Bigg Boss 7 Day 85: பிக் பாஸையே எதிர்த்து நின்ற பூர்ணிமா; ஓப்பன் நாமினேஷனில் நடந்த கலவரங்கள்!

Estimated read time 1 min read

குடும்பச் சந்திப்பு காரணமாக போட்டியாளர்களுக்குள் கடந்த வாரம் ஓடிய அன்பு நதியும் பாச ஆறும் ஒரே நாளில் வறண்டு போய் பிக் பாஸ் வீடு மீண்டும் பாலைவனமாகி விட்டது. எங்கு திரும்பினாலும் பகைமையின் வெப்பம். விரோதத்தின் புகைச்சல். ஆக பிக் பாஸ் வீடு ‘நார்மல் மோடிற்கு’ வந்துவிட்டது என்று அர்த்தம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

விக்ரம் வெளியேறிய போது மாயா செய்த அநாகரிகமான புறக்கணிப்பு பற்றி மணி ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டிருக்க, அதை விஷ்ணு ஆமோதிக்கும் காட்சி தொடர்ந்து கொண்டிருந்தது. “விக்ரம் கண்ல தண்ணி வராத குறையா சொல்றான். மாயா அந்தளவிற்குப் பின்னாடி பேசியிருக்காங்க. வீட்ல வந்து சொன்னப்புறம்தான் அவனுக்குத் தெரிஞ்சது” என்று மணி சொல்ல, “மாயா கிட்ட நேர்மையே கிடையாது. போகிற போதாவது சரியா வழியனுப்பி வெச்சிருக்கலாம்” என்றார் விஷ்ணு.

இன்னொரு பக்கம் இதே விஷயத்திற்கு மாயா விளக்கம் தந்து கொண்டிருந்தார். “விக்ரமை கரப்பான்பூச்சின்னு இங்க இருக்கறவங்க நிறைய பேரு சொல்லியிருக்காங்க. அவனை ரொம்ப அன்பா நேசிச்சேன். நேரடியா வந்து பேசியிருக்கலாம். அவனுக்குச் செஞ்சதை சொல்லிக் காட்ட விருப்பவில்லை. அவனை நாமினேஷன்ல இருந்து காப்பாத்தியிருக்கேன். அவங்க தங்கச்சி வந்து பேசினது பிடிக்கவேயில்லை. மனசே உடைஞ்சு போச்சு. அதனாலதான் அவன் கிளம்பும் போது எனக்கு ஃபீலே ஆகலை” என்றார் மாயா.

Bigg Boss 7 Day 85

“மணியும்தான் விக்ரமை ‘செட் பிராப்பர்ட்டி’, ‘இங்க விக்ரம் நீடிக்கறதுக்கு அதிர்ஷ்டம்தான் காரணம்’ன்னுலாம் சொல்லியிருக்கான்” என்றார் பூர்ணிமா. “எனக்கு அவன் செஞ்சதை துரோகமா பார்க்கறேன். வெளில போகும் போது என்னைக் கட்டிப்பிடிச்சு ‘சாரி சொல்றான்’ என்று மாயா அனத்த, “ரெண்டு பேரும் உக்காந்து பேசியிருந்தா கிளாரிட்டி கிடைச்சிருக்கும்” என்று இறுதியில் பூர்ணிமா சொன்னதுதான் ஒருவகையில் இதற்கான சரியான தீர்வு.

பிக் பாஸிற்கு எதிராக பூர்ணிமா எழுப்பிய கலகக் குரல்

நாள் 85. ‘நட்புக்குள்ளே பிரிவொன்று வந்தது, ஏன் என்று அது தெரியவில்லை’ என்கிற பாடலை ‘வேக் அப்’பிற்கு போட்டிருக்கலாம். ஆனால் என்ன போட்டார்களோ?! தெரியவில்லை. ‘நீங்கள் பிரதமரானால்’ என்று பள்ளிக்கூட காலத்தில் எழுதிய கட்டுரை போன்று ஒரு டாஸ்க்கை பிக் பாஸ் தந்தார். ‘‘நீங்கள் டைட்டில் வின்னர் ஆனால் மேடையில் உங்களின் உரை எப்படியிருக்கும்? – இந்த நோக்கில் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும். எதிர்ப்பாக இருந்ததாலேயே என் வெற்றிக்குக் காரணமாக இருந்தார் என்று சிலரையும் சொல்ல வேண்டுமாம்.

முதலில் வந்த மாயா, “நான் சில படத்துல ஜூனியர் ஆர்டிஸ்ட்டா நடிச்சிருக்கேன். அவங்க சார்பா இங்க வந்திருக்கேன். அவங்களாலயும் வந்து விளையாடி ஜெயிக்க முடியும். முதல்ல நான் எனக்கே நன்றி சொல்லிக்க விரும்பறேன். இங்க நட்பு முதற்காெண்டு உண்மையா இருந்திருக்கேன். நேர்மையா விளையாடியிருக்கேன். விசித்ரா மேமிற்கு ஒருவகையில் தாங்க்ஸ் சொல்லணும். ஒரு விஷயத்தில் ஒரு பெரிய அடி கிடைச்சது. அதை நீங்க ஹேண்டில் பண்ணது அத்தனை அழகு. பெரிய பாடம் கிடைச்சது. அதுக்கப்புறம் நாம நிறைய பேசியிருக்கோம். நன்றி” என்ற மாயா, ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ பாடலின் சில வரிகளை பாடி விட்டுச் சென்றார்.

Bigg Boss 7 Day 85

அடுத்து வந்தவர் பூர்ணிமா. உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே இல்லாத ஒரு சம்பவம் இப்போது நடந்தது. “அந்தப் பொண்ணு துணிச்சலானவதான்” என்று விசித்ரா பிறகு சொல்லும்படியான ஒரு விஷயத்தைச் செய்தார் பூர்ணிமா. ஆம், இத்தனை சீசன்களின் வரலாற்றில் பிக் பாஸை எவருமே நேரடியாகக் குற்றம் சாட்டியதில்லை. கோக்குமாக்கான டாஸ்க் தரும் போது மனக்குமுறலை ஒளித்துக் கொண்டு பிக் பாஸிடம் ஜாலியாக கமெண்ட் அடிப்பார்கள். அவ்வளவே!

இந்த நாடகத்தின் பின்னணியில் உள்ள சூத்ரதாரி பிக் பாஸ்தான். அவர் தரும் நெருக்கடியான சூழல்களால்தான் போட்டியாளர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள், புறணி பேசுகிறார்கள், வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஒருவகையில் பிக் பாஸின் சதியை முறியடிப்பதுதான் இந்த ஆட்டமே. ஆனால் இதுவரை பெரும்பாலும் அனைவரும் தங்களுக்குள் குற்றம் சாட்டிக் கொண்டு கொலைவெறியுடன் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, காரணமாக இருக்கும் மூலவரை நோக்கி குற்றம் சாட்டும் துணிச்சல் எவருக்கும் வந்ததில்லை.

பிக் பாஸூம் கமலும் இந்த ஆட்டத்தின் அதிகார மையங்கள். அவர்களை எதிர்த்து சட்டென்று எவரும் பேசிவிட முடியாது. எனவே அது குறித்தத் தன்னிச்சையான தயக்கமும் அச்சமும் உள்ளுக்குள் எல்லோருக்கும் உறைந்திருக்கும். ‘இவரே பாம் வைப்பாராம், இவரே எடுப்பாராம்’ என்பது போல, நெருக்கடிகளில் தள்ளி போட்டியாளர்களைச் சறுக்க வைக்கும் வேலையை பிக் பாஸ் பார்த்துக் கொள்ள, பிறகு நீதிமானாக கமல் வந்து பஞ்சாயத்து பேசுவார். கமலோ, பிக் பாஸோ ஒருவரையொருவர் உரசிக் கொள்வதில்லை. அவர்களுக்கு இந்த நாடகத்தின் சூட்சுமம் தெரியும்.

பிரிவினைவாத சூழ்ச்சிகளை எப்போது நாம் அறிந்து கொள்வோம்?

போட்டியாளர்கள் தங்களுக்குள் உக்கிரமாக மோதிக் கொள்வார்களே ஒழிய, ஒரு கணம் நிதானித்து ‘பிக் பாஸ்தானே இதற்கெல்லாம் காரணம்? நாம் ஒற்றுமையாக இருந்து அவரின் சதியை முறியடிப்போம்’ என்று ஒருவருக்கும் தோன்றியதில்லை. தோன்றினாலும் வெளிப்படுத்தியதில்லை. ‘Divide and rule’ என்கிற பாலிசி இங்கும் வெளிப்படுகிறது. ‘வேடன் விரித்த வலையில் மாட்டிக் கொண்ட பறவைகள், ஒன்றாகச் சேர்ந்து பறந்து தப்பித்தன’ என்கிற கதையை நான் சில முறை இங்கு மேற்கோள் காட்டியிருக்கிறேன். இந்த ஒற்றுமை உணர்வு பிக் பாஸ் வீட்டிற்கு மட்டுமல்ல. இதை விடவும் வெளியில்தான் அதிகமாகப் பொருந்தும். மக்களைப் பிரித்தாள சாதி, மதம் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை அதிகார சக்திகள் மிக நுட்பமாகப் பயன்படுத்துகின்றன. அதைப் புரிந்து கொண்டு அந்தச் சதிகளில் இருந்து வெளியேறுவதுதான் புத்திசாலித்தனமே ஒழிய, அதில் மாட்டிக் கொள்வதல்ல.

Bigg Boss 7 Day 85

இப்படியொரு சூழலில் பூர்ணிமா எழுப்பிய இந்தக் கலகக்குரல் மிக அபூர்வமானது. துணிச்சலானது. பாராட்ட வைப்பது. “ஏன் அப்படியெல்லாம் பேசினே” என்று விஷ்ணு பிறகு தலையில் அடித்துக் கொண்டாராம். இது பிக் பாஸ் மீதான குற்றச்சாட்டு மட்டுமல்ல, மறைமுகமாக கமலை நோக்கியும் சொல்லப்பட்டது.

பூர்ணிமா பேசியது, “அன்னிக்கு என்ன தோணுதோ அதைப் பேசுவேன். இன்னிக்கு இதை டாஸ்க்கா கொடுக்கறதால, இதை உபயோகித்து சில விஷயங்கள் சொல்றேன். இந்த வீட்டில் நான் பல முறை உடைஞ்சப்போ ஆறுதலா இருந்தது மாயாதான். அவருக்கு நன்றி. ஆனா எதிர்ப்பா இருந்தது யாருன்னு பார்த்தா (தயக்கமான சிரிப்பு) அது பிக் பாஸ்தான். இந்த வீட்டில் மத்தவங்களை விட நிறைய இடத்துல என்னை டவுன் ஆக்கினது நீங்கதான். எத்தனையோ முறை ‘என்னை கன்ஃபெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க’ன்னு சொல்லியும் நீங்க கூப்பிட்டதில்லை…”

“விக்ரமை கரப்பான்பூச்சின்னு சொன்னதுக்கு வாய்ஸ் அவுட் பண்ணச் சொன்னாங்க. அப்ப நானும் வாய்ஸ் அவுட் பண்ணியிருக்கணும். நாங்க சொன்னது bullying-ன்னா… என்னோட விருப்பமே இல்லாம என் தலைல ‘தவளை’ன்னு பட்டப்பெயரை இரண்டு நாளா நீங்க மாட்ட வெச்சதும் bullyingதான். நான் செஞ்சதுக்கு சாரி கேட்டுட்டேன். பிக் பாஸ் தடையா இருந்தும் இந்த கப்பை நான் ஜெயிச்சிருக்கேன்” என்று சொல்லி முடித்தார் பூர்ணிமா. இத்தனை துணிச்சலாக பூர்ணிமா பேசுவதை மாயா பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்களுக்கும் பூர்ணிமா பேசியதில் ஒப்புதல் இருந்திருக்கும். ஏனெனில் அவர்களின் உள்ளக்குமுறல் அது.

தான் செய்யும் சிறந்த விஷயங்கள் வெளியில் காட்டப்படுகிறதா, இல்லையா, சறுக்குகிற இடங்கள் மட்டும்தான் காட்டப்படுகிறதா என்கிற சந்தேகம் பூர்ணிமாவிற்கு நீண்ட நாள்களாக இருப்பதைப் போலவே நமக்கும் உண்டு. இந்தப் பகுதியை எடிட் செய்யாமல் ஒளிபரப்பிய பிக் பாஸின் ‘ஒருவகையான’ நேர்மைக்கும் பாராட்டு. ‘விக்ரம் போய் பெட்ரூம் கதவைச் சாத்திட்டு வாங்க’ என்று தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சிலமுறை விக்ரமை பிக் பாஸ் சங்கடப்படுத்தியிருக்கிறார். இதனால் மற்றவர்களின் பார்வையில் விக்ரம் இன்னமும் தாழ்ந்து போவார். இந்தவகையில் பிக் பாஸ் செய்ததும் bullyingதான். இந்தக் கட்டுரைத் தொடரில் அது தொடர்பான ஆட்சேபம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Bigg Boss 7 Day 85

பூர்ணிமாவின் துணிச்சலை விமர்சனத்துடன் பாராட்டிய விசித்ரா

பூர்ணிமாவின் பேச்சில் இருந்த துணிச்சலைப் பிறகு ரவீனாவிடம் பாராட்டிக் கொண்டிருந்த விசித்ரா, கலவையான கருத்துகளைச் சொன்னார். “பூர்ணிமா கிட்ட ஒருவகையான திறமை இருக்கு. ஆனா டாஸ்க்ல செஞ்சுட்டு நீங்க பண்ணதால நானும் பண்ணேன்னு சொல்லக்கூடாதுல்ல. எதிர்ப்பை அப்பவே தெரிவிச்சிருக்கணும். ஆனா பிக் பாஸையே திங்க் பண்ண வெச்சிட்டாள்ல. நாம ஒண்ணா சேர்ந்து அந்தப் பட்டப் பெயர்களை போட மறுத்திருக்கணும். அந்தப் பெயர் வெளிலயும் போகுமில்லையா?” என்று விசித்ரா பேசியதிலிருந்து பூர்ணிமாவின் பேச்சு மற்றவர்களையும் சிந்திக்க வைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

இனி மேலாவது போட்டியாளர்களை மலினமாக அவமானப்படுத்தும் டாஸ்க்குகளை பிக் பாஸ் நிறுத்திக் கொள்வாரா? நிச்சயம் மாட்டார். அதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படையே.

போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப மூன்று நபர்களைத் தேர்வு செய்யச் சொன்னார் பிக் பாஸ். இந்த வாக்கெடுப்பில் வழக்கம் போல் விசித்ராவிற்கும் தினேஷிற்கும் இடையில் கடுமையாக முட்டிக் கொண்டது. தன் பெயரை இழுத்தாலே, அதற்கு உடனே தகுந்த பதிலடி தர வேண்டும் என்கிற கொலைவெறியில் தினேஷ் எப்போதும் கொதிநிலையில் இருக்கிறார். உரசலும் கலகலப்புமாக இந்த வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. இறுதியில் விசித்ரா, மணி, ரவீனா ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ‘தனக்கு ஒரு வாலண்டியர் தேவை’ என்று விசித்ரா கேட்டுக் கொண்டதை பிக் பாஸ் ஏற்றுக் கொண்டார். எனவே நான்காவது ஆளாக இணைந்து கொண்டார் விஷ்ணு.

‘சின்ன வீட்டிற்கு யார் செல்வது?’ என்கிற வாக்கெடுப்பில் அர்ச்சனாவிற்கும் ரவீனாவிற்கும் இடையில் சிறிய முட்டல் நிகழ்ந்தது. தன்னுடைய ஒரு வேலைக்காகப் பலரையும் வேலை வாங்கும் அர்ச்சனாவின் வழக்கத்தைப் பற்றி ரவீனா குறிப்பிட அதை கடுமையாக ஆட்சேபித்தார் அர்ச்சனா.

Bigg Boss 7 Day 85

ரவீனாவின் விளக்கமும் அர்ச்சனாவின் முரட்டுப் பிடிவாதமும்

பிறகு இது தொடர்பாக ரவீனா சென்று அர்ச்சனாவிடம் தனியாகப் பேசினார். “ஒரு சின்ன விஷயத்துக்கு கூட நீங்க மற்றவங்களை ஏவி வேலை செய்ய வைக்கறீங்க” என்று ரவீனா சொல்ல, அதற்கு அர்ச்சனா தந்த எதிர்வினைகள் சிறுபிள்ளைத்தனமாக இருந்தன. “இந்த வீட்ல மத்தவங்களுக்குல்லாம் சிலர் ஹெல்ப் பண்றதை நான் பார்த்திருக்கேன். எனக்கு அப்படி யாராவது ஹெல்ப் பண்ணா பிடிக்கும். சமையல்ல போயிட்டா ஆர்வக் கோளாறு வந்துடும். அடுப்பைப் பத்த வெச்ச பிறகு ஒரு பொருள் தேவைப்பட்டா மத்தவங்களை கூப்பிடுவேன்” என்று அர்ச்சனா சொல்ல, “இல்ல அடுப்பைப் பத்த வெக்கறதுக்கு முன்னாடியே மத்தவங்களை கூப்பிட்டு எடுக்கச் சொல்றீங்க” என்றார் ரவீனா.

“விருந்தினர்களின் குழந்தைகள் வந்த போது அவங்க கூட நீங்க விளையாடினது ஒகே. ஆனா அவங்க கிட்ட என்னைக் காண்பிச்சு பயமுறுத்தினீங்க. அதனால அவங்க என்கிட்ட வரலை. இந்த விஷயம் எனக்கு ஹர்ட் ஆச்சு” என்றார் ரவீனா. இது என்னமோ சொல்ல வேண்டுமே என்கிற புகார் போலத்தான் தோன்றுகிறது. இதற்கும் எதையோ சொல்லி சமாளித்தார் அர்ச்சனா.

ரவீனா சென்ற பிறகு, “நீ பண்றதெல்லாம் தப்புன்னு உனக்கே தெரியலையா? நீ வீட்ல உன் சிஸ்டர் கிட்ட அப்படி வேலை வாங்கி பழகியிருப்பே போல. அதையே இங்கயும் எதிர்பார்த்தா எப்படி?” என்று விசித்ரா கேட்க ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்னும் படியாகச் சாதித்து அழுதார் அர்ச்சனா. “அப்படி வேலை வாங்கறதும், அவளைத் திட்டறதும் ஒருவகையான லவ்தான். அந்த மாதிரிதான் நான் அன்பு காட்டுவேன். அவளை நான் கொடுமைப்படுத்தல. என்னோட லவ் லேங்வேஜ் டிப்ரண்ட்” என்றெல்லாம் அர்ச்சனா சொல்லும் சால்ஜாப்பை எப்படிப் புரிந்து கொள்வது? ஒருவரிடம் வேலை வாங்குவதற்குப் பெயரா அன்பு?!

