TTF டாஸ்க் என்பதற்குப் பதிலாக ரைமிங்கில் வேறு ஏதாவது பெயர் வைத்து விடலாம். அந்த அளவிற்கு பம்பரம் விடுதல், கோலி உருட்டுதல், காற்றாடி பறக்க வைத்தல் ரேஞ்சிற்குத்தான் ஆட்டங்கள் இருக்கின்றன.
கடந்த சீசன்களில் கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் இதைப் பார்த்தால் கண்ணீர் விடுவார்கள். அந்த அளவிற்கு சொகுசான ஆட்டங்கள். விசித்ராவிற்கு ஏற்ப டாஸ்க்குகளை அமைக்கிறார்களோ என்று கூட தோன்றுகிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘இந்த நொடிதானே வாழ்வை மாற்றுமே’ என்கிற பாடலுடன் நாள் 88 விடிந்தது. ஆனால் எந்த நொடியும் பிக் பாஸ் வீட்டை மாற்றவில்லை. அதே மாதிரிதான் சோம்பலாக கழிந்தது. பிரதீப்பின் வெற்றிடத்தை தான் நிரப்புவதாக விஷ்ணு நினைத்துக் கொண்டாரோ, என்னமோ ‘ஸ்ட்ராட்டஜி கிங்’காக மாறி ‘நான் சொல்றது புரியுதா. மொதல்ல அவனைத் தூக்கணும். அப்புறம்தான் இங்க வரணும்” என்று வில்லன் மாதிரியே விழித்திருக்கும் நேரமெல்லாம் திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்.
“டாஸ்க் இரண்டில் எல்லாமே லக்தான்” என்று மாயா சொல்ல “உங்க வெற்றிக்கு தினேஷ்தான் காரணம்” என்று குறுக்குச்சால் ஓட்டினார் பூர்ணிமா. “அப்ப நீ ஜெயிச்சதுக்கு விசித்ராதானே காரணம்?” என்று பதிலடி தந்தார் மாயா. என்னதான் நெருங்கிய தோழிகளாக இருந்தாலும் அவர்களுக்குள் நுட்பமாக ஒரு விரோதக்கோடு இருக்கும் என்பது ஒரு மரபு. உணவருந்தும் நேரத்தில் நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொண்டு ‘கப்பு அணி.. கலீஜ் அணி’ என்று துர்நாற்ற டாஸ்க்கை மறுபடியும் தூக்கிக் கொண்டு வந்தார் பிக் பாஸ். (யோவ் நாராயணா… பலே ஆளுய்யா நீ. அழுகின தக்காளியா இருந்தாலும் எப்படியாவது வித்துடறே?!).
திருப்பதிக்கே லட்டா? பூர்ணிமாவிற்கே புறணியா?
“வார இறுதியானா கண்ணைக் கசக்கிட்டு டிராமா பண்றாங்க. நாமினேஷன்ல இருந்து தப்பிச்சிடறாங்க” என்பதுபோல் பூர்ணிமாவைப் பற்றி மாயாவும் நிக்சனும் புறணி பேசிக் கொண்டிருந்த மாதிரி தெரிந்தது. (பூர்ணிமாவிற்கே புறணியா?!) முயல் ராஜா தனது ராஜதந்திரங்களைப் பற்றி மீண்டும் தினேஷிடம் விவாதித்துக் கொண்டிருந்தார். “இந்த வார நாமினேஷன்ல இருந்து நிக்சன் தப்பிச்சுட்டா என்ன பண்றது?” என்று விஷ்ணு கேட்க “டிக்கெட் மாயாவிற்கு கிடைச்சா கூட பரவாயில்லை. ஆனா பூர்ணிமா, நிக்சன்லாம் வந்தா டேன்ஜர்” என்றார் தினேஷ்.
மாயா மீது தினெஷிற்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது. ஆனால் விஷ்ணுவிற்கு இல்லை. “என் முதல் டார்கெட் நிக்சன்தான்.அடுத்தது பூர்ணிமா” என்று விஷ்ணு சொல்ல “உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறு ரூவாவ மறந்துடாதீங்க” என்பது மாதிரி “இதுல விசித்ராவை விட்டுடாதப்பா. மூணாவதா M. அதுக்காக V-ஐ சாதாரணமா விட்டுட முடியாது” என்று கோர்ட் வேர்டில் பேச ஆரம்பித்து விட்டார் தினேஷ்.
