ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த அளவில் பேசப்பட்ட திரைப்படம் `தில்லு முல்லு’. கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினியை முழுக்க முழுக்க காமெடி பரிமாணத்தில் காட்டிய படம் அது. இரண்டு கெட்டப்புகளில் வித்தியாசம் காட்டி சிறப்பாக நடித்திருப்பார். கமல்ஹாசன், சாருஹாசன் உள்ளிட்டோர் அதில் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தனர்.
இந்த `தில்லு முல்லு’ படத்தின் மூலம் பரிச்சயமானவர்தான் மாஸ்டர் சந்திரசேகரன். அந்தப் படத்திற்குப் பிறகு வேறு சில படங்களிலும் நடித்திருந்தார்.
அவர் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு வயது 59.
`தில்லு முல்லு’ படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து ஏமாற்றுவதை கண்டுபிடித்து ரஜினிகாந்தை மிரட்டி பணம் பறிக்கும் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மாஸ்டர் சந்திரசேகரன்.
அவர் நடிகர் ரஜினிகாந்தை மீண்டும் ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கான முயற்சியில் இருந்த போது திடீரென தற்போது இயற்கை எய்திருக்கிறார். இது குறித்து அவரது மகன் கார்த்திக் பேசிய போது,
“அப்பாவுக்கு ரஜினி சாரை மீட் பண்ணனும்னு ரொம்ப ஆசை. நாங்களும் அதுக்கான முயற்சிகள் எல்லாமே செய்துட்டு இருந்தோம். ஏற்கெனவே உடல்நிலை பிரச்னை காரணமா மருத்துவமனையில் அட்மிட் பண்ணியிருந்தோம். கடைசி வரைக்கும் அப்பாவுடைய ஆசையை நிறைவேற்ற முடியாம போயிடுச்சு!” என்றார்.
அவரது இறுதிச்சடங்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று நடைபெற இருக்கிறது.
+ There are no comments
Add yours