Vijayakanth: "தான் சாப்பிடுகிற உணவுதான் எல்லோருக்கும்!"- தலைவாசல் விஜய் உருக்கம்

Estimated read time 1 min read

நடிகர் விஜயகாந்த் (71) இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.

அவரின் மறைவிற்கு திரையுலகத்தினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் விஜயகாந்துடன் பல படங்கள் நடித்தவரும், அவரின் நீண்ட கால நண்பருமான தலைவாசல் விஜய், விஜயகாந்தின் இறப்பு குறித்து வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.

தலைவாசல் விஜய்

கேப்டன் அவர்களை மறக்கவே  முடியாது. கிட்டத்தட்ட 20 வருட நட்பு. எப்போது பேசினாலும் முதல் நாள் பேசியதை அடுத்த நாள் பேசுவது மாதிரிதான் இருக்கும். 8 படங்களுக்கும் மேல் அவரோடு நடித்திருக்கிறேன். அது எல்லாமே நீங்காத நினைவுதான். அப்போது கேரவன் எதுவும் கிடையாது. அவரோடு சேர்ந்து உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக்கொண்டு இருப்போம். ஒரு சமூக நலத்திற்கான வீடியோவிற்காக நானும், நெப்போலியனும், அவரும் சேர்ந்து நடித்தோம். அப்போது நடித்த போது பழகிய குணத்தோடு தான் கடைசி வரை இருந்தார். அவரோடு நான் நடித்த கடைசி படம் ‘சகாப்தம்’. அவர் மகன் நடித்திருந்தார். கேப்டனோடு நானும் நடித்தேன்.

நட்பில் மாற்றமே இல்லாத மனிதர். தான் சாப்பிடுகிற உணவு எல்லோருக்கும் கிடைக்கிறதா என்று கண்காணித்துக் கொண்டே இருப்பார். சிவாஜி சார் இறந்த போது அவர்தான் அந்த இறுதி ஊர்வலத்தை சுமுகமாக நடத்த உதவினார். அவர் இல்லையென்றால் அதை இத்தனை பேரைக் கூட்டி அவ்வளவு அமைதியாகவும் பொறுப்பாகவும் நடத்தியிருக்க முடியாது.

விஜயகாந்த்

கார்கில் நிவாரண நிதிக்கு அவ்வளவு தூரம் இறங்கி வேலை செய்தார். அவர் உடல்நலம் குன்றி இருந்தார். சரி என்றைக்கு வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம் என்று நிறைவாக இருந்தேன். இன்று அவர் இறந்து விட்டதும் மனம் தாங்க முடியவில்லை. அவர் இல்லாத இடத்தை நிச்சயம் யாராலும் நிரப்ப முடியாது. அவர் பாணி நடிப்புக்கும், அவர் குணத்திற்கும் யாரும் ஈடாக முடியாது என்று நினைக்கிறேன். அவரைப் போல் என்று இனி யாரும் இல்லை. அதுதான் மிகப்பெரிய துயரம்” என்று வருத்தத்துடன் பேசினார் தலைவாசல் விஜய்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours