2023ல் தமிழில் வரவேற்பு பெற்ற டப்பிங் படங்கள்
27 டிச, 2023 – 11:45 IST
நேரடித் தமிழ்ப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு அளவிற்கு டப்பிங் படங்கள் சிலவற்றிற்கும் வரவேற்பு கிடைப்பது வழக்கம். காலம் காலமாக சில டப்பிங் படங்கள் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளன.
அந்த விதத்தில் இந்த 2023ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த டப்பிங் படமாக ஹிந்தியிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வந்த ‘ஜவான்’ படம் அமைந்தது. சுமார் 40 கோடி வரை இந்தப் படம் தமிழகத்தில் வசூலித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பு ஷாரூக் நடித்து வெளிவந்த ‘பதான்’ படமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வசூல் செய்தது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரபாஸ் நடித்த ‘ஆதி புருஷ்’ படம் இங்கு வரவேற்பைப் பெறவில்லை, ஏமாற்றத்தையே தந்தது. சமீபத்தில் வெளியான பிரபாஸ் நடித்த ‘சலார்’ படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என தியேட்டர்காரர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.
தெலுங்கிலிருந்து தமிழில் டப்பிங் ஆன அனுஷ்கா நடித்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’, விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த ‘குஷி’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘குஷி’ படம் குறிப்பிடத்தக்க வசூலைக் கொடுத்தது.
மலையாளத்திலிருந்து டப்பிங் ஆகி வந்த படங்களில் ‘மாளிகப்புரம்’ படம் விமர்சன ரீதியாகவும், ஓரளவிற்கு வசூலைக் கொடுத்த படமாகவும் பாராட்டைப் பெற்றது. துல்கர் சல்மான் நடித்து வந்த ‘கிங் ஆப் கோத்தா’ ஏமாற்றத்தையே தந்தது.
கன்னடத்திலிருந்து டப்பிங் ஆகி வந்த ‘கப்ஜா’ படம் பெரும் ஏமாற்றத்தையே தந்தது.
அதே சமயம் தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியான படங்களில் “லியோ, ஜெயிலர், பிச்சைக்காரன் 2,” ஆகிய படங்கள் நல்ல வசூலையும், ‘வாரிசு’ படம் ஓரளவிற்கு வசூலையும் கொடுத்த படமாக அமைந்தது.
தமிழிலிருந்து பான் இந்தியா படமாக வெளியான “பொன்னியின் செல்வன் 2, ஜெயிலர், லியோ,’ ஆகிய படங்கள் ஹிந்தி வசூலில் ஏமாற்றத்தையே தந்தன. தமிழிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் ஆகும் படங்களால், தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் ஆகும் படங்களின் வசூலை இன்னமும் முறியடித்து சாதனை படைக்க முடியவில்லை என்பது இந்த ஆண்டிலும் தொடர்கிறது.
+ There are no comments
Add yours