. பலகை சரிந்தாலும் நிமிர்த்தாமல் அதே பொசிஷனில்தான் அழுத்திப் பிடிக்க வேண்டும்.

இரண்டு அணிகளாகப் பிரிக்கும் போது வீட்டின் குழு மனப்பான்மை வழக்கம் போல் இதிலும் வெளிப்பட்டது. ஆனால் இது மாயா குழு செய்த முட்டாள்தனம். ஏனெனில் எதிர் அணியில் இருந்த விஷ்ணு, தினேஷ், மணி மூவரும் ஆண்கள். ரவீனாவும் இளமையானவர். ஆனால் இவர்கள் அணியில் மூன்று பெண்கள். விசித்ராவால் அதிக நேரம் சமாளிக்க முடியாது. எனவே இந்த நேரத்தில் குழு மனப்பான்மையை விட்டு விட்டு வலிமையானவரை உள்ளே இழுத்திருக்க வேண்டும். கோட்டை விட்டு விட்டார்கள்.

Bigg Boss 7 Day 89

“விஷ்ணு.. நீயும் நானும் இரண்டு முனைகளை ஸ்ட்ராங்கா பிடிச்சுக்கணும். அது முக்கியம்” என்றார் தினேஷ். இரவு 09.40 மணிக்கு இந்த டாஸ்க் ஆரம்பித்தது. ஐந்து மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் முடிந்தது. நேரம் 10:35 ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன?’ என்று டைமிங்காக பாடி போட்டியாளர்களை ஜாலியாக வெறுப்பேற்றினார் அர்ச்சனா. ‘அடிப்பாவி’ என்று அவரை நோக்கி வலியுடன் கத்தினார்கள். நடுவர்களாக இருந்தாலும் அர்ச்சனாவும் விஜய்யும் போட்டியாளர்களை உற்சாகத்துடன் ஆதரவு தந்த விஷயத்தை பாராட்டியே ஆக வேண்டும். அதிலும் அர்ச்சனாவின் கூடுதல் உற்சாகம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

நேரம் 11:30. மாயா குழுவின் பலகை சாய்ந்து கொண்டே வந்தது. “நாம ஆள மாத்தியிருக்கணும்” என்று கை வலியுடன் தாமதமாக யோசித்தார் பூர்ணிமா. வலது கையில் அடிபட்டிருந்ததால் அவர் இடது கையை வைத்திருந்தார். வலி காரணமாக இன்னொரு கையை வைத்து பிடித்திருந்த கையின் மீது ஒத்தடம் மாதிரி தந்தார் நிக்சன். அந்தச் சமயத்தில் பிடித்திருந்த கை, ஒரு நொடி விலகியதை பிக் பாஸ் கேமிரா கூர்மையாகக் கண்காணித்து விட்டது. (இதெல்லாம் மட்டும் கரெக்ட்டா பார்க்கத் தெரியுதா?!). எனவே நிக்சனை அவுட் ஆக்கி வெளியே அனுப்பினார் பிக் பாஸ். ‘நான் எடுத்த மாதிரியே இல்லையே’ என்கிற முகபாவத்துடன் தோளை குலுக்கிக் கொண்டு வெளியேறினார் நிக்சன்.

கடைசி வரையிலும் தாக்குப் பிடித்த ரவீனா

போட்டி ஆரம்பித்து இரண்டரை மணி நேரம் கடந்திருந்தது. நேரம் 12:50. விசித்ரா பிடித்திருந்த பக்கம் பலகை அபாயகரமான கோணத்தில் சாய்ந்திருந்தது. “சுண்டு விரல் இருக்கற ஃபீலே தெரியல. மத்த விரலும் அப்படித்தான். கட்டை விரல்ல மட்டும் லைட்டா உணர்வு தெரியுது” என்று தினேஷ் சொல்ல, மற்றவர்கள் சிரித்தார்கள். மாயா குழுவின் பலகை மிகவும் சாய்ந்து விட்டதால், யாராவது ஒருவரை ஆட்டத்திலிருந்து வெளியேற்றி பலகையை நேராக்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தார் பிக் பாஸ். எனவே மிகவும் தடுமாறிய விசித்ரா ஆட்டத்திலிருந்து விலக முடிவு செய்தார். இவ்வளவு நேரம் தாக்குப்பிடித்த அவரை மற்றவர்கள் பாராட்டியது சிறப்பான விஷயம். அவர் நான்கு மணி நேரம் பலகையைப் பிடித்தபடி நின்றிருக்கிறார்.

Bigg Boss 7 Day 89

மாயாவும் பூர்ணிமாவும் வலி தாங்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள். “கைல உயிர் போயிடுச்சு” என்ற பூர்ணிமா “டேய் எருமை மாட்டுப் பயலே… விட்டுட்டுப் போயிட்டியே” என்று நிக்சனை ஜாலியாக திட்டி வலியின் துயரத்தைக் குறைத்துக் கொள்ள முயன்றார். பிறகு பூர்ணிமா பாடிய ‘ராப்’ பாடல் உண்மையிலேயே அருமை. இந்தத் திறமையை ஏன் ஒளித்து வைத்திருந்தார்?!

நேரம் 02.35. திடீரென மோட்டிவேஷன் பாடல் ஒலித்தது ‘வுட்றாதீங்க. யப்போவ்… வுட்றாதீங்க யம்மோவ்’ என்று நல்ல டைமிங் வரிகள். படத்தில் இது வேறு நோக்கத்தில் வந்தாலும் இந்த டாஸ்க்கிற்குப் பொருத்தமான வரிகள். ‘தங்க மகனே பயப்படாத’ என்கிற உத்வேகம் தரும் வார்த்தைகள். ‘கர்ணன்’ படத்திலிருந்து ஒலித்தது. சிவாஜி நடித்த படத்தில் ஏது இந்தப் பாடல்? விஸ்வநாதன் – ராமமூர்த்தி இப்படியெல்லாம் இசையமைத்திருக்கிறார்களா என்று 50’ஸ் கிட்ஸ் யோசிக்க வேண்டாம். இது தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம்.

Bigg Boss 7 Day 89

சிறிது நேரத்தில் கைவலி தாங்காமல் பூர்ணிமா ஆட்டத்திலிருந்து விலக, தனியாளாக பலகையைத் தாங்கிக் கொண்டிருந்த மாயா ‘அடப்பாவிகளா’ என்று அலறினார். “விஷ்ணு உனக்கு 3 பாயின்ட் வேணுமா. ரெண்டு வேணுமா” என்று கேட்டு சூழலை கலகலப்பாக்கினார் தினேஷ். ஒரு கட்டத்தில் பலகை சாய “என்னதிது தினேஷ் தூங்கிட்டாரா” என்று ரவீனா கலாய்த்தார். கைவலி தாங்காமல் தினேஷ் விட்டு விட, சிறிது நேரத்திலேயே விஷ்ணுவும் ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.

ஆக, மணியும் ரவீனாவும் மட்டும் ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள். (இதுலயும் ஜோடியா… அதுவா அமையுது பாருங்கள்!). “ரவீனாவிற்கு விட்டுக் கொடுடா. பெண்ணுக்கு விட்டுக் கொடுத்த பெருமை சேரும்” என்று மணியை பாவனையாகக் கேட்டார்கள். அவர் அதைத்தான் செய்யப் போகிறார் என்றாலும் அப்போதைக்கு வீம்பாக மறுத்தார். உள்ளே சமைத்துக் கொண்டிருந்த விசித்ரா, “அதைத்தான் எப்படியும் செய்யப் போறான்” என்று கிண்டலடித்தார். சொன்னது போலவே சிறிது நேரத்தில் மணி ஆட்டத்திலிருந்து வெளியேற இறுதி வரை தாக்குப்பிடித்த பெருமையை ரவீனா பெற்றார். அவருக்கு ஐந்து பாயிண்ட். மணிக்கு 4, விஷ்ணுவிற்கு 3, தினேஷிற்கு 2, மாயாவிற்கு 1 எ்ன்கிற வகையில் புள்ளிகள் கிடைத்தன.

Bigg Boss 7 Day 89

ஆக… ஸ்கோர் போர்டில் பத்து புள்ளிகள் பெற்று இப்போதைக்கு முன்னிலையில் இருக்கிறார் விஷ்ணு. அவர்தான் முதல் ஃபைனலிஸ்ட் என்கிற மாதிரி ஆட்டம் நகர்கிறது. என்ன நடக்கிறதென்று பார்ப்போம். கமல் காட்டவிருக்கும் ‘வெள்ளிக்கிழமை நிகழ்வுகளில்’ அது தெரிந்து விடும்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours