பலவீனமான திரைக்கதையை, நடிகர்களின் நடிப்போ, தொழில்நுட்ப கலைஞர்களின் பணியோ காப்பாற்றவில்லை. அதனால், பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் அதிமுக்கியமான முடிவுகள், அவர்களின் இறப்பு, ரத்தம் தெறிக்கும் வன்முறை என எதுவுமே பார்வையாளர்களின் மனதில் பதியாமல், திரையை மட்டும் நிரைத்தபடி ஓடுகின்றன. கொலை செய்யக் கதாநாயகன் தயாராகும் காட்சித்தொகுப்பும் இளையராஜாவின் பழைய பாடல்களைப் பின்னணி இசையாகக் கொண்டும் நகரும் காதல் காட்சிகளும் மட்டும் சுவாரஸ்யம் தருகின்றன.
மதுரை கிராமத்து வட்டார வழக்கில் வரும் நையாண்டி வசனங்கள் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன. பிரதானமாக, பாட்டிகள் – இளவட்டங்களுக்கு இடையிலான உரையாடல்கள், மாமன் – மாப்பிள்ளை உறவுகளுக்கு இடையிலான வாய் சண்டைகள் ஆகியவை சிரிக்க வைத்து, ரசிக்க வைக்கின்றன. மொத்தமாகவே, படத்தின் வசனங்கள் கதைக்களத்தின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும்படி அமைந்திருந்தாலும், இடைவிடாமல் வசனங்கள் மட்டுமே ஒலித்துக்கொண்டே இருப்பது நம்மையும் டயர்டாக்குகிறது. பெரும்பாலான நேரங்களில் திரையில் யாராவது ஒருவர் பேசிக்கொண்டே இருக்கிறார். குறைந்தபட்சம், அந்த வசனங்களாவது காட்சிக்குத் தேவையானதாக இருந்திருக்கலாம்.
கிராமத்தில் இருக்கும் சாதிய அமைப்பு, ஒரே சாதிக்குள் இருக்கும் வர்க்க வேறுபாடு, விளைநிலங்களின் மேல் குறிப்பிட்ட சாதிகள் காட்டும் உரிமை (?), விவசாயக் கூலிகளாக ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள், பண்ணை முறையில் இருக்கும் சாதியம், சாதியத்திற்குள் வன்முறைக்கான இடம் எனப் பல விஷயங்களைத் தொட்டிருப்பதற்காக மட்டும் இயக்குநருக்குப் பாராட்டுகள்.
+ There are no comments
Add yours