வைதேகி காத்திருந்தாள்: ஆக்ஷன் ஹீரோ விஜயகாந்த் `வெள்ளைச்சாமி'யான கதை – ஒரு நாஸ்டால்ஜியா பார்வை!

Estimated read time 1 min read

நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் இன்று மறைந்தார். அதுவரை ஆக்ஷன் ஹீரோவாக அறியப்பட்டவர், ஒரு தேர்ந்த நடிகராக, தன் திறமையைக் காட்டிய படம் `வைதேகி காத்திருந்தாள்’. படம் குறித்து விகடனின் `டென்ட் கொட்டாய் டைரீஸ்’ தொடரில் கடந்த மே மாதம் வெளியான கட்டுரை இதோ…

எண்பதுகளில் வெளியான பல திரைப்படங்கள் பிரமாண்டமான வெற்றியை அடைந்ததற்கு இளையராஜாவின் இசை மற்றும் பாடல்கள் பிரதானமான காரணமாக இருந்தன. ஆனால் வெறும் இசை மட்டும் படத்தைக் காப்பாற்ற முடியாது. பாடல்கள் சிறப்பாக அமைந்த சில திரைப்படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. கதை, திரைக்கதை, இயக்கம் உள்ளிட்ட விஷயங்கள், சற்றாவது சுவாரஸ்யமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும். டைரக்டர் சிறிது கோடு போட்டால் போதும், ராஜா அதில் ரோடு போட்டு ஜெயிக்க வைத்துவிடுவார்.

இந்த வரிசையில் வணிகரீதியாக வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று ‘வைதேகி காத்திருந்தாள்’. ‘மூன்று தெய்வங்கள்’ என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலான ‘வசந்தத்தில் ஓர் நாள்… மணவறை ஓரம்… வைதேகி காத்திருந்தாளோ’ என்கிற பாடல் வரியின் பாதிப்பில் இந்தப் படத்தின் தலைப்பு அமைந்துள்ளது.

வைதேகி காத்திருந்தாள்

பாடல்களின் மூலம் உருவான திரைக்கதை

‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம் உருவானதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. ‘காக்கிச் சட்டை’ படத்திற்கு இசையமைப்பதற்காக வெளியூர் சென்றிருந்த இளையராஜா, அந்தப் பணி விரைவில் முடிந்துவிட்டதால் ஓய்வு நேரத்திலும் சும்மா இருக்காமல் ஆறு மெட்டுக்களை உருவாக்கினார். பஞ்சு அருணாச்சலம் உட்படச் சிலர் அதிலிருந்து சில மெட்டுக்களைக் கேட்டும் அவர் தரவில்லை. “இந்த ஆறு மெட்டுக்களையும் ஒரே படத்தில் உபயோகித்தால் மட்டுமே தருவேன்” என்பதே அவர் வைத்த நிபந்தனை.

அந்தக் காலகட்டத்தில், ஒரு திரைப்படத்திற்கு இளையராஜாவின் இசை கிடைப்பதெல்லாம் ‘ஜாக்பாட்’ மாதிரி. எனவே இந்த தகவலைக் கேள்விப்பட்ட இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன், இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அதற்கேற்ப திரைக்கதை எழுதி ஆறு பாடல்களையும் பயன்படுத்திக் கொண்டார். பாடல்கள் அனைத்தும் ‘ஹிட்’ ஆகின. படத்தின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்தன.

விஜயகாந்தின் கலையுலகப் பயணத்திலும் இந்தத் திரைப்படம் முக்கியமானது. அதுவரை ‘ஆக்ஷன் ஹீரோவாக’ கண்கள் சிவக்க, கைகளை உயர்த்தி முறுக்கிக் கொண்டிருந்தவரை ‘வெள்ளைச்சாமி’ என்னும் மிருதுவான பாத்திரத்தை ஏற்க வைத்ததின் மூலம் அவரிடமிருந்த நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்த படம் இது.

இந்த மாதிரியான டெம்ப்ளேட்டை நாம் நிறையத் திரைப்படங்களில் பார்த்திருப்போம். பல்வேறு தடைகளால் காதலை இழந்த, இணைய முடியாமல் போன மூத்த காதலர்கள், தங்களின் உயிரைப் பணயம் வைத்து இளம் காதலர்களைச் சேர்த்து வைப்பார்கள். இந்த வரிசையின் முன்னோடித் திரைப்படம் இது. இதன் பிறகு விஜயகாந்த்தே இதே மாதிரியான பாணியில் அமைந்த திரைக்கதையில், ‘பூந்தோட்டக் காவல்காரன்’, ‘செந்தூரப் பூவே’ என்று சில திரைப்படங்களில் நடித்தார்.

வைதேகி காத்திருந்தாள்

வெள்ளைச்சாமி – வைதேகி – காதலையும் திருமணத்தையும் இழந்தவர்கள்!

அந்தக் கிராமத்திற்கு ஓர் அநாமதேய ஆசாமியாக வந்து சேர்கிறான் வெள்ளைச்சாமி. யாரிடமும் அவன் பேசுவதில்லை. ஊர் மக்கள் சொன்ன வேலையைத் தட்டாமல் செய்வான். கோயில் வாசலில் படுத்திருப்பான். குளத்திலிருந்து தண்ணீர் எடுத்துத் தருவான். இரவு நேரமானால் உருக்கமான பாடலை இனிமையாகப் பாடுவான். புதிய ஆசாமியாக இருந்தாலும் அவனால் தொந்தரவு ஏதும் இல்லாததால் ஊரார் அவனை ஏற்றுக் கொள்கிறார்கள். அவனுடைய பாடலைக் கேட்டுத்தான் அந்தக் கிராமமே இரவில் உறங்க ஆரம்பிக்கும். (இந்த வகையில் ‘சின்ன தம்பிக்கு’ முன்னோடி வெள்ளைச்சாமிதான்).

அதே கிராமத்தில் இருப்பவள் வைதேகி. இளம் வயதிலேயே விதவையானவள். திருமணம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் பரிசல் கவிழ்ந்து ஆற்றில் மூழ்கி புது மணமகன் இறந்து போகிறான். இளம் வயதிலேயே தன் மகளின் வாழ்க்கையில் வசந்தம் பறிபோய் விட்டதே என்று எண்ணி அவளது தந்தை குடியில் மூழ்கியிருக்கிறார். கோயில் சுவரில் ‘வைதேகி… வைதேகி’ என்று வெள்ளைச்சாமி எழுதி வைப்பதைப் பார்த்து ஊரார் புறம் பேசுகிறார்கள். இது பற்றி துயரத்துடன் வெள்ளைச்சாமியிடம் விசாரிக்கிறாள் வைதேகி. அப்போதுதான் தெரிகிறது. வைதேகி என்கிற பெயரில் வெள்ளைச்சாமிக்கு ஒரு காதலி இருந்திருப்பது. அவளைப் பற்றிய ஏக்கத்தில்தான் தினமும் அவன் இரவில் பாடுகிறான். இருவருமே தங்களின் கடந்த கால துயரத்தை பிளாஷ்பேக் காட்சிகளாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதே கிராமத்தில் வேலை தேடி வருகிறான் ஓர் ஏழை இளைஞன். அவனுக்கும் ஓர் இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. பெண்ணின் அண்ணன் பெரிய ரவுடி என்பதால் காதலனுக்கு உயிர் ஆபத்து ஏற்படுகிறது. வெள்ளைச்சாமியும் வைதேகியும் ரவுடியை எதிர்த்து இளம் காதலைப் பாதுகாக்க நினைக்கிறார்கள்.

இறுதியில் என்னவாயிற்று? நாடகத் தன்மையுடன் கூடிய பரபரப்பான க்ளைமாக்ஸூடன் படம் நிறைகிறது.

வைதேகி காத்திருந்தாள்

வித்தியாசமான வேடத்தில் விஜயகாந்த்!

வெள்ளைச்சாமியாக விஜயகாந்த். தாடியும் பரட்டைத்தலையுமாக ஊர் மக்கள் சொல்லும் வேலைகளைச் செய்யும் அப்பாவியாக வருகிறார். அதுவரை ஆக்ஷன் ஹீரோவாக பார்த்திருந்த அவரை, இப்படியொரு அமைதியான பாத்திரத்தில் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. பிளாஷ்பேக் காட்சியில் வழக்கமான விஜயகாந்த் வருகிறார். தன்னை மணக்க விரும்பும் முறைப்பெண்ணைப் பொய்க் கோபத்துடன் துரத்தியடிக்கிறார். காமெடி மாதிரி எதையோ செய்ய முயல்கிறார். ஒரு சண்டைக்காட்சியும் உண்டு.

வெள்ளைச்சாமியின் முறைப்பெண்ணாக பரிமளம் என்கிற கன்னட நடிகை நடித்திருந்தார். தமிழ் சினிமா ஹீரோயின் வழக்கப்படி மாமனைத் திருமணம் செய்து கொள்வதுதான் இவரது வாழ்நாள் லட்சியம். (ஆஹா.. இதுவல்லவோ லட்சியம்?!). மாமனின் கருமை நிறத்தைப் போலவே தன்னுடைய நிறமும் மாற வேண்டும் என்பதற்காக இவர் கடும் வெயிலில் நிற்பதெல்லாம் அவரின் புத்திசாலித்தனத்தைப் போற்றும் காட்சிகள்.

வைதேகி காத்திருந்தாள்

கைம்பெண் வைதேகியாக ரேவதி. அற்புதமாக நடித்திருக்கிறார். தன்னுடைய நிலை காரணமாகத் தந்தை குடியில் வீழ்ந்திருப்பதை அறிந்து வருந்துவதும், அவர் எங்காவது போதையில் விழுந்திருக்கும் போது இரவு முழுக்க தேடி வீட்டிற்குத் தூக்கி வருவதும், புதிதாக வந்த இளைஞன் தன்னைத்தான் காதலிக்கிறான் என்று கற்பனை செய்து மிதப்பதும், காதலர்களைப் பாதுகாப்பதில் துணிச்சலாகச் செயல்படுவதும் எனத் தனது சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்.

டி.எஸ்.ராகவேந்திரா அறிமுகமான திரைப்படம்

ரேவதியின் அப்பாவாக டி.எஸ்.ராகவேந்திரா இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். அடிப்படையில் இவர் ஒரு பாடகர். இவர் மட்டுமல்லாது குடும்பமே இசைக்குடும்பம்தான். இவரது மகளும் பாடகியுமான கல்பனாவும், இந்தப் படத்தில் சிறுமியாக வந்து போகிறார். வைதேகியின் வாழ்க்கை ஆரம்பித்த கணத்திலேயே முடிந்து போனதை எண்ணி வருந்தி குடியில் தன் கவலையைக் கரைக்கும் தகப்பன் பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருந்தார். ‘அழகு மலர் ஆட’ பாடலில் ஆவேசமாக ஜதி சொன்னதும் இவரது குரல்தான்.

இளம் காதலனாக சிவன்குமார் என்கிற தெலுங்கு வாசனையுடன் கூடிய நடிகரை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். இவரைப் பற்றிய தகவல் ஏதும் இல்லை. அப்போதைய பெரும்பாலான இளம் நடிகர்களை எஸ்.என்.சுரேந்தரின் குரல்தான் காப்பாற்றியது. இவரும் அதற்கு விதிவிலக்கில்லை. இவரின் காதலியாக கோகிலா நடித்திருந்தார்.

வைதேகி காத்திருந்தாள் – டி.எஸ்.ராகவேந்திரா

காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒரு வில்லன் பாத்திரம் நிச்சயமாக வேண்டும். அந்தச் சேவையை இதில் ராதாரவி ஆற்றியிருந்தார். சலித்துப் போன வழக்கமான வில்லன் பாத்திரம் தந்தாலும் தன்னுடைய சுய ஆர்வத்தால் வித்தியாசமான ஒப்பனை மற்றும் உடல்மொழியில் வருவார் ராதாரவி. ஒரு நடிகருக்கு இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு உணர்வு இது. இதில் ‘வெள்ளிக்கிழமை ராமசாமி’ என்கிற பெயரில் பயங்கர வில்லனாக வந்து உடலைக் குலுக்கி வித்தியாசம் காட்ட முயன்றிருந்தாலும் எடுபடவில்லை. வில்லன்களுக்கேயுரிய கெட்ட வழக்கப்படி க்ளைமாக்ஸ் வந்ததும் திடீரென திருந்தி விடுகிறார். (ஒருவேளை அன்னிக்கு ஞாயித்துக்கிழமையோ?!)

‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’

ஒரு காலகட்டத்தின் தமிழ்த் திரைப்படங்களின் வெற்றிக்கு இளையராஜா எப்படி பிரதானமான காரணமாக இருந்தாரோ, அவ்வாறே கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் கூட்டணியும் இருந்தது என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்குப் பல திரைப்படங்களில் இவர்களின் காமெடி கூட்டணி கொடி கட்டிப் பறந்தது. மக்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு வருவதற்குப் பாடல்களும் நகைச்சுவையும் காரணமாக அமைந்தன.

இந்த வரிசையில் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தின் காமெடி டிராக்கை ஒரு ஸ்பெஷல் என்றே சொல்லலாம். ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ என்று இன்றைக்கும் கூட நாம் அன்றாட உரையாடலில் பயன்படுத்தும் வசனம் இதில்தான் வந்தது. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்கிற பெயரில் சைக்கிள் கடை வைத்திருப்பவராக அதகளம் செய்வார் கவுண்டமணி. ‘கோமுட்டி தலையா… சட்டித் தலையா…’ என்று வழக்கம் போல் செந்திலை விதம் விதமான வார்த்தைகளில் நக்கல் அடிப்பார். ‘இதுவாண்ணே மேன்டில்’ என்று கேட்டு அதை உடைத்துவிட்டு அப்பாவியாகப் பார்க்கும் செந்திலின் முகபாவத்தை மறக்கவே முடியாது. ‘கூடை வெச்சிருக்கறவங்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட் தர்றதில்லை’ என்று சூழலைச் சமாளிப்பார் கவுண்டர்.

வைதேகி காத்திருந்தாள்

‘ஒரே டென்ஷனா இருக்கு’ என்று செந்தில் சொல்ல ‘டேய்… எனக்கு டென்ஷனா இருந்தா, மல்லிகைப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு வீட்டுக்குப் போய் பொண்டாட்டி கிட்ட தருவேன். அப்புறம் என்ன ஒரே கிளுகிளுப்புதான்’ என்று கவுண்டமணி ஆலோசனை சொல்ல, அதை வேதமந்திரமாக எடுத்துக் கொள்ளும் செந்தில், நேராக கவுண்டரின் வீட்டிற்கே செல்வது சற்று ரசாபாசமாக இருந்தாலும் ரசிக்க வைக்கும் காமெடி. பிறகு கவுண்டமணி வந்து வேறு வழியில்லாமல் சமாதானம் செய்து செந்திலை அங்கிருந்து கிளப்பும் போது “ஏண்ணே… அவங்க வரலை?! என்று செந்தில் வெள்ளந்தியாகக் கேட்கும்போது வெடிச்சிரிப்பு கிளம்புவதைத் தவிர்ப்பது அத்தனை எளிதல்ல.

பாடகர் ஜெயச்சந்திரனின் மறக்க முடியாத குரல்

இந்தப் படத்தின் ஆறு பாடல்களும் ‘ஹிட்’. இளையராஜா எதை மனதில் வைத்து இந்தப் பாடல்களை உருவாக்கினாரோ தெரியவில்லை. ஆனால் ரெடிமேட் சட்டைக்குள் புகுந்து கொள்வதைப் போல, பாடல்களை வைத்து திரைக்கதையை எழுதி, வெற்றியையும் ஈட்டிய ஆர்.சுந்தர்ராஜனின் திறமையை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் இன்னொரு பக்கம் பார்த்தால், கதையின் தன்மைக்கு ஏற்ப பாடல் உருவாக்கப்படுவதுதான் முறை. ஆனால் இதில் உல்டாவாக நிகழ்ந்திருக்கிறது. இப்படியெல்லாம் இருந்தால் தமிழ் சினிமாவின் தரமும் நேர்த்தியும் எப்போதுதான் உயரும் என்கிற கேள்வியும் எழுகிறது.

எஸ்.பி.பி., – ஜானகி கூட்டணியைத்தான் பொதுவாக இளையராஜா அதிகம் பயன்படுத்துவார். ஆனால் இதில் வரும் பாடல்கள் சோகமான ராகங்களாக இருந்ததால் ஜெயச்சந்திரனைப் பயன்படுத்தினார் என்று தோன்றுகிறது. இந்த பாணியில் பாடுவதற்கு ஜேசுதாஸின் குரல் பொருத்தமானது என்றாலும் ஜெயச்சந்திரனின் குரல் தனித்துவமாகவும் கேட்பதற்குச் சுகமாகவும் இருந்தது. ‘ராசாத்தி உன்னை’, ‘காத்திருந்து’, ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ’ ஆகிய மூன்று பாடல்களைப் பாடி ஆல்பத்திற்கு சிறப்பு சேர்த்தார் ஜெயச்சந்திரன்.

வைதேகி காத்திருந்தாள்

‘ராசாத்தி உன்னை’ பாடலின் அதே மெட்டை இன்னொரு வடிவத்தில் பாடியிருந்தார் பி.சுசிலா. ‘மேகங் கருக்கையிலே’ பாடலை இளையராஜாவும் உமா ரமணனும் பாடியிருந்தார்கள். இதில் கோரஸையும் ஹம்மிங்கையும் ரசிக்கத்தக்க வகையில் அமைத்திருந்தார் ராஜா. ‘அழகு மலர் ஆட’ என்கிற கிளாசிக்கல் பாடலை அற்புதமாகப் பாடியிருந்தார் எஸ்.ஜானகி.

சினிமேட்டிக் தன்மை அதிகம் கொண்ட திரைக்கதை!

இசை, பாடல்கள், நகைச்சுவையைத் தாண்டி இதன் திரைக்கதையை ஓரளவிற்குச் சுவாரஸ்யமாக அமைத்திருந்தார் ஆர்.சுந்தர்ராஜன். ஆனால் சினிமாவிற்கேயுரிய தர்க்கமற்ற நாடகத் தருணங்கள் நிறைய இருந்தன. தங்களின் பிளாஷ்பேக்கைச் சொல்லும் போது ‘அவசரத்திற்கு தண்ணி கிடைக்காமத்தான் என் காதலி செத்தா’ என்று விஜயகாந்த் சொல்ல, ‘தண்ணி நிறைய இருந்ததால்தான் என் கணவர் இறந்தார்’ என்று ரேவதி சொல்வார். (இதையே படத்தின் ஒன்லைனாக இயக்குநர் சொல்லியிருக்கலாம்). கைம்பெண்ணான ரேவதிக்குக் கிடைக்கும் அதிர்ஷ்டப் பரிசில் ‘குங்குமச் சிமிழ்’ கிடைப்பது கிளிஷேவான சென்டிமென்ட் காட்சி.

விஜயகாந்த்தின் முறைப்பெண் சினிமாவிற்குச் செல்வதற்காகக் காசு கேட்க “முந்தானை முடிச்சு படமா? அது பார்க்கக்கூடாத படமாச்சே?’ என்று விஜயகாந்த் சொல்வது போல் ஒரு காட்சி வருகிறது. பாக்யராஜை ஏனோ ஜாலியாக வாரியிருந்தார் சுந்தர்ராஜன். ஆனால் அந்தப் படத்தில் வருவது போலவே, தவக்களையை நினைவுபடுத்தும் ஒரு துடுக்குத்தனமான சிறுவன் இதிலும் வருகிறான். ‘போங்கடி நீங்களும் உங்க கல்யாணமும்’ என்று அவன் திரும்பத் திரும்ப நாயகியிடம் சொல்லும் போதே, பின்னால் அது துயரமான வசனமாக வரப் போகிறது என்பதை எளிதில் யூகித்து விட முடிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சியில் நகர்ந்து போகும் சில உதிரிப்பாத்திரங்களுக்கு ஆர்.சுந்தர்ராஜனே வரிசையாக டப்பிங் குரல் தந்திருப்பதைக் கவனிக்க முடிகிறது.

கைம்பெண்ணின் துயரத்தையும் மனவலியையும் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் அதற்கான தீர்வையும் முற்போக்குத்தன்மையுடன் காட்டியிருக்கலாம். மாறாக “இந்தத் தாலி இனிமே உனக்குத் தேவைப்படாது” என்று விஜயகாந்த் மூலமாக ரேவதியிடம் சொல்ல வைத்திருப்பது நெருடல். மட்டுமல்லாமல், படத்தின் இறுதியில் ரேவதியின் உருவத்தை உறைய வைத்து கேள்விக்குறி போட்டிருப்பதற்கு மாறாக, இந்த வைதேகியையாவது வெள்ளைச்சாமியுடன் சேர்த்து வைத்திருக்கலாமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

வைதேகி காத்திருந்தாள்

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜராஜனைப் பற்றி தனியாகக் குறிப்பிட வேண்டும். இன்டோர் காட்சிகள் சற்று முன்னே பின்னே இருந்தாலும் அவுட்டோர் காட்சிகளை மிக அற்புதமாகப் படம் பிடித்தவர். இவரது கேமராவின் வழியே தெரியும் மலையருவி, வயல்வெளி, இயற்கைக் காட்சிகள் போன்றவை கூடுதல் அழகுடன் இருந்தன. விஜயகாந்த் மற்றும் ஆர். சுந்தர்ராஜனின் படங்களில் தொடர்ந்து பணிபுரிந்த இவர், பாலுமகேந்திராவிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தத் திரைப்படத்தின் வெளிப்புறக்காட்சிகள் பார்ப்பதற்கு அருமையாகவும் குளுகுளுவென்றும் அமைந்ததற்கு ராஜராஜனின் ஒளிப்பதிவு முக்கிய காரணம். ‘ராசாத்தி உன்னை’ பாடலில் அமைக்கப்பட்டிருக்கும் லைட்டிங் எல்லாம் இளம் ஒளிப்பதிவாளர்களுக்கான பாடம் எனலாம்.

இளையராஜாவின் பாடல்கள், பின்னணி இசை, விஜயகாந்த் மற்றும் ரேவதியின் நடிப்பு, கவுண்டமணி – செந்திலின் ரகளையான நகைச்சுவை, சுந்தர்ராஜனின் சுவாரஸ்யமான கதை சொல்லல் முறை போன்ற காரணங்களுக்காக இன்றைக்கும் கூட பார்த்து ரசிக்க முடிகிற வெற்றித் திரைப்படங்களுள் ஒன்று ‘வைதேகி காத்திருந்தாள்’.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours