எம்.ஜி.ஆர். அல்லது கமலைப் போல சிவப்பான அழகு கிடையாது. சிவாஜி அல்லது ரஜினி போன்ற நேர்த்தியான, சற்று வித்தியாசமான முகமும் இல்லை. நம்மில் ஒருவரைப் போல் சாதாரணமான தோற்றம். (ஏதோ கொஞ்சம் வெயிட் போட்டதுகூட அண்மையில்தான்!) ஒரு தொழிற்சாலையிலேயோ, அரசு அலுவலகத்திலேயோ, தனிப்பட்ட வியாபாரத்திலேயோ பார்க்கக்கூடிய முகங்களில் ஒன்று. கலரும் நல்ல கறுப்பு! ஆனால், இந்த முகம்தான் அண்மைக்காலமாக தமிழ்நாடு முழுவதிலும், பட்டிதொட்டிகளிலெல்லாம் போஸ்டர்கள் மூலமாகவும் ராட்சத பேனர்கள் மூலமாகவும் கம்பீரமாக நின்றவண்ணம் நம்மைப் பார்த்துப் புன்னகை புரிகிறது!
திரையுலகில் விஜயகாந்தின் வளர்ச்சி ஆச்சரியமானது. தன்னம்பிக்கைக்கும், கடுமையான உழைப்புக்கும் ஓர் உதாரணம்! 1986-ம் ஆண்டில் விஜயகாந்தை அவரது தி.நகர் அலுவலகம்-கம்-வீட்டில் சந்தித்தோம்.
பர்ணசாலை மாதிரி கூரை போட்ட ஓர் அறையில், தரையில் பாயை விரித்தபடி கையைத் தலைக்கு உசரம் வைத்தபடி படுத்திருந்தார் விஜயகாந்த். அந்த அறைக்குள் மூன்று திசைகளிலும், பெரிய சைஸில் விஜயகாந்த் படங்கள், ஓவியங்கள்.
காலை வேளையில் அரைத் தூக்கத்திலிருந்தவரை எழுப்பி உட்கார வைத்துப் பேச ஆரம்பித்தோம். செயற்கையாக இல்லாமல், இயல்பாகப் பேச ஆரம்பித்தார்.
‘‘என்னைப் பத்தி இந்த ஒன்பது வருடங்கள்ல, பல கோணங்கள்ல ஏராளமான செய்திகள் வந்திருக்கு. இப்ப படுத்துக்கிட்டிருந்தப்ப, புதுசா உங்களுக்குச் சொல்ல என்ன இருக்குன்னுதான் யோசிச்சுக்கிட்டிருந்தேன்…’’ என்று ஆரம்பித்தார். பிறகு தொடர்ந்து, ‘‘இப்ப எனக்குக் கிடைச்சிருக்கிற ஓரளவு 3 நட்சத்திர அந்தஸ்துக்கான உண்மையான காரணம் என்னவா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?’’ என்று நம்மைக் கேட்டார்.
+ There are no comments
Add yours