“இனிமேல் எல்லாம் யாருக்கும் பயப்படக்கூடாது. கொஞ்ச நாள்தான் இருக்கு. அடிச்சு விளையாடுங்க” என்று அர்ச்சனாவின் அழுகைப் பற்றி விஷ்ணு சொல்ல, “அவங்க அழுவாங்கன்னு நெனச்சே அவங்க கிட்ட எதையும் சொல்ல பயமா இருக்கு. நம்ம போற போது அப்படியே ஒரு பொருளை எடுத்துட்டு வரச்சொன்னா கூட அது ஓகே. ஆனா இவங்க அப்படியே உக்காந்துக்கிட்டு, உக்காந்திருக்கிற நம்மளை போய் எடுத்துட்டு வரச் சொல்றாங்க” என்று சிரித்தார் ரவீனா. அர்ச்சனாவின் இந்தப் பழக்கம் பற்றி பலரும் குறை சொல்லி, விசாரணைக்கும் வந்து அர்ச்சனாவும் அதை ஒப்புக் கொண்டார். எனில் “ஆமாம்… எனக்கே அது தெரியலை. பழக்கமாயிடுச்சு போல. மாத்திக்கறேன்” என்று சொல்வதுதான் சரியான அணுகுமுறை. மாறாக அதை இன்னமும் பிடிவாதமாகச் சாதிப்பது அழும்பு.

Bigg Boss 7 Day 85

ஓப்பன் நாமினேஷனில் வெடித்த சண்டைகள்

“ஓகே… 13வது வார நாமினேஷனுக்கு வருவோம். சரியான காரணங்களுடன் இரண்டு பேரை நாமினேட் செய்யுங்க. பிளாஸ்மா டிவிக்கு முன்னாடி வாங்க” என்று பிக் பாஸ் சொன்ன பிறகுதான் அது ஓப்பன் நாமினேஷன் என்று மற்றவர்களுக்குப் புரிந்து சற்று அதிர்ச்சியானார்கள். இதில் இரண்டு குழுக்களும் ஒருவரின் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டு நாமினேட் செய்ததை அப்பட்டமாக காண முடிந்தது.

ரவீனா மொத்தப் பணத்தையும் மணிக்குத் தந்தது தவறு என்றால் விஜய்யும் நிக்சனும் அதையே செய்தது தவறு என்று குற்றம் சாட்டப்பட்டது. விக்ரம் வெளியேறிய போது பாராமுகமாக இருந்து வெறுப்பைக் காட்டிய மாயாவின் செயலும் சிலரால் சுட்டிக் காட்டப்பட்டது. ‘மணியும்தான் விக்ரமை நிறைய கிண்டல் செய்திருக்கிறார். மாயா – விக்ரம் விஷயத்தில் என்ன நடந்தது என்று தெரியாமலேயே அவர் பேசக்கூடாது’ என்று மணியின் மீது பூர்ணிமா குற்றம் சாட்டினார்.

‘மாயாவின் செயல் பற்றி மணி மற்றவர்களிடம் பேசியதின் மூலம் சிலரிடம் செல்வாக்கு செலுத்தி நாமினேஷன் செய்ய வைத்து விட்டார்’ என்று நிக்சன் குற்றம் சாட்டினார். “விக்ரமிடம் உங்களை விட நான் அதிக வாரங்கள் பழகியிருக்கேன். அன்பு காட்டியிருக்கேன். என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா. இப்படியொரு கேவலமான நாமினேஷனை நான் பார்த்ததில்ல” என்று வெடித்தார் மாயா. “மத்தவங்க எமோஷனை வெச்சு வெளையாடறதே மாயாவின் பழக்கம்” என்று விஷ்ணு குற்றம் சாட்ட இருவருக்கும் முட்டிக் கொண்டது.

இறுதியில் இந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள்: மாயா, நிக்சன், தினேஷ், மணி, ரவீனா, விஜய் மற்றும் விஷ்ணு.

மாயாவின் செயல் பற்றி நாமினேஷன் முடிந்த பிறகும் அர்ச்சனா வந்து பேச “இந்,த விஷயத்துல என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா. விக்ரம் மீது எனக்கு அன்பு இருக்கு. ஆனா அவன் எனக்கு பண்ணது துரோகம். நான் எப்படி நடந்துக்கணும்னு நீங்க சொல்லக்கூடாது” என்று அர்ச்சனாவிடம் வெடித்தார் மாயா.

இந்த நாமினேஷன் காரணங்களில், மாயா காட்டிய வெறுப்பும் புறக்கணிப்பும் ஒரு முக்கிய காரணியாக இருந்தது.

Bigg Boss 7 Day 85

மாயா வெறுப்பைக் காட்டியது தவறுதான். ஆனால் அதை நாமினேஷனில் காரணமாகக் காட்டுவது முறையானதல்ல. ஏனெனில் அது ஆட்டத்தின் போக்கை மாற்றும் விஷயமல்ல. இது போல மணியின் ஆதங்கம் எந்தவொரு மனிதனும் செய்யும் விஷயம்தான். அதில் தவறேயில்லை. இதை மணி பொதுவில் பேசியதால் நாமினேஷனில் அது எதிரொலித்தது என்று நிக்சன் சொல்வதும் அபத்தமானது. இப்படி இரண்டு காரணங்களுமே ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன.

‘தேவா… நட்புன்னா என்னன்னு தெரியுமா?’

இனி மாயா – விக்ரம் விவகாரம் பற்றி பார்ப்போம்.

நீண்ட வாரங்களாக மாயா குழுவுடன் இணக்கமாக இருந்தவர் விக்ரம். பரஸ்பர ஆதாயங்கள் அதில் இருந்தன. அந்தக் குழுவினால் விக்ரம் காப்பாற்றப்பட்டுக் கொண்டு வந்தார். ஆனால் விக்ரமின் உறவினர்கள் வந்த பிறகு இந்த நிலைமையில தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விட்டது. ‘மாயா எப்படியெல்லாம் பின்னால் அவமதிப்பாகப் பேசுகிறார்’ என்பதை விக்ரமின் தங்கை அம்பலப்படுத்தி விட்டார். இதை மாயாவின் முன்னிலையிலேயே அவர் சொல்லி விட்டாரோ, என்னமோ. இதனால் மாயா அப்செட். தனிமையில் அழுகை.

தங்கை சொன்ன விஷயங்கள் விக்ரமிற்கு அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். எனவே அந்த வாரம் முழுக்க மாயாவுடன் பாராமுகமாக இருந்திருக்கிறார். இது மாயாவிற்கு கூடுதல் அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். எனவே அவருடைய கோபம் இன்னமும் அதிகரித்திருக்கிறது. அதே வாரத்தில் இருவருமே தனியாக அமர்ந்து பேசியிருக்க வேண்டும். இரண்டு பேருமே இதை செய்யத் தவறி விட்டார்கள். இதைத்தான் பூர்ணிமாவும் வலியுறுத்திக் கொண்டு வந்தார்.

பிக் பாஸ் ஆட்டம் என்பது யாராக இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்ள வைக்கும். மேலும் எடிட்டிங்கும் இதில் முக்கியப் பங்கு ஆற்றுகிறது. அடிப்படையில் இது ஒரு ரியாலிட்டி ஷோ. எனவே ஒவ்வொரு நாளும் சூடும் சுவையுமாக எபிசோடை சமைத்தாக வேண்டும். ஒருவரை வில்லனாகவும் இன்னொருவரை ஹீரோவாகவும் காட்டினால்தான் விறுவிறுப்பாக இருக்கும். இந்தக் கோணத்தில்தான் காட்டுவார்கள். இந்த விஷயத்தை உணராமல் பார்வையாளர்களே உணர்ச்சிவசப்படும் போது, உறவினர்களில் சிலர் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவே முடியாது. ஆனால் போட்டியாளர்கள் நிச்சயம் இதை உணர்ந்திருக்க வேண்டும். அந்த மனநிலையை ஏற்படுத்திக் கொண்டு ஆட்டத்திற்குள் நுழைந்திருக்க வேண்டும்.

Bigg Boss 7 Day 85

உண்மையான நட்பில் சந்தேகம் எளிதில் வராது

நமக்கு ஒரு நெருங்கிய நண்பர் இருப்பார். அவர் மீது நமக்கு உண்மையான பிரியம் நிறைய இருக்கும். அதே சமயத்தில் சின்னச் சின்ன நெருடல்களும் இருக்கும். ஏதோ ஒரு நிலைதவறிய தருணத்தில் அந்த நெருடல்களைப் பற்றி இன்னொருவரிடம் நீங்கள் சொல்லி விடுகிறீர்கள். இப்போது அந்த ‘இன்னொருவர்’ என்ன செய்கிறார் என்றால் நேரடியாக நண்பரிடம் சென்று “என்னப்பா… அவரு உன்னைப் பத்தி இப்படியெல்லாம் சொல்றாரு” என்று நெருடலை மட்டும் ஹைலைட் செய்து சொல்லி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இப்போது நண்பருக்கு பயங்கர ஷாக். நம் நண்பனா இப்படிச் சொல்லியது என்று அதிர்ச்சியடைந்து உங்களை வெறுக்கத் துவங்கினால் அவருக்கு முதிர்ச்சியில்லை என்றே பொருள். மாறாக, ‘என் நண்பன் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டான். சொல்லியிருந்தாலும் அதில் ஏதேனும் உண்மையிருக்க வேண்டும்’ என்று நிதானமாக இருந்து பிறகு உங்களிடம் அமர்ந்து பேசி தெளிவுப்படுத்திக் கொள்வதுதான் உண்மையான நட்பின் அடையாளம்.

பிக் பாஸ் வீடு இப்படியெல்லாம் ஒருவரைப் பேச வைக்கும் என்கிற நிதர்சனம் விக்ரமிற்கு இருந்திருக்க வேண்டும். தன் மீதுள்ள பாசத்தில் உறவினர் வந்து சொல்லியிருந்தாலும் அதை மனதில் தேக்கிக் கொண்டு மாயாவிடம் பிறகு தெளிவுப்படுத்தியிருக்கலாம். அவர் அதைச் செய்யவில்லை. போகட்டும். ஆனால் மாயா விக்ரமை விடவும் புத்திசாலி. இந்த ஆட்டத்தின் சூட்சுமம் அறிந்தவர். ஆனால் அவரே இதற்குப் பலியாகி விட்டதுதான் ஆச்சரியம். என்னதான் விக்ரம் துரோகம் செய்ததாக மாயா ஃபீல் செய்தாலும், விக்ரமின் திடீர் எலிமினேஷன் காரணமாக சிறிது அனுதாபத்தையும் பிரியத்தையும் காட்டியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறி விட்டதை எத்தனை விளக்கினாலும் நியாயப்படுத்த முடியாது.

விக்ரம்

இதையெல்லாம் நான் எதற்கு இத்தனை நீளமாக வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறேன் என்றால் இது மாயா – விக்ரம் பிரச்னை மட்டுமில்லை. நெருக்கமான நண்பர்களுக்குள் மிக மிக அற்பமான விவகாரம் உள்ளே புகுந்து அத்தனை கால நட்பையும் ஒரே நிமிடத்தில் சிதறடித்து விடும். இது வரலாற்றில் தொடர்ந்து நிகழ்கிற விஷயம். இது போன்ற சதிகளில் இருந்து முதிர்ச்சியாக அணுகி ‘நண்பேன்டா’ என்று தங்களின் நட்பைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் மிகச் சிலர்தான். மாறாக அற்ப விவகாரத்தின் நெருப்பில் நட்பைப் பலியாக்கிக் கொண்டவர்கள்தான் அதிகம். சற்று யோசித்துப் பார்த்தால் உங்களின் பட்டியலில் இவ்வாறு எத்தனை பேரின் நட்பு போயிருக்கும் என்பதை சுயபரிசீலனையுடன் அணுகலாம்.

‘True friends are never apart, maybe in distance but never in heart.’

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours