இதுக்கப்புறம் சிங்கப்பூர்ல விழாவை முடிச்சிட்டு இரவு நேரத்துல கிளம்பினோம். இங்கயும் எல்லோரையும் அனுப்பிட்டு கடைசிலதான் கேப்டன் பஸ்ல வந்தார். அப்போ கடைசி சீட்தான் இருந்தது. அந்த கடைசி சீட்ல நானும் கேப்டனும் உட்கார்ந்துட்டு வந்தோம். அழகாகக் கூட்டிட்டு போய் அழகாகத் திருப்பி கூட்டிட்டு வந்தார். இந்த மாதிரி எடுத்த விஷயத்தைச் சரியாக முடிப்பதில் அவர் மிகத் திறமையானவர். எங்களைப் பத்தி பத்திரிகைல ஏதாவது எழுதியிருந்தா அந்தப் பத்திரிகைக்கு போன் பண்ணி, “இப்படி எழுதியிருக்கீங்க, இதுக்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன்’னு எங்க சார்புல நின்னு பேசுவார். அதுதான் கேப்டன்!
அதுக்குப் பிறகு ‘கள்ளழகர்’ படத்துல நடிச்சேன். அந்தப் படத்துல கேப்டன் சொல்லிதான் நான் நடிச்சேன். அந்தச் சமயத்துல நான் பிஸியாக இருந்தேன். ‘கள்ளழகர்’ படத்தோட பாடல் ஷூட்டிங் மூணு நாள் நடந்தது. அப்போ அடுத்த நாள் விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தோட ஷூட்டிங் இருந்தது. கேப்டன் என்கிட்ட ‘வையாபுரி, இங்க லேட் பண்ணிடுவாங்க. காலைல நீ அங்க ஷூட்டிங் போகணும். நான் வேற எதாவது ஏற்பாடு பண்றேன்’னு சொன்னார். அதுக்கு பிறகு என்னை மணிவண்ணன் சாரோட பென்ஸ் கார்ல ஷூட்டிங் அனுப்பி வச்சார்.
என் கல்யாணம் வடபழனி கோயில்ல நடந்துச்சு. அங்க கேப்டன் வரணும்னு அவசியம் இல்ல. அங்க வந்து தாலி, மோதிரம் எடுத்துக் கொடுத்து என் கல்யாணத்தை நடத்தி வச்சாரு. அவர் தேர்தல்ல ஜெயிச்சு எதிர்கட்சி தலைவரானதும் அவரைச் சந்திக்கக் குடும்பத்தோட போனேன். அப்போ அவர் என்கிட்ட, ‘ஜெயலலிதா அம்மாவைப் பார்த்துட்டு வந்துட்டியா’னு கேட்டார். நான், ‘இல்ல, அப்பாயிண்மென்ட் கேட்டிருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களைச் சந்திக்கலாம்னு வந்தேன்’னு சொன்னேன்.
+ There are no comments
Add yours