எல்லா கதைகளும் பிரச்சினைகளாலும் அதனை உருவாக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களாலும் மட்டுமே சுவாரஸ்யம் பெறுகின்றன. ‘ஹீரோ’வை ஹீரோவாக்குவதே பலமான வில்லன் கதாபாத்திரம்தான். அவர்களின் அழுத்தமான நடிப்பு பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தி நாயகனுக்கான மைலேஜையும் திரைக்கதைக்கான ஆர்வத்தையும் கூட்டும். இப்படியிருக்கையில், தங்கள் நடிப்பால் வில்லன் கதாபாத்திரங்கள் ஹீரோவை ஓவர்டேக் செய்த சம்பவங்கள்தான் 2023-ன் ஹைலைட்ஸ். அப்படியான கதாபாத்திரங்கள் உள்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மற்ற வில்லன் கதாபாத்திரங்களையும் பார்ப்போம்.
சரத்பாபு: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘போர்தொழில்’ படத்தில் மறைந்த நடிகர் சரத்பாபுவின் ’கென்னடி’ கதாபாத்திர என்ட்ரியே ஆச்சரியத்தை கொடுத்தது. மர்மமாக இருக்கும் அவரது கதாபாத்திரம் கதைக்கான சுவாரஸ்யத்தை கூட்டும். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருப்பது, உரையாடல்களில் ட்விஸ்ட் வைத்து பேசுவது, அச்சுறுத்தும் முக பாவனைகள், எதிர்வினைகள், ஒரு கட்டத்தில் ஆக்ஷனில் இறங்குவது என நடிப்பில் மிரட்டியிருப்பார். வில்லன் நடிகர்களுக்கான வழக்கத்திலிருந்து மாறுப்பட்ட சரத்பாபுவின் கதாபாத்திரமும், நடிப்பும் 2023-ம் ஆண்டின் முக்கியமான வில்லன் பாத்திரங்களுள் ஒன்று. அதேபோல இறுதியில் வில்லனாக வரும் சுனில் சுகாடாவின் நடிப்பும் கவனிக்க வைத்தது.
விநாயகன்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு இணையான பர்ஃபாமென்ஸை கொடுத்திருந்தார் விநாயகன். உடல்மொழியும், நடையும், மலையாளம் ஒட்டிய பேச்சும், மிரட்டும் தொனியும், ‘வர்மன்’ கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பார். அவருடைய வில்லன் கதாபாத்திரத்தினால் தான் ரஜினிக்கான மாஸ் காட்சிகள் கூடுதல் பலம் பெற்றிருக்கும்.
2023-ஆம் ஆண்டின் தமிழ் சினிமாவில் தனித்துவமான வில்லன்களில் ஒருவராக விநாயகன் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். மீம்களுக்கு இந்த ஆண்டு தீனி போட்டதில் விநாயகனுக்கும் பெரும் பங்கு உண்டு.
ஃபஹத் பாசில்: இந்த ஆண்டின் ஹீரோவைத்தாண்டி புகழப்பட்ட வில்லன் நடிகர்களில் ‘மாமன்னன்’ படத்தின் ஃபஹத் பாசிலின் ரத்னவேல் கதாபாத்திரமும் ஒன்று. மாரிசெல்வராஜ் உருவாக்கிய கதாபாத்திரத்தில் பக்கா உள்ளூர் அரசியல்வாதியாக ‘ஈகோ’வை விட்டுக்கொடுக்காமல் உதயநிதிக்கும் – வடிவேலுக்கும் டஃப் கொடுத்திருப்பார் ஃபஹத். இடையில் சில தவறான புரிதல்களால் அவரது கதாபாத்திரம் மீம்ஸ்களாக புகழப்பட்ட சம்பவம் நடந்தது.
ஒருபுறம் வில்லனாக மிரட்டினாலும், மனைவியிடம் சரணடையும் இடத்தில் ‘கல்லுக்குள் ஈரம்’ எனவும் புகழப்பட்டார். மறுக்க முடியாத வகையில் இந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் வில்லனை ரசிக்க வைக்கும் மெட்டிரியலாக மாற்றியவர் ஃபஹத் பாசில்.
எஸ்.ஜே.சூர்யா: அதேபோல ஹீரோவை தனது நடிப்பில் மிஞ்சிய மற்றொரு வில்லன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. ‘மார்க் ஆண்டனி’ படத்தில் ஜாக்கி பாண்டியன் மற்றும் மதன் பாண்டியன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் ரசிக்க வைக்கும் நடிப்பில் திரையரங்கை அதிரவைத்தார். ஓவர் பர்ஃபாமென்ஸ் என சொன்னாலும் அது தான் எஸ்.ஜே.சூர்யாவின் ஸ்டைல்.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை மீட்டுருவாக்கம் செய்த காட்சியில் எஸ்.ஜே.சூர்யாவின் நடனம், அவரின் உடல்மொழி, நகைச்சுவை என திரையரங்கை திருவிழாக்கோலம் பூண்ட வைத்த வில்லனாக 2023-ல் முத்திரை பதித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=ptzMKOD6j-Y
தவிர இந்த ஆண்டில் கவனிக்க வைத்தது ‘மாவீரன்’ படத்தில் வரும் மிஷ்கினின் ‘ஜெயக்கொடி’ வில்லன் கதாபாத்திரம். அரசியல்வாதியாக அவர் கோவம் கொள்ளும் இடங்கள், அவமானப்பட்டு பழிவாங்க துடிக்கும் ரசிக்கும்படியான பர்ஃபாமென்ஸ் கைகூடியிருக்கும். கிட்டத்தட்ட ‘லியோ’ படத்திலும் ‘சண்முகம்’ சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதனை தனக்கே உண்டான ஸ்டைலில் ரசிக்க வைத்திருப்பார் மிஷ்கின்.
பார்வையாளர்களின் கோபத்துக்கு ஆளான ‘சித்தா’ பட வில்லன் தர்ஷன் நடிப்பும் அவரது அழுத்தமான கதாபாத்திரமும் கவனிக்க வைத்தது. ‘பார்க்கிங்’ படத்தில் ‘இளம்பரிதி’ கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் ஈகோ கலந்த அழுத்தமான வில்லத்தனம் அட்டகாசம்.