பிரதீப்பின் இடத்தைப் பிடிக்க விஷ்ணு அலைமோதுவது போல, வெளியே சென்ற ஐஷூவின் இடத்தை நிரப்புவதற்காக ‘உங்களில் யார் அடுத்த ஐஷூ’ என்கிற தேடலில் நிக்சன் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ‘அக்கா’ ‘தம்பி’ என்று பயணித்துக்கொண்டிருந்த நிக்சன் – பூர்ணிமாவின் உறவில் வேறு சில நிறங்கள் இணைந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. “என்னை அக்கான்னு கூப்பிடு” என்று சிணுங்கிக் கொண்டே கேட்கிறார் பூர்ணிமா. பிறகு அவர் நிக்சனின் மடியில் படுத்துக் கொள்ள, மாயாவும் கூட வந்து இணைந்து கொண்டார். (என்னடா நடக்குது இங்க?!)
குத்தினா கத்துவேன், கத்தினா குத்துவேன் – டாஸ்க் 3
மூன்றாவது டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ்.’குத்தினா கத்துவேன், கததினா குத்துவேன்’ என்பது மாதிரியான ஆட்டமாம் இது. Kill, Stay என்று இரண்டு கார்டுகளை வைத்துக் கொண்டு இருவர் பேச ஆரம்பிக்க வேண்டும். விவாதத்தின் இறுதில் ஒருவர் Kill கார்டை காட்டினால் ஆட்டத்திலிருந்து எதிராளி வெளியேற வேண்டும். Stay கார்டை காட்டினால் அடுத்த ரவுண்டில் தொடரலாம். வாதத் திறமையின் மூலம் வெல்ல வேண்டிய டாஸ்க் இது.
குலுக்கலின் மூலம் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டன.முதலில் வந்த இருவர் ரவீனா மற்றும் பூர்ணிமா. ‘அது வந்து என்னத்த நான் சொல்றது’ என்று வடிவேலு ஸ்டைலில் இழுத்து உரையாடலை ஆரம்பித்தார் ரவீனா. “போன ரெண்டு கேமும் நான் சரியா ஆடலை. இந்த கேமாவது ஆடணும். அதுக்காக வாய்ப்பு கொடுங்க” என்று விக்ரமின் பாணியில் கெஞ்ச ஆரம்பித்தார். (இதெல்லாம் ஒரு காரணமா?!). “உனக்கு எதுக்கு டிக்கெட்டு?” என்று குறுக்கே பக்கெட்டைப் போட்டார் பூர்ணிமா. (மணி ஜெயிச்சா நீ ஜெயிச்ச மாதிரிதானே?” என்று அதற்கு அர்த்தம்!).
“ஆரம்பக் கட்டத்துல நான் நம்பிக்கையில்லாம இருந்தேன். ஆனா இப்ப 13வது வாரத்திற்கே வந்துட்டேன். ஃபைனல் போனாதான் இது எனக்கு முழுமையாகும். அதனால நான் இருக்கணும்” என்று பூர்ணிமா சொல்ல “என்னக்கா.. நீங்க ஒரு வலிமையான போட்டியாளர். டிக்கெட் இருந்தாத்தான் உங்களால போக முடியுமா என்ன?” என்று ரவீனா ஒரு பிட்டைப் போட விவாதம் முடிந்தது. ரவீனா கில் கார்டைக் காண்பிக்க பூர்ணிமா ஸ்டே கார்டை காட்டி ஆச்சரியப்படுத்தினார். ‘ரவீனாவை நான் டார்கெட் செய்யவில்லை’ என்று முன்பு சொன்னதை இதன் மூலம் பூர்ணிமா நிரூபிக்க விரும்புகிறாரா என்று தெரியவில்லை. ஆக இந்தச் சுற்றில் பூர்ணிமா வெளியேறினார்.
அடுத்தது ஒரு சூப்பர் காம்பினேஷன். மணி – விஷ்ணு. “நீ மாயா, பூர்ணிமா பக்கம்லாம் போயிட்டு போயிட்டு வரே.. நீ தனியா ஆடறதே நல்லா இருக்குன்னு நானும் சொல்லியிருக்கேன்” என்று மணி ஆரம்பிக்க “மாயா எலிமினேஷன் கேம் ஆடறாங்க. டிஸ்ட்ராக்ட் பண்றாங்க” என்று விஷ்ணு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “ரெண்டு பேரும் ஸ்டே கார்டுதான் காட்டுவாங்க. என்ன பெட்?” என்று வெளியே மாயா சொன்னதுதான் பிறகு நடந்தது.
அடுத்து வந்தவர்கள் மாயா மற்றும் நிக்சன். “எனக்கு டிக்கெட் வெச்சுல்லாம் ஃபைனல் போகணும்ன்னு இல்ல. மக்கள் பார்த்து அனுப்பட்டும்” என்று ஆரம்பத்திலேயே சமிக்ஞை தந்து விட்டார் நிக்சன். “எனக்கும் தேவையில்லை. இந்த வாரம் போனா கூட திருப்தியா போயிடுவேன். மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. ஆனா தகுதியில்லாத சிலர் ஜெயிச்சிடக்கூடாது. தகுதியானவங்கதான் அடுத்த லெவலுக்கு போகணும். அதுக்கு உண்டான விஷயங்களை நீ பண்ணுவேன்னு நம்பிக்கையிருக்கு” என்று பேசிக்கொண்ட பிறகு இருவருமே ஸ்டே கார்டை காட்டினார்கள்.
அடுத்து வந்தது டெரரான காம்பினேஷன். விசித்ரா மற்றும் தினேஷ். இந்த ஆட்டத்தில் ஜெயிப்பதை விடவும் தினேஷின் டார்ச்சரில் இருந்து தப்பிப்பதற்கே விசித்ரா முன்னுரிமை தருகிறார். தன் இமேஜ் பற்றி கவலைப்படுகிறார். “நமக்குள்ள நிறைய கருத்து வேறுபாடு இருக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா நான் கேமை கேமாத்தான் பார்க்கறேன். பர்சனலா எந்த வெறுப்பும் கிடையாது” என்று தெளிவுப்படுத்தி பேச்சை ஆரம்பித்தார் தினேஷ். “எனக்கும் பர்சனலா ஒண்ணும் கிடையாது. ஆனா நீங்க ரொம்ப ஹர்ட் பண்றீங்க. தப்பா பேசறீங்க. எனக்கு டிக்கெட் முக்கியமில்ல. நீங்க சொல்றதையெல்லாம் வெளில இருக்கற மக்கள் உண்மைன்னு நெனக்கலாம்” என்று பேசினாலும் இருவருமே ஸ்டே கொடுத்துக் கொண்டார்கள்.
‘மாயா டைட்டில் வின்னர் – விசித்ராவின் கனவு
அடுத்த ஜோடி மாயா மற்றும் விசித்ரா. “எனக்கு டிக்கெட் ஜெயிக்கணும்ன்னு ஒண்ணுமில்லை. ஆனா சிலர் முயற்சியே எடுக்காம 13வது வாரம் வரைக்கும் வந்துட்டாங்க. தகுதியில்லாத அவங்களை எலிமினேட் பண்றதுக்கு நான் இருந்தாகணும்” என்கிற அதே பல்லவியைப் பாடினார் மாயா. “நீ ரொம்ப வலிமையான ஆட்டக்காரர். நீ டைட்டில் வின்னர்-ன்ற மாதிரி எனக்கு கனவுல்லாம் வருது” என்று பெரிய ஐஸ் பாரை தூக்கி வைத்தார் விசித்ரா. “கெட்ட கனவா?” என்று மாயா தந்த கவுன்ட்டர் அருமை. “நானும் சரியான ஆட்களைக் கண்டுபிடிச்சு களையெடுப்பேன்” என்று விசித்ரா வாக்கு தர “அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” என்று பேசி முடித்தார்கள். இறுதியில் மாயாவை டாஸ்க்கில் கொன்று அவரை வெளியே அனுப்பினார் விசித்ரா.
அடுத்து வந்தவர்கள் விஷ்ணு மற்றும் தினேஷ். (போங்கப்பா. போரடிக்குது!). “நான் பாயின்ட் லிஸ்ட்டில் லீட்ல இருக்கேன். எனக்கு ஸ்டே கொடுங்க” என்று விஷ்ணு ஆரம்பிக்க “தகுதியில்லாதவங்களை வெளிய அனுப்பணும்ன்னு சிலர் பேசறாங்க. எனக்கு சரியா வெற்றி கிடைக்கலை. நான் பெருந்தன்மையானவனும் கிடையாது” என்று தினேஷ் மல்லுக்கட்ட அவரைக் கொன்று வெளியே அனுப்பினார் விஷ்ணு. (என்னவொரு வில்லத்தனம்?!) கூடவே உட்கார்ந்து ஸ்ட்ராட்டஜி எல்லாம் பேசிட்டு, அவன் பொருளையே எடுத்து அவனையே போடும் விஷ்ணுவின் வில்லத்தனம் அருமை.
அடுத்ததாக வந்த ஜோடி மணி- ரவீனா. இதைப் பற்றியெல்லாம் விளக்கி நேரத்தை வீணாக்கவே வேண்டாம். ‘இனிமே நான் ஸ்ட்டிரிக்டா ஆடப் போறேன்” என்கிற மாதிரியான பாவனையை மணி செய்ய “நான் இனிமே சுயநலமா ஆடப் போறேன்” என்று மணியைக் கொன்றார் ரவீனா. ‘குத்தினவன் நண்பனா இருந்தா அதை வெளியே சொல்லக்கூடாது’ என்கிற சசிகுமார் தத்துவம் மாதிரி “வேற யாராவது கையால சாவறதை விடவும் உன் கையால சாவறதை பெருமையா நெனக்கறேன்” என்று மணி சென்ட்டிமென்ட்டாக பேச வெளியில் இருந்தவர்கள் தலையில் அடித்துக் கொண்டார்கள். “அப்படியே வெளில போயிடுங்க” என்று கிண்டலடித்தார் தினேஷ்.
அடுத்து வந்த நிக்சனும் விஷ்ணுவும் ஒருவரையொருவர் கொன்று “செத்து செத்து ஆடுவமா” என்கிற பாணியைப் பின்பற்றினார்கள். அடுத்து நடந்த சுற்றில் ரவீனாவைக் கொன்று இறுதி நிலைக்கு நகர்ந்தார் விசித்ரா. ஒருவழியாக இந்த கத்திக்குத்து ஆட்டம் முடிவுற்றது. “என்னால பிஸிக்கல் டாஸ்க்லாம் ஆடி ஜெயிக்க முடியாது. இது மாதிரி வந்தாதான் உண்டு” என்று பிறகு விசித்ரா சொன்னதும் ஒருவகையில் நியாயமே. ஆக டாஸ்க் மூன்றில் விசித்ராவிற்கு 3 பாயிண்ட்டுகளும், இரண்டாவது இடத்திற்கு வந்த ரவீனாவிற்கு 2 பாயிண்ட்களும், மூன்றாவது இடத்தில் வந்த விஷ்ணுவிற்கு ஒரு பாயிண்ட்டும் கிடைத்தது. ஸ்கோர் போர்டில் நிக்சனுக்கு இணையான இடத்தில் வந்து சேர்ந்தார் விஷ்ணு.
பல்பு வாங்கிய போட்டியாளர்கள் – ‘எப்புட்றா?’ – ஜெயித்த விஷ்ணு
அடுத்ததாக நிகழ்ந்த TTF டாஸ்க் 4-ல் ஜெயிப்பது சற்று கடினமானதுதான். சதுர வடிவில் நிறைய விளக்குகள் வரிசையாக இருக்கும். செல்போன் பாஸ்வோ்டு மாதிரி ஒரு பேட்டர்னில் விளக்குகளை எரிய விடுவார்கள். அதை கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். பிறகு அனைத்து விளக்குகளும் அணைந்து விடும். கவனத்தில் இருக்கும் விளக்குகளின் சுவிட்ச்களை ஆஃப் செய்ய வேண்டும். தூரத்தில் நின்று பார்க்கும்போது விளக்குகளை கவனம் வைத்துக்கொண்டாலும் அருகில் செல்லும் போது குழம்பி விடும். இரண்டு முறை ஹெல்ப் லைனை உபயோகிக்கலாம்.
முதலில் வந்த விஷ்ணு மிகவும் தவித்துப் போய் “இதை எப்படி ஆடறது?” என்று திகைத்து சீரியஸான முகத்துடன் ஆடினார். அடுத்து வந்த பூர்ணிமா “என்னதிது.. இதுல எப்படி ஜெயிக்க முடியும்” என்று நம்பிக்கையே இல்லாமல் அதிர்ஷ்டத்தை வைத்துக் கொண்டு ஆடினார். அடுத்து வந்தவர் தினேஷ். மற்றவர்கள் அனைவரும் இதை விட அதிகமாக சொதப்பினார்கள் போல. எனவே அவற்றைக் காட்டவில்லை. அனைவருமே நம்பிக்கையில்லாமல் அமர்ந்திருக்க முடிவுகள் வந்தன. தினேஷ் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். ‘ஒண்ணுமே புரியலை’ என்று சென்ற பூர்ணிமா இரண்டாம் இடத்தைப் பிடிக்க “அடிப்பாவி” என்கிற மாதிரி ஆச்சரியப்பட்டார் மாயா. முதல் இடம் விஷ்ணுவிற்கு என்று அறிவிக்கப்பட்ட போது ‘எப்புட்றா?” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் விஷ்ணு.
ஆக மொத்தம் ஏழு பாயின்ட்களைப் பெற்று ஸ்கோர் போர்டில் முதலிடத்தில் இருப்பவர் விஷ்ணு. அடுத்த எபிசோடில் நடக்கும் டாஸ்குகளின் மூலம் டிக்கெட்டைப் பெறும் அதிர்ஷ்டசாலி யாரென்று தெரிந்து விடும். அந்த டாஸ்க்குகளாவது சுவாரசியமாக இருக்குமா?
+ There are no comments
Add